Wednesday, January 9, 2019

மகா பெரியவரின் மணிமொழிகள்

(My sincere thanks to Mr. Sri Hari , my Son-in-law for posting these daily in our Whatspp Group.  I have jsut copied them over here with relevant pictures of Maha Periyava.)

     1. நாகரிக வியாதிக்கு மருந்து 

     மஹா பெரியவா அருளுரைகள்
தெய்வத்தின் குரல்

இரண்டு கட்சிக்காரர்களின் இழுப்புக்கு நடுவே ஜனங்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரங்களின் வழியிலேயே போக வேண்டும் என்று சொல்கிற நாங்கள் ஒரு பக்கம் இழுக்கிறோம்; சாஸ்திரங்களை மாற்ற வேண்டும் என்கிற ‘சீர்திருத்தக்காரர்கள்’ இன்னொரு பக்கம் இழுக்கிறார்கள். நவீனப் படிப்புமுறை காரணமாகச் சிறு பிராயத்திலிருந்தே சீர்திருத்தங்கள் எனப்படும் மாறுதல்களை சிலாகித்துத்தான் ஜனங்கள் படித்திருக்கிறார்கள். படிப்பு இப்படி இருந்தாலும், பழக்கம் அடியோடு போகவில்லை. யுகாந்திரமாக வந்துள்ள நமது சாஸ்திர தர்மங்கள் துளித்துளி எல்லார் வீட்டிலும் சமூகத்தில் பழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பழக்க வாசனை ஒரு பக்கமும், ஜனங்களை இழுக்கின்றன. இப்போது ஏற்படுத்திக் கொண்ட நாகரிக வாழ்க்கையில் திருப்தி இல்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது. பழைய காலத்தில் இருந்த நிம்மதி இன்று இல்லை என்று அனைவருக்கும் சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. இப்போது முன்னைவிட அதிகப் பணம் இருப்பதாக பாவனை இருந்தாலும், தரித்திரம் போகவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ‘எல்லாம் சுபிக்ஷமாயிருக்கிறது; நம் தேவைக்கு அதிகமாகவே தானியம் விளைந்திருக்கிறது’ என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எங்கே பார்த்தாலும் திகில் போகவில்லை. முன்னே இருந்த கூரை அல்லது ஓட்டுவீடு இப்போது மாடிக் கட்டிடமாகி விட்டது. அப்போதெல்லாம் ஏதோ நாலைந்து பாத்திரங்கள், பனைமட்டைப் பெட்டி, சுரைக்குடுக்கைகள் இவை மட்டுமே வீட்டுக்குவீடு இருந்தனவென்றால், இப்போது ஏராளமாக பண்டங்கள் வந்து நிரம்பிவிட்டன. இவையெல்லாம் நாகரிக வாழ்க்கையில் வந்தவைதான். ஆனாலும் அன்று இருந்த நிம்மதி இன்று இல்லவே இல்லை என்று தெரிகிறது.
பழைய ஆசாரப்படி நிம்மதியாக வாழ வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே நினைக்கிறார்கள். ஆனால் வெளியிலே நாகரிகத்தையும், சீர்திருத்தப் பெருமையையும் விடுவதற்குத் துணிச்சல் இல்லை. இரண்டு வழியிலும் சேராமல் சங்கடப்படுகிறார்கள். இந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்; அநேகமாக எல்லாவீடுகளிலும் காந்தியின் படமும் இருக்கிறது. என் படமும் இருக்கிறது. ஆனால் காந்தி சொன்னாரே என்பதற்காக விதவா விவாஹம் பண்ணிக் கொள்கிற துணிச்சலும் முக்காலே மூணு வீசம் பேருக்கு வரவில்லை; நான் சொல்கிறேன் என்று குடுமி வைத்துக் கொள்கிற துணிச்சலும் இல்லை. பாவம்; ஜனங்கள் நிலை தெரியாமல் இரண்டுக்குமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். உறுதி வேண்டும்; சாஸ்திரத்தில் தளராத பிடிப்பு, தைரியம் அவசியம் வேண்டும்.
சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது என்று வந்தால்கூடத் கடைசியில் வெறும் லௌகிக சௌகரியத்தை மட்டும் அநுசரிக்கும்படித்தான் ஏற்பட்டுவிடும். சிலர் நல்லெண்ணத்துடனேயே என்னிடம் வந்து, “தர்ம சாஸ்திரங்களை ரிஷிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீங்களும் ரிஷி மாதிரி இருக்கிறீர்கள். அதனால் காலத்துக்குத் தகுந்தபடி சாஸ்திரங்களை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கேட்கிறார்கள். வயலில் களை எடுப்பதுபோல இப்போது கால நிலையை அநுசரித்துச் சில ஆசார தர்மங்களை எடுத்துவிட வேண்டும் என்பது இவர்கள் அபிப்ராயம். இப்போது சிலவற்றைக் களை என்று நினைத்து நான் எடுத்தால், இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பின் இன்னொருத்தர் வேறு சில ஆசாரங்களைக் ‘களை’ எடுக்கலாம். இப்படியே போய்க்கொண்டிருந்தால், எது பயிர், எது களை என்கிற வியவஸ்தை இல்லாமல் வயல் முழுவதுமே போய்விடும்.
ரிஷிகள் ஏதோ சொந்த அபிப்பிராயத்தில் சொன்னார்கள் என்பதற்காக தர்ம சாஸ்திரத்தை நாம் அநுசரிக்கவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். என்றைக்கும் மாறாமல் சாசுவதமாக இருக்கும் ஈசுவர ஆக்ஞையான வேதத்தை அநுசரித்தே ரிஷிகள் இந்த விதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதால்தான் இவற்றைப் பின்பற்றுகிறோம். அதை உள்ளபடி ரக்ஷிக்கத்தான் பிரயத்தனப்பட வேண்டுமேயன்றி, மாறுதல் செய்வதற்கு என்று அதிகாரம் இல்லை.
சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகிக நாகரிகத்தை விட்டுவிட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்கவேண்டியதில்லை. பணத்துக்காக பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்; வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.
கர்ம அநுஷ்டானங்களைப் செய்யப் பணவசதி வேண்டியதேயில்லை. ஆடம்பரமாக செலவு செய்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும், வில்வ பத்திரமும் பூஜைக்கு போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தையே நைவேத்தியம் என்று காட்டினால் போதும். ‘விவாகமும் சாஸ்திர அநுஷ்டானம்தானே? அதற்கு ஏகமாகச் செலவாகிறதே!’ என்று கேட்கலாம். ஆனால் இப்போது நடக்கிற ஆடம்பரம் எதுவுமே சாஸ்திர சம்மதமான விவாகத்துக்குத் தேவையில்லை. குறிப்பாக, இப்போது விவாகங்களில் மிகப் பெரிய செலவாக உள்ள வரதக்ஷிணைக்குச் சாஸ்திர சம்மதமே இல்லை. சாஸ்திர சம்மதமான கர்மங்களுக்குப் பணம் முக்கியமாக இருந்தால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் நம் மதம் உரித்தானது என்றாகிவிடும். உண்மையில் அப்படி இல்லவே இல்லை.
அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நாலு வாழ்க்கைப் பயன்களில் இன்பத்தை மட்டும் தேடி அதற்காகப் பொருளுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். இதை மாற்றி வீட்டுக்காக (மோக்ஷத்துக்காக) அறத்தின் (தர்மம்) மூலம் பாடுபட வேண்டும். வாழ்க்கையை எளியதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டாம்; அறங்களை அப்போது பின்பற்ற முடியும். அறத்தின் பயனாகக் கிடைக்கிற பேரானந்த வீட்டையும் பெறமுடியும்.


2.  வேத ரக்ஷணம்
மஹா பெரியவா அருளுரைகள்


“பாரம்பரியமாகத் தொழிலைப் பிரித்துக் கொண்டு செய்வதில் சமுதாயம் முழுவதற்கும் ரொம்பவும் அநுகூலம் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், பிராமணன் என்று இருக்கிறவன் செய்ய வேண்டிய தொழில் வேத ரக்ஷணமென்றால் இதனால் சமூகத்துக்கு என்ன க்ஷேமம்?” என்ற கேள்வி எழுகிறது.

குயவன் பானை செய்கிறான்; வண்ணான் துணி தோய்க்கிறான்; நெசவாளன் துணி நெய்கிறான்; இடையன் பால் கொடுக்கிறான்; குடியானவன் உழுகிறான். இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று செய்கிறார்கள். இந்தக் காரியங்கள் எல்லாம் ஜனங்களின் அன்றாட வாழ்வுக்கு அவசியமாகி இருக்கின்றன. இவற்றின் பலனை அவர்கள் பிரத்யக்ஷமாக அனுபவிக்கிறார்கள். உழுத நெல்லைச் சாப்பிடுகிறார்கள். பசி தீருவதற்கு அது அவசியமாக இருக்கிறது. நெய்த துணியை உடுத்திக் கொள்கிறார்கள். மானத்தைக் காப்பாற்ற, குளிர், வெயிலிருந்து சரீரத்தைக் காப்பாற்ற அது தேவையாக இருக்கிறது. பால் குடிக்கிறார்கள். மோராக்கிச் சேர்த்துக் கொள்கிறார்கள். பானையை அடுப்பில் ஏற்றிச் சமைக்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறைக்குப் பிரயோஜனமாகிற வஸ்துக்களை மற்ற ஜாதிக்காரர்கள் தருகிறார்கள். பிராம்மணன் என்ன தருகிறான்? வர்ண தர்மத்தை நிலைப்படுத்தியிருக்கிற சாஸ்திரங்கள் அவனுக்கு எந்தத் தொழிலைத் தந்திருக்கிறது?

பிராமணன் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ண வேண்டும். அதாவது அத்யயனம் செய்ய வேண்டும். அதேமாதிரி இன்னொருத்தனுக்கு அதை வாயால் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது அத்யாபனம் செய்ய வேண்டும். அத்யயனம்: தான் வேதம் ஓதுவது. அத்யாபனம்: இன்னொருத்தனுக்கு வேதத்தை ஓதுவிப்பது; இதோடு பிராமணன் வேதத்தில் சொல்லியிருக்கிற நித்ய கர்மாநுஷ்டானங்களையும் யாக யக்ஞாதிகளையும் செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் இவனுக்குரிய தொழிலை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

வேதத்தின் அர்த்தம் ரொம்ப உயர்வானது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாலாவது நவீன காலத்தவர்களுக்கு ஒப்புக் கொள்ளலாம் என்று தோன்றும். ஜன சமூகத்துக்கு அறிவு, கலை எல்லாம் வேண்டும். வேதம் நிறைய அறிவைத் தருகிற வஸ்து என்பதால், அதன் அர்த்தத்தைச் சிலர் சமூகம் முழுவதற்கும் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆனால், சாஸ்திரம் இப்படிச் சொல்லாமல் பிராமணனாகப்பட்டவன், “வேதத்தின் சப்தத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஜன சமூகம் முழுவதற்கும் அதைக் கொடுத்து ரக்ஷிக்க வேண்டும்” என்கிறது. அர்த்தத்தை எல்லோரும் அறியப் பண்ண வேண்டும் என்றால் அதில் லோகக்ஷேமம் தெரிகிறது. நேர்மாறாக சப்தத்தைச் சிலர் மட்டும் வைத்துக் கொள்வதால் லோகக்ஷேமம் என்றால் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

தொடரும் ...

3  வேத நம்பிக்கை

மஹா பெரியவா அருளுரைகள்

மற்ற தொழில்கள் நின்று போனால் சமூகம் பாதிக்கப் படுவதுபோல், வேத அத்யயனம் நின்றால் எப்படிப் பாதிக்கப்படும் என்று தெரியவில்லை.

இது புரிய வேண்டுமென்றால் வேதம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விஷயத்தை முழுக்க அறிவினால் ஆராய்ந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அநுபவஸ்தர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு.

இப்படிச் சொன்னவுடனேயே ஆக்ஷேபனை வந்துவிடக் கூடும். ‘அதெப்படி சார்? நாங்கள் பகுத்தறிவாளிகள் (rationalists). முழுக்க எங்கள் அறிவுக்குள் அகப்படுகிறது என்றால் தான் ஏற்றுக் கொள்வோம்’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? எல்லா விஷயங்களுமே மனுஷ்ய அறிவுக்குள் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று எப்படி உரிமை கொண்டாடலாம்? எத்தனையோ ஜீவராசிகளில் இவன் ஒருத்தன். இவனுடைய லாபரட்டரியில் நடக்கிற காரியங்கள் ஒரு மாட்டின் அறிவுக்குப் புரியுமா? “என் புத்திக்குப் புரியாததால் இந்த பௌதிக விதிகள் (Laws) இருக்கவே முடியாது” என்று மாடு சொல்லலாமா? மாடு வரைக்கும் போக வேண்டாம்; மநுஷ்யர்களிலேயே ஃபிஸிக்ஸ் படிக்காதவர்களுக்கு அவை எப்படிப் புரியும்? ஆனால், அதை நன்றாகப் படிப்பவர்கள் சொல்வதால், படிக்காதவர்களும் நம்புகிறார்கள். அவர்கள் செய்கிற உபகாரணங்களால் பிரத்யக்ஷமாக நடக்கிற காரியங்களைப் பார்த்து விதிகளை எல்லாருமே ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியே சாஸ்திரத்தை அநுஷ்டித்தவர்கள் வேதத்தைப் பற்றிச் சொல்வதை நம்ப வேண்டும். இதுவரைக்கும் அது பிரத்யக்ஷமாகத் தந்திருக்கிற பலன்களிலிருந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய பிரத்யக்ஷ பலன் இதுவரை ஹிந்து சமூகம் எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தாக்குப்பிடித்து விழாமலே இருக்கிற ஒரே பழைய மதம் என்பதும், இந்த மதத்தில்தான் லோகத்துக்குள்ளேயே, மிக அதிகமான மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதுமேயாகும். “எங்கள் அறிவுக்குள் வரவேண்டும்” என்று ஜனங்கள் சொல்லாமல் நம்பி ஏற்றதாலேயே, இதுவரை சிரேயஸை அடைந்து வந்திருக்கிறார்கள்.

“மனுஷ்ய அறிவின் எல்லையை மீறி அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் லோகத்துக்கு வந்திருக்கின்றன” என்பது அடிப்படைக் கொள்கை. அம்மாதிரி மனுஷ்யர்கள் ஆத்ம சக்தி பெறவே முடியாது என்று சொல்லிவிட்டால், ‘அப்புறம் பேச்சே இல்லை. பிரத்யக்ஷமாக இருக்கிற மகான்களையும், ஸித்திமான்களையும் வேண்டுமானால் சுட்டிக்காட்டி, இவர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சக்திகள் இருக்கிறதே, இதைப் பார்த்தாவது நம்புங்கள்’ என்று சொல்லலாம். ‘அவர்கள் செய்வதெல்லாம் மோசம், ஏமாற்று வித்தை’ என்று பதில் சொல்லிவிட்டால் பிறகு பேச்சில்லை. இப்போது நாம் இருக்கிற நிலையில் நம் புத்திக்கு என்ன எட்டுகிறதோ அதற்கு மேற்பட்டதாக எதுவும் இருக்க முடியாது என்பதேதான் ரொம்பவும் பகுத்தறிவற்ற வாதமாயிருக்கிறது. இதை அப்படிச் சொல்பவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.


4  மாயை என்பது என்ன?.

மஹா பெரியவா அருளுரைகள் 

‘எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை’ என்று பௌத்தம் சொல்கிற மாதிரி அத்வைதம் சொல்லவில்லை. ‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்கிறது அத்வைதம்.

“உலகத்தை மாயை என்று சொல்கிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார்கள்.

மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல. முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று சொன்னால் உடனே அது அடியோடு இல்லாத வஸ்து என்று தள்ளி விடுகிறோம். மாயை அப்படி இல்லை. அது இருப்பதாக நினைக்கிற மட்டில் இருப்பதாகவே தோன்றும். அது முயல் கொம்பு மாதிரி இல்லை. கானல் நீர் மாதிரியானது. கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் ஜலம் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் உண்மையான ஜலம் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அவ்விதமே உலகை மாயம் என உணர்த்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது என்று சொல்வதுண்டு. ஆனால் அது நிரந்தர சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.

ஒரு பழுதையைப் பாம்பென்று தவறாக எண்ணுகிறோம். பழுதையில் பாம்பு இல்லை என்பது உண்மை. இருந்தாலும்கூட அதைப் பாம்பாக எண்ணியமட்டும், வாஸ்தவத்தில் இல்லாத பாம்பே நிஜமான பாம்பு உண்டாக்குகிற அத்தனை பயத்தையும், பதற்றத்தையும் நம்மிடம் உண்டாக்கி விடுகிறது. பாம்பு மெய்யாக இல்லாத போதிலும் நமக்கு வியர்த்து விறுவிறுத்ததும், நாம் பயப்பிராந்தி அடைந்ததும் உண்மையே. உலகம் உண்மையில் நிரந்தர சத்தியமாக இல்லாதபோதிலும் அதையே நாம் சத்தியமாக எண்ணுகிற மட்டில் இவ்விதமே சகல காரியங்களும் நடக்கின்றன. பழுதையைப் பழுதை என்று தெரிந்து கொண்டவுடன் பயம் ஓடிப்போவதுபோல், உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே, அதற்கும் ஆதாரமான பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகிறபோது, காரியங்கள் எல்லாம் நின்றுபோகின்றன.

அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றம் அது. கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்டபின் கனவு நசித்துப்போவது போல், நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தை ‘அத்யந்த அஸத்’ என்று சொல்லாமல், ‘பிராதி பாஸிக ஸத்தியம்’ என்பார்கள். கிளிஞ்சலில் வெயில் வெள்ளி மாதிரி மினுமினுப்பதுபோல் பிரம்மத்தில் மாயையால் உலகம் தாற்காலிகமாக மினுமினுக்கிறது!

மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zero) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்தப் பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவதுபோல் இந்த அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய வஸ்துக்களாக—உலகமாக—தோன்றுகிறது.

ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான்.ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால்,  விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஓடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு. ‘நமக்குக் கறுப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு’ என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மத்தைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே !


5.  ஞானி யார் ?

 மஹா பெரியவா அருளுரைகள் 


நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று இத்தனை யாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும். ஒரே வஸ்து என்றபின் சஞ்சலிக்கவோ ஏற்றத்தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.

உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து உண்டாகும். ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால்தான் உலகத்தில் எவனுமே,தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை; ஆனால், சித்தப் பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.


6 வேத மதம்

மஹாபெரியவா அருளுரைகள்.

நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. ‘இதை ‘இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதந்தான் என்று சொல்வதா?’ என்று சந்தேகம் வரும்.

கிறிஸ்துவ மதத்திலும் காத்லிக், ப்ராடெஸ்டன்ட் என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.

இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசாரிய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல. விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்பிராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்’ என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

‘அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப் புஸ்தகமாவது இருக்கிறதா?’ என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும் குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிரமாண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?

நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!

அப்படியானால், நமக்கு ஒரு மதமா, இரண்டு மதமா? வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே, சைவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே என்று சொன்னாலும் உண்மை அப்படி அன்று. இப்போது இருக்கிறவர்களுடைய மனோபாவத்தைக் கவனித்தால் அது வேறு மதம், இது வேறு மதம் என்று சொல்லக்கூடிய ஹேது வளர்ந்திருக்கிறதே தவிர, அவர்களுடைய முதல் நூல்களைப் பார்த்தோமானால் உண்மை தெரியவரும். சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற இரண்டையும் பாடினவர்கள் தங்களது நூலே “முதல் நூல்” என்று சொல்லவே இல்லை; நினைக்கவே இல்லை. அவர்கள் தங்களை மதஸ்தாபகர்களாகவும் நினைத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் காலத்துக்கு முந்தியே ஒரு மதம் இருந்திருக்கிறது. ஆழ்வார்கள் பாடுவதற்கு முந்தி வைஷ்ணவம் இருந்திருக்கிறது. நாயன்மார்களுக்கு முந்தியும் சைவம் இருந்திருக்கிறது. இவற்றுக்கு முதல்நூல் எது என்று பார்த்தால் மறைகள்தாம்: அதாவது வேதங்களே. சைவர்கள் ஈசுவரனையே,

‘வேதமோ டாறங்க மாயி னானை’
‘வேதநாதன், வேத கீதன், ஆரணன்காண்’

என அநேக இடத்தில் சொல்கிறார்கள். வைஷ்ணவ நூல்களிலும் இப்படித்தான், ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதை நாம் சரியாகக் கவனித்தால், இவ்விருவர்களுக்கும் மூலப் புஸ்தகம் ஒன்றே என்பது தெளிவாகும். இப்போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் முக்கியமாக இருக்கிற தேவாரமும், பிரபந்தமும் ஒரே பொது மூலமான வேதத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய மகான்கள் எங்கு பார்த்தாலும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள். எந்த க்ஷேத்திரத்தை வர்ணித்தாலும் ‘அங்கே வேத ஒலி மிகுந்திருந்தது; ஹோமப் புகை மிகுந்திருந்தது; வேதம், அதன் அங்கங்கள் எல்லாம் தழைத்திருந்தன’ என்று பரவசமாகச் சொல்கிறார்கள். ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.

வேதம் ஒரே தத்துவத்தைப் பல மூர்த்திகளாக்கித் தந்திருக்கிறது. வேதம் என்ற நதியில் இந்த ஒவ்வொரு மூர்த்தி வழிபாடும் ஒரு துறை மாதிரி, ‘வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க’, என்று இதையே சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார்.

இப்படியே சாக்தம், காணபதம் (பிள்ளையார் உபாஸனை), கௌமாரம் (முருகன் வழிபாடு), ஸௌரம் (சூரியனையே பரமாத்மாவாக உபாஸிப்பது) முதலான எதை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதார நூல்களில், இந்த வழிபாட்டுக்கு ஆதாரம் வேதத்திலேயே இருக்கிறது; ‘எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்’ என்றே சொல்லியிருக்கும்.

ஆக ‘ஹிந்து’ மதம் என்ற பெயருக்குள் உள்ள அத்தனை பிரிவுக்கும் ஆதாரமான நூல் ஒன்றே என்றாகிவிட்டது.

அந்த ஆதாரமான வேதத்தில், சைவ-வைஷ்ணவ-ஸ்மார்த்த சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லோரும் தசோபநிஷத்துக்கள் என்கிற பத்து உபநிஷதங்களுக்குப் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். இந்த உபநிஷதங்களுள் பிரம்மம் ஒன்றே ஸ்வாமி என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கே ஓரிடத்தில், கடோபநிஷத்தில் விஷ்ணு என்றும், இன்னோரிடத்தில் மாண்டூக்ய உபநிஷத்தில் சிவம் என்றும் பெயர் சொல்லியிருக்கிறது. வேத சம்ஹிதைகளில் வருகிற மித்ரன், வருணன், அக்னி, இந்திரன் முதலான அத்தனை தெய்வங்களும்கூட இந்த சத்தியத்தின் பல பேர்கள்தான் என்றும் அதே வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி)

ஆனபடியால், நம் மதத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் பொதுப் புஸ்தகம், பொது ஸ்வாமி இரண்டும் இருப்பதாக ஆகிவிட்டது. பொதுப் புஸ்தகம் வேதம், பொது ஸ்வாமி பிரம்மம். எனவே, சந்தேகமில்லாமல் நாம் எல்லாரும் ஒரே மதந்தான் என்று தீர்மானமாகச் சொல்லிக்கொள்ளலாம்.

அந்தப் பொது ஸ்வாமியையும் நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது பொதுப் புஸ்தகமான வேதம்தான். ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்திருப்பதோடு, ஆசாமிகளான நாம் எப்படி வாழ்க்கை நடத்தி முடிவில் அந்த ஸ்வாமியாகவே ஆகவேண்டும் என்பதற்கும் நமக்கு வழிகாட்டிப் பரமோபகாரம் செய்வது இந்த வேதம்தான். இகம், பரம் இரண்டுக்கும் அதுதான் நமக்குக் கதி; அதுதான் இத்தனை சம்பிரதாயங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் மூலம், வேர். நம்முடைய மதப்பிரிவுகள் எல்லாம் வேதத்திலிருந்தே வந்தவை. வேர் ஒன்று; கிளைகள் பல.

7.  எழுதாக்கிளவி

 மஹாபெரியவா அருளுரைகள்.

ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும். அந்த மூலத்தை மங்காமல் ரக்ஷிக்க வேண்டும் என்பதே நம்முடைய தலையாய கடமை

கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.

பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம் |
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம் ||

கரிகாலன் இதில் தன்னை ‘அரிகாலனாகிய கரிகாலன்’ என்கிறான். ‘அரி’ என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன்தான் ‘அரிகாலன்’. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்? வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும்தான் அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.

பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வளர்த்தார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. ‘வழுதி’ என்றால் பாண்டியராஜா. பிற்காலத்திலும் கல்வெட்டுகளில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத ‘இறையிலி’ யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் ‘சதுர் வேதி மங்கலம்’ என்ற பெயரில் உள்ளன.

வெளிதேசத்து விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் பாஷையில் வார்த்தையிருப்பதில்லை. வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.

வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிறமாதிரி தமிழ் நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வந்தவை என்றால், யாகம், வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே ‘வேதம்’ என்பது ‘மறை’ என்றும், ‘யாகம்’ என்பது ‘வேள்வி’ என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை சமஸ்கிருத பண்டிதர்கள் – தமிழ் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொள்வார்கள். வேட்டலிலிருந்து ‘வேள்வி’ வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம், வேரைப் போலவே வெளியில் தெரியாமல், அதாவது எல்லாரிடமும், புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்து இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தைதான் மறை. வைதிகப் பண்பாடும், யக்ஞ அநுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப் போயிருந்தாலொழிய, அந்த நாகரிகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாக்கியிருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறைத் தத்துவமாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே கற்க வேண்டும் என்பதால் தமிழில் ‘எழுதாக் கிளவி’ என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியிலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்கு ஸம்ஸ்கிருதத்திலும் “ச்ருதி” என்று பேர். ‘மறை’ என்பதைப் போல் வேத ரக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கிற நேர் வார்த்தை ஸம்ஸ்கிருதத்திலேயே இல்லை.


8. வைதீக அனுசரணை

 மஹாபெரியவா அருளுரைகள்.

வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு ‘ஷடங்கங்கள்’ என்று பெயர். அதிலிருந்துதான் மத சம்பந்தமான எந்தக் காரியத்தையும் ‘சடங்கு’ என்று சொல்கிற வழக்கம் வந்திருக்கிறது, வைதிக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே, மூதாதைகளைத் ‘தென்புலத்தார்’ என்கிறார்.

இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞையாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்குதான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போகும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்குதான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான்.

திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தாலும், ‘வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பௌழியன் காண்’ என்றெல்லாம் வேதங்களையும் அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவானைத் துதிக்கிறார்கள். க்ஷேத்திர வர்ணனைகளிலெல்லாம்,ஊர் முழுக்க ஹோமப் புகை சூழ்ந்திருந்தது. வேத சப்தம் ஒரே கோஷமாகப் பரவியிருந்தது என்று அவர்கள் சொல்லாமலிருப்பதில்லை.

இந்தத் தமிழ் நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்ச நஞ்சமில்லை. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.

இப்போதும்கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்ராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவேயில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். அவர்களுடைய அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அநுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரக்ஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.


9.  வேத மொழியின் பெருமை

 மஹாபெரியவா அருளுரைகள்.

பாஷையை வைத்துக் கொண்டு, ‘இது என் பாஷை, அது உன் பாஷை, இந்த பாஷை தான் உயர்ந்தது. அந்த பாஷை தான் உயர்ந்தது’ என்று இப்போது பலர் சண்டை போடுவதைப் பார்த்தால் மிகவும் துக்கமாக இருக்கிறது. நாம் எல்லோரும் ஊமையாகப் போனால் தேவலை என்றுகூடத் தோன்றுகிறது. நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இருக்கும் கருவி பாஷை. அது எல்லா ஊரிலும் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொரு கூட்டம் ஒவ்வொரு பாஷையைப் பேசும். ஒவ்வொரு சீமையிலும் ஒரு பாஷை இருக்கும். எனவே, ‘இது என் பாஷை’ ‘அது உன் பாஷை’ என்பதும் ‘இது உசத்தி, அது தாழ்த்தி’ என்று சண்டை பிடிப்பதும் அர்த்தமில்லாத காரியம். ‘தெரிந்த பாஷை, தெரியாத பாஷை’ என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, ‘என் பாஷை, உன் பாஷை’ என்பதே தப்பு. பாஷையால் சண்டை என்பது பெரிய தப்பு. மதத்தைக் காட்டிலும் ஸ்வாமியைக் காட்டிலும் பாஷைதான் உயர்வென்று நினைப்பது மிகவும் தப்பு. பாஷை என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் ஸம்ஸ்கிருதம் வேண்டுமா என்றால் நான்கூட வேண்டாம் என்றே சொல்வேன். ஆனால் நம்முடைய மதத்துக்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் அந்தப் பாஷையில் இருப்பதனால் வேதத்தையும் சாஸ்திரங்களையும் ரக்ஷிப்பதற்காக சம்ஸ்கிருத பாஷையையும் ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்கிறேன்.

திருவள்ளுவர் குறளை எழுதி அதை அரங்கேற்ற மதுரைக்கு வந்தார். பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை இருந்தது. திருவள்ளுவர் தம் புத்தகத்தைக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்தாராம். குட்டைப் புத்தகம் அது. அதுமாத்திரம் பலகையில் இருக்கப் புலவர்கள் எல்லோரும் குளத்தில் விழுந்து விட்டார்களாம். குறள் அங்கே அரங்கேற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் இன்னார் பண்ணினார், இதில் இன்ன உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று அதைப் பற்றிப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். “திருவள்ளுவ மாலை” என்று அதற்குப் பெயர். அதில் ஒருவர் பாடுகிறார்;

ஆரியமும் செந்தமிழும் ஆராயத் திதனினிது

சீரிய தென்றொன்றைச் செப்பரிதாம்-ஆரியம்

வேதம் உடைத்து தமிழ்திருவள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து

“ஸம்ஸ்கிருதம் உயர்வா? தமிழ் உயர்வா?” என்று யோசனைப் பண்ணிப் பார்த்தேன். “ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம்தான். ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ் மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம்! திருக்குறள் வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே இப்போது இரு பாஷைகளும் சமமாயின” என்று இச்செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார்.

ஸம்ஸ்கிருதத்துக்கு எதனால் கௌரவம்? வேதம் அதில் இருபதனால்தான் என்பதை அந்தப் புலவர் சொல்லியிருக்கிறார்.

‘வேதம் ஸம்ஸ்கிருதத்தில் இருந்தால் என்ன மொழி பெயர்த்துவிடலாமே’ என்று நினைக்கலாம். பல நூல்கள் அப்படி இந்தக் காலத்தில் மூல பாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமே உருமாறிப் போவதுமுண்டு. ஒரு விஷயத்தை ஒரு மனிதன் சொன்னால், அது அவனிடமிருந்து எந்த வாக்கில் வருகிறதோ அதே வாக்கில் இருந்தால், ஒரு காலத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு காலத்தில் அதன் உண்மைப் பொருளை முழுவதும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பொருளைச் சொல்வதற்கு ஒரு பாஷையில் அழகான சொல் ஒன்று இருக்கும்.. அதை மொழி பெயர்க்கும்போது, அதற்கு ஏற்ற சொல் இதர பாஷையில் இருக்காது. சில சமயங்களில் நான்கைந்து வார்த்தைகளைப் போட்டுச் சுற்றிவளைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வார்த்தை அந்த இடத்தில் எந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே அபிப்பிராயத்தை மொழி பெயர்ப்பில் காணமுடியாமல் போகலாம். இரண்டாவது, மொழி பெயர்க்கிறவன் தன்னுடைய ஞானத்துக்கு ஏற்றாற்போலத்தான் பொருள் பண்ணிக் கொண்டு சொல்ல முடியும். ஒருவன் பண்ணிய மொழி பெயர்ப்புச் சரி அல்ல என்று இன்னொருவன் எண்ணுவான். பண்ணுகிறவனுடைய அபிப்பிராயத்துக்கும் பாஷா ஞானத்துக்கும் ஏற்றபடி அந்த மொழி பெயர்ப்பு இருக்கும். இப்படியாக பல மொழிப்பெயர்ப்புகள் ஏற்பட்டு, அவற்றில் எதை எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் வரும்போது, மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டிவரும்.

ஆகவேதான் மூலமாகிய வேதத்தை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தைத் தங்கள் கருத்தின்படி பொருள் கொண்டு ஒவ்வோர் ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆசாரியர்கள் தத்தம் சித்தாந்தங்களையே ஆதாரமாகக் கொண்டு மூலவேதத்தை மாற்றி வெவ்வேறு மதங்களைச் செய்துவிடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது. மூலம் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இருந்து கொண்டிருப்பதால்தான், அந்த அந்த ஆசாரிய புருஷருக்கு ஏற்றபடி காலத்துக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து வந்திருக்கிறது. ஆதாரமான வேதத்தை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு, அதை ரக்ஷித்து வந்தால்தான் அந்தந்த ஆசாரியரின் புது அபிப்பிராயமானது இன்னொரு தனி மதமாகப் போகவேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. இந்த மதங்களுக்கெல்லாம் வைதிக மதம் என்ற பொதுப் பெயர் இருந்து கொண்டிருக்கிறது.


10. தர்மம் எது ?

 மஹாபெரியவா அருளுரைகள்


 தர்மம் என்பது உலக க்ஷேமத்துக்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல், சமஸ்த பிராணிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். தர்ம சாஸ்திரங்கள், இன்னது தர்மம் என்று தீர்மானம் பண்ணுபவை. ரூபத்தை அறிவதற்குப் பிரமாணம் கண்; சப்தத்தை அறிவதற்குப் பிரமாணம் காது, தர்மப் பிரமாணம் என்ன எனில் தர்ம சாஸ்திரப் பிரகாரம் செய்வதேயாகும்.

சகல தர்மத்துக்கும் மூலம் வேதம். அதை ‘ச்ருதி’ என்பார்கள். (எழுதிப் படிக்காமல் காதால் கேட்டுப் பாடம் பண்ணுவதால் இப்படிப் பேர்). ச்ருதிக்கு அப்புறம் ஸ்மிருதி; ஸ்மிருதி என்பது வேதத்தின் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் குறித்த குறிப்பு (Notes) தர்ம சாஸ்திரம் என்பது இதுவே.

அந்த ஸ்மிருதிக்கு அப்புறம் பிரமாணமாக இருப்பது பெரியவர்களுடைய நடத்தை. பெரியவர்கள் எப்படி நடந்தார்கள் என்பது புராணங்களால் நமக்குத் தெரிய வருகிறது. அதற்கப்புறம் நமக்குத் தெரிந்து சிஷ்டராக இருப்பவர்களின் நடத்தை. சிஷ்டாசாரம் என்று அதைச் சொல்லுவார்கள். எல்லோருடைய நடத்தையும் பிரமாணமாகாது. நம்மிடையே வாழ்பவரில் எவரது நடத்தை தார்மிக விஷயங்களில் பிரமாணமெனில், அவருக்கு சாஸ்திர நம்பிக்கை இருக்க வேண்டும்; சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களை அவரே வாழ்வில் அநுசரிக்க வேண்டும்; காமக் குரோதம் இல்லாதவராக இருக்க வேண்டும் – இப்படிப்பட்ட சிஷ்டர்களுடைய ஆசாரம் ஒரு பிரமாணம். அதற்கப்புறம் நம்முடைய மனசாட்சி (conscience). நம்முடைய மனசு நிஷ்களங்கமாக எப்படி ஆலோசிக்கிறதோ அது ஒரு பிரமாணம்.

ஆகவே, ஆத்மிக, தார்மிக மத விஷயங்களில் பிரமாணங்களைக் கொள்ளும் முறையில் முதலில் வேதம் இடம்பெற வேண்டும். அப்புறம் தர்ம சாஸ்திரத்தைக் கொள்ள வேண்டும். அப்புறம் பூர்வகால ரிஷிகள் முதலியவர்களின் நடத்தை. பின்பு இப்பொழுதுள்ள சிஷ்டர்களின் ஆசாரத்தைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். இவைகளுக்கெல்லாம் அப்புறம் கடைசிப் பக்ஷமாகத்தான் சாஸ்திர விஷயங்களில் மனசாட்சியைப் பிரமாணமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. முதலில் மனசாட்சியைத்தான் பார்க்கிறார்கள். கடைசியில்தான் வேதத்தைக் கவனிக்கிறார்கள். நியாயப்படி வேறு ஒரு மார்க்கமும் இல்லாதபோதுதான் மனசாட்சியை அநுசரிக்க வேண்டும். மனசாட்சி என்று ஏன் அதற்குப் பெயர் வந்தது? சாட்சி சொல்லத்தான் யோக்கியதை உடையது. நியாயாதிபதியாக (judge) இருக்க அதற்கு யோக்கியதை இல்லை. சாட்சியாக வந்தவன் வாயால் பொய்யைச் சொல்வான். அதனால் வாய்சாட்சியை நம்புவதற்கில்லை. ஆனால், மனம் பொய் சொல்லாது. மனசுக்கு எல்லாம் நிஜமாகத் தெரியும். “நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை” என்று அவ்வைப் பாட்டி சொன்னாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம். இப்பொழுது மனசாட்சியை தர்ம விஷயங்களில் ஜட்ஜாகவே வைத்து விடுகிறார்கள். இன்னது நடந்தது என்பதை நிஜமாகவே அது சொல்லும். இதுதான் நியாயம் என்று அதனால் தீர்மானித்துச் சொல்ல முடியாது. தான் நினைப்பதை சரி என்று எப்படியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக் கொள்வதே அவரவர் மனசும் செய்கிற முடியாக இருக்கும். இது எப்படி தர்ம நியாயமாகும்? எனவே, ‘மனசாட்சிக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன்’ என்று சொல்வது தப்பு. எடுத்தவுடன் அதற்கு ஜட்ஜ் ஸ்தானம் கொடுத்துவிடக்கூடாது. ஒருவித வழியும் இல்லாமல் போனால், ‘நீ தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்போது உன் அபிப்பிராயத்தைச் சொல்’ என்று மனஸிடம் கேட்கலாம். மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் தன் சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. சொந்த விஷயங்களில் அதற்குத் தருகிற இடத்தைக்கூட சமய விஷயங்களில் தருவதற்கில்லை. ‘தனி மனசு’ என்ற நிலைக்கு மேலே போய் முழுக்க முழுக்க லோக க்ஷேமத்தையே சொன்ன ரிஷிகளின் அபிப்பிராயம்தான் தர்ம விஷயங்களில் பிரமாணமாகும்.


“நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு” (Give the dog a bad name and hang it) என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய் நன்றியறிதலும் விசுவாசமும் உள்ள பிராணி. அதைத் தூக்கில் போடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் அதற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுத்துவிட்டு, எவனோ தூக்கில் போட்டான் போலிருக்கிறது!

நவீன நாகரிக சீர்திருத்தக்காரர்கள் நமது தர்ம சாஸ்திரங்களின் விஷயத்தில் இதையேதான் செய்கிறார்கள். யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள். நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது. எனவே, தர்ம சாஸ்திரங்களால் வாஸ்தவத்தில் ஏற்படாத கொடுமைகளை இவர்களாகக் கற்பித்துச் சொல்கிறார்கள். ‘நம் தேசத்தில் இன்னின்னார்தான் இன்னின்ன காரியம் செய்யலாம் என்ற அதிகார பேதத்தால் ஜனங்கள் பிரிந்து பிரிந்து போனார்கள். இதனால் ஹிந்து சமூகத்தில் ஒற்றுமை இல்லை; இதனால்தான் நம்மை அன்னிய தேசத்தார் பல முறை ஜயிக்க முடிந்தது’ என்று சொல்கிறார்கள். இது துளிக்கூடச் சரியில்லை.

பொது எதிரி வந்தபோது நம் தேசத்து ராஜாக்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஜனங்களிடையே பரஸ்பரம் பேதம் இருந்து, அவர்கள் எதிரிக்கு உதவி செய்ததாகச் சொல்வதற்குக் கொஞ்சம்கூட சாட்சியம் இல்லை. பேதங்கள் போகவேண்டும் என்று சொல்கிற இப்போதுதான் உண்மையில் பேதமும் துவேஷமும் உக்கிரமாக இருக்கின்றன. இதற்கு மாறாக, சௌஜன்யத்தையே சமீப காலம்வரை கண்கூடாகப் பார்த்தோம். இரண்டு கிராமங்களுக்கிடையில் ஏதோ ஒரு வயல், வரப்பு, வாய்க்கால் அல்லது கோயில் பற்றிப் பாத்தியதை சண்டை வந்தால், அந்தந்த கிராமத்திலும் உள்ள அக்கிரகார ஜனங்களிலிருந்து சேரி மக்கள் வரையில் எல்லோரும் ஒரு கட்சியாகத்தான் நிற்பார்கள்; இந்தக் கிராமத்தில் உள்ள ஒருவன் தன் ஜாதியைச் சேர்ந்த எதிராளிக் கிராமத்தானோடு சேரவே மாட்டான். கிராமத்து விஷயமே இப்படி என்றால் தேசத்தின் விஷயத்தில் சொல்லவே வேண்டாம்

11. மனமே அடங்கு !

 மஹாபெரியவா அருளுரைகள்.

சின்னச் சின்ன சமூகங்கள் தங்களுக்குள் கட்டுப்பட்டு ஒழுங்காக இருக்க முடிந்தது. அவரவருக்கும் தங்கள் சமூகத்தைப் பற்றிப் பெருமையே இருந்தது. அவரவரும் தங்கள் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள தனித்தனி நாட்டாண்மை வைத்திருந்தார்கள். ஒருத்தன் தப்புத்தண்டா பண்ணிவிட்டால் நாட்டாண்மைக்காரர்கள் அவனைத் தங்கள் சமூகத்திலிருந்து பிரஷ்டம் செய்து விடுவார்கள். அவரவருக்கும் தங்கள் சமூகத்தில் கௌரவ புத்தியும், மனமார்ந்த பிடிமானமும் இருந்ததால் பிரஷ்டம் செய்யப்படுவதைப் பெரிய அவமானமாக எண்ணினார்கள். இதுவே அவர்களைத் தப்புத் தண்டாவிலிருந்து தடுக்கும் பெரிய சக்தியாக இருந்தது. இப்போது எல்லா சமூகங்களையும் மனமார்ந்த பிடிமானத்தோடு சேர்த்துப் பிடித்து வைக்க எந்த ஸ்தாபனமும் இல்லை. கட்டுக்கடங்காத ஒரே பெரிய அமைப்பில் இது சாத்தியமும் இல்லை. விளைவு: குற்றங்கள் கூச்சமில்லாமல் நடக்கின்றன; போலீஸின் வேலை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. சாஸ்திரங்களை எதிர்க்கிறவர்கள் இதை எல்லாம் யோசிக்க வேண்டும்.

எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்; அதுவே நல்லதும்கூட. எதிர்ப்பு இருந்தால்தான் நம் நிறை குறை சரியாக வெளியாகும். நம்மை ரக்ஷித்துக் கொள்வதில் விழிப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பு என்கிற பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதைத் தூக்கில் போடக்கூடாது.

இல்லாததைச் சொல்வதற்கு இன்னோர் உதாரணம். நெற்றிக்கு இட்டுக் கொள்வது சிலருக்கு நாகரிகமாக இல்லை. நெற்றிக்கு இடுவதை ‘ஜாதி அடையாளம்’ என்று கெட்ட பெயர் தந்து தூக்கில் போடப் பார்க்கிறார்கள். வாஸ்தவத்திலோ, விபூதி பூசுகிறவர்களில் பிராம்மணரிலிருந்து தீண்டாதார்வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே நாமம் போடுபவரிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள். எல்லாம் விஷ்ணு வடிவமான மண்ணில் தோன்றி மண்ணில் முடிவது என்பதற்கு அடையாளமே திருமண். சரீரம் பஸ்மமான பின்னும் சாசுவதமாக இருக்கிற சிவமயமான பரமாத்மாவிற்கு அடையாளம் திருநீறு. இப்படிப்பட்ட தத்துவச் சின்னங்களை கெட்ட பெயர் சூட்டித் தூக்குபோடலாமா?

பழைய தர்மங்களை எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

தியானத்தில் ஒருமுகப்படுவதற்கு பெரிய இடைஞ்சல் என்ன? இந்த மனசு ஓயாமல் ஆடிக் கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ‘ஆசைப்படாதே’ என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.

நாம் ‘ஒரு வஸ்துவை நினை’ என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது. தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்கிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால் அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஓடி,சாந்தி குலைந்து போகிறது.

‘பேசாமல் இரு’ என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டால், அது ஓரளவாவது பேசாதிருக்கிறது. ‘பார்க்காதே’ என்று உத்தரவு போட்டுக் கண்ணை முடிக்கொண்டுவிட்டால், கண் ஓரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால் இந்த மனத்திடம் மட்டும் ‘நினைக்காமல் இரு’ என்று எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம், ‘நினை’ என்றால் மனம் நினைக்க வேண்டும்; ‘நினைக்காதே’ என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது பைத்தியங்கள் என்று சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்கிறோமே, உண்மையில் நமக்கு எவருக்குமே சித்த ஸ்வாதீனம் இல்லைதான். பைத்தியம் வாயை அடைக்காமல் பிதற்றிக் கொண்டே இருக்கிறது என்றால், நாமும் மனத்தை அடைக்காமல் அது பிதற்றல் வழியில் போகத்தான் விட்டிருக்கிறோம்.

நமக்குச் சித்த ஸ்வாதீனம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? எத்தனை வலி ஏற்பட்டாலும், ‘வலி என்று நினைக்காதே’ என்றால் மனம் வலியைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடும். எதிரிலே புலி வந்து உறுமினால்கூட மனத்திடம் ‘பயப்படாதே’ என்றால் அது பயப்படாமலே இருக்கும். இப்போது நாம் காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறோம். மனசு வசப்பட்டுவிட்டாலோ, அழுகைக்குக் காரணமாக எத்தனை துக்கம் வந்தாலும்கூட அது சிரித்துக் கொண்டிருக்கும். ஆத்திரமூட்டும்படி என்ன நடந்தாலும் அது கோபமே இல்லாமல் சாந்தமாயிருக்கும்.

முதலில் மனசை இப்படி அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும்படி செய்ய வேண்டும். எண்ணெயை விட்டால் அது எப்படிப் பிசிர் இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் ‘தைலதாரை’ என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நினைவில் ஒருமுகப்பட்டுச் செல்ல வேண்டும். ‘ஸ்வாமி, ஸ்வாமி’ என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கும்படி, மனத்தை அப்பியாசப்படுத்த வேண்டும். அதன்பிறகு ‘நினைக்கிறோம்’ என்பதும்போய், ஸ்வாமியிலேயே கலந்து ஸ்வாமியாகவே ஆகிவிடுவோம்.

இப்படி மனசை அடக்குவதுதான் ‘யோகம்’ என்பது.

சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி மனசின் ஓயாத ஒட்டம்தான். எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் ‘யுக்தன்’ என்கிற யோகி. அவன்தான் ‘ஹுகி’ உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.

‘யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?’ என்று விட்டு விடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி – அதாவது, மனம் என்ற வியாதி – இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடங்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.


12. அஹிம்ஸை

 மஹாபெரியவா அருளுரைகள்.


மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம், மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும். இந்த மடத்தில் வண்டிக்காரன், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாகவும் இருக்கிறார்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.

தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை. மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம். அஸ்தேயம் என்றால் ‘திருடாமல் இருப்பது’ என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது. சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும். இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. ‘கண் இதைப் பார்க்கக்கூடாது. காது இதைக் கேட்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது’ என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம். சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.

அந்த ஐந்தும் ‘சாமானிய தர்மங்கள்’ எனப்படும். அதாவது நமது மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுதர்மம்.

எல்லா மக்களுக்கும் பொதுவான சாமானிய தர்மங்களில் அஹிம்சையே முதலானது என மனு தர்ம சாஸ்திரம் விதிக்கிறது. மனஸை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ளும் யோகத்துக்கு ஓர் அங்கமாக அஹிம்சை கருதப்படுகிறது.

சரீரத்தால் ஹிம்சை செய்யக்கூடாது என்பது மட்டும் அஹிம்சையல்ல;யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவேண்டுமென்று மனஸாலும் நாம் எண்ணக்கூடாது. வாயால் பிறருக்குக் கஷ்டம் தருகிற பேச்சைப் பேசக்கூடாது.

சுபாவத்தில் நம்மில் யாருக்கும் பிறரை ஹிம்சித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையில்லை. ஆனாலும் பிறர் ஏதாவது குற்றம் செய்வதாக நமக்குத் தோன்றினால், அல்லது நமக்கு அவர்கள் கெடுதல் செய்வதாகத் தோன்றினால், அவர்களுக்குப் பலவிதத்தில் ஹிம்சை தர எண்ணுகிறோம். நம்முடைய சின்னஞ்சிறு குழந்தை தெரியாத்தனத்தால் நம் வீட்டில் நெருப்பை வைத்து விட்டால் குழந்தையை ஹிம்சிக்கிறோமா? அப்படிச் செய்யமாட்டோம். நெருப்பை அணைக்கவே முற்படுவோம். மறுநாள் முதல் அந்தக் குழந்தை நெருப்பண்டை போகாமல் ரக்ஷிப்போம். நமக்குத் துன்பம் தருவதாகத் தோன்றுகிற எவரையும், அந்தக் குழந்தையாகவே பாவிக்க வேண்டும். மறுபடியும் தவறு செய்யாமல் அவரை அன்புடன் தடுத்து ரக்ஷிக்க வேண்டும். அவர்மீது துவேஷம் பாராட்டி, பதிலுக்கு ஹிம்சை தரக்கூடாது. இதுதான் உண்மையான அஹிம்சை.

இது நம் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் யோகத்துக்கு மிகவும் பிரயோஜனமாகிறது. மனம் பூதம் போன்றது. ஆனால், பூதத்தை – வேதாளத்தை – விக்கிரமாதித்தன் வசப்படுத்தியபின், அது அவனுக்காக எவ்வளவு காரியம் செய்தது! அப்படியே வசப்பட்ட மனம் எவ்வளவோ நல்லதைச் செய்யும்.

யானை கட்டுப்படாவிட்டால் உலகுக்கு உபத்திரவம்தான்; ஆனால் கட்டுப்பட்டுவிட்டால் எத்தனை நல்ல காரியங்களை அதன் மூலம் சாதிக்க முடிகிறது! யானை பலம் கொண்ட மனஸைக் கட்டுப்படுத்தினால் எத்தனையோ நல்லதைச் செய்யலாம். ஆஞ்சநேய ஸ்வாமி மனோஜயம் செய்ததால்தான் அவ்வளவு சக்தி பெற்றிருந்து அத்தனை ஸத்காரியங்களை செய்தார். மனத்தின் சக்தி அபரிமிதமானது. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் பராசக்தியின் ஒரு மனம்தான் சிருஷ்டித்திருக்கிறது. இந்த சிருஷ்டியில் இருக்கிற ஒரு சிறிய எறும்பின் சின்ன மனமோ, இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் பாய்ந்தோடுகிறது.

‘அஹிம்சையை அநுசரித்தேன், மனம் வசப்பட்டது’ என்று எத்தனையோ மகான்களும் யோகிகளும் சொல்லியிருக்கிறார்கள். அஹிம்சையினால் கோபம்போய் மனசானது அன்பில் தெளிந்து விடுவதால், அப்புறம் அதை வசப்படுத்துவது சுலபமாகி விடுகிறது.

அஹிம்சையின் முக்கிய பிரயோஜனம் சித்தம் அடங்குவதே. ஆனால், அஹிம்சையை அப்பியசிப்பதால், நாம் உத்தேசிக்காமலே வேறொரு பலனும் ஏற்படும். இதற்கு ‘அவாந்தரப் பிரயோஜனம்’ என்று பெயர். நீங்கள் எல்லோரும் இந்த மடத்துக்குப் பூஜை பார்க்கத்தான் வந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் உத்தேசம். அதோடுகூட மேளம் கேட்கிறீர்கள்; ரொம்ப நாளாக பார்க்காத பலரை இங்கு பார்த்தீர்கள்; இப்போது உபந்யாஸம் கேட்கிறீர்கள் – இதெல்லாம் உத்தேசிக்காமலே கிடைக்கும் அவாந்தரப் பிரயோஜனம்.

இவ்வாறே ஒருவன் மனம், வாக்கு, காயம், என்ற திரிகரணங்களாலும் அஹிம்ஸையைப் பூரணமாகச் சாதித்து விட்டால், அவனுடைய சங்கற்பமின்றியே – அதாவது அவாந்தரப் பிரயோஜனமாக – அவனுடைய சந்நிதானத்துக்கு வருகிற எல்லாப் பிராணிகளும் தாமாகவே தங்கள் பகைகளை மறந்து அஹிம்ஸா மயமாகிவிடும்.

அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் 
தத்ஸந்நிதௌ வைரத்யாக: 
– யோக சூத்திரம்.

அஹிம்ஸையைப் பூரணமாக அநுஷ்டித்தவன் இருக்குமிடத்தில் குரூரமானவர் மனத்திலும் சாந்தம் உண்டாகும். எனவே, தான் அன்போடு இருப்பதே இவனது சங்கற்பமானாலும், மற்றவர்களையும் அன்பாக ஆக்கும் அவாந்தரப் பிரயோஜனமும் கிடைக்கிறது.


13. அஹிம்ஸையின் லக்ஷணம்

 மஹாபெரியவா அருளுரைகள்.


சந்நியாசி பூரண அஹிம்சையை அநுஷ்டிக்க வேண்டும். அவன் இலையைக் கூட கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து ஹிம்சிக்கக்கூடாது. அஹிம்ஸை காரணமாகத்தான் அவனுக்கு அக்னிகாரியமே விதிக்கப்படவில்லை. அக்னி என்று இருந்துவிட்டால், அதில் தவறிப்போய் ஏதாவது பூச்சி பொட்டு விழுந்து சாகக்கூடும். நெருப்பிலே விழுந்ததை எடுத்துக் காப்பாற்றுவது கஷ்டமல்லவா? இதனால்தான் துறவிக்கு ஹோமம், யாகம் எதுவும் இல்லை. அவன் அக்னி காரியமே செய்யாததால் அவனுக்கும் கடைசியில் தகனம் என்ற அக்னி காரியம் இல்லை. அவனுடைய சரீரத்தை பூமியில் அடக்கம் செய்கிறார்கள். ‘சகல பிராணிகளுக்கும் என்னால் பயம் இல்லாமல் போகட்டும்’ என்று சந்நியாஸம் வாங்கிக் கொள்ளும்போது அவன் பிரதிக்ஞை செய்கிறான். அதன்படி, எந்தப் பிராணிக்கும் தாவரத்துக்கும் ஹிம்ஸை இல்லாமல் வாழவேண்டியது அவனுக்கே பூரணமாக விதிக்கப்பட்ட தர்மம்.

‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று ஜைன, பௌத்த மதங்கள் எல்லோருக்கும் பூரண அஹிம்ஸையை விதித்ததுபோல் நம் மதம் செய்யவில்லை. சன்னியாசிகளுக்கே இதை அதி தீவிரமாக விதித்திருக்கிறது. மற்றவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடு இல்லை. தர்மயுத்தத்திலும், யக்ஞத்தில் பலி தருவதிலும் நம் மதம் அஹிம்ஸையை விலக்கியிருக்கிறது. லோக க்ஷேமத்துக்காகவே சில தேவ சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக யாகத்தில் பசு (பிராணி) பலி தரப்படுகிறது. யக்ஞத்தில், பலியாகிற பிராணி, இதனால் தானாக சம்பாதித்துக்கொள்ள முடியாத பரமோத்தமமான கதியை அடைகிறது என்பது நம் நம்பிக்கை. ஆக அந்தப் பிராணிக்கும் சிரேயஸ், அது செய்த தியாகத்தால் லோகத்துக்கும் நல்லது என்றாகி விடுகிறது.

இப்படியே யுத்தத்தில் தேசத்துக்குத் தியாகமாக ஸேனா வீரர்கள் பலி ஆகிறார்கள்.

வெறுமே தின்று தின்று தன்னையே போஷித்துக் கொண்டு உயிர் வாழ்வதைவிட, பர நலனுக்காக பிராணத் தியாகம் செய்வது சிரேஷ்டமானது என்பதால் இப்படி அஹிம்ஸைக்கு விலக்கு வைத்திருக்கிறார்கள்.

பூரண அஹிம்ஸா – லட்சியத்தை வாயளவில் பிரமாதமாகப் பேசிவிடலாமே தவிர, காரியத்தில் நடக்காது. குற்றம் குறைகள், அடிதடி, சண்டைகள் எல்லாம் நடைமுறையில் இருக்கத்தான் செய்யும். அப்போது அவற்றைக் குறைப்பதற்காக எடுக்கிற எதிர் நடவடிக்கையில் ஹிம்ஸை இருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஹிம்ஸையாகாது. ஏனென்றால், செய்கையைவிட எண்ணம், நோக்கம்தான் முக்கியம். ஹிம்ஸிப்பதிலேயே சந்தோஷப்படுகிற நோக்கமில்லாமல், ஒரு பொது நலத்தை உத்தேசித்து, ஒரு பிராணியை யக்ஞத்தில் பலி தருகிறபோதோ அல்லது ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிற போதோ அல்லது யுத்தத்தில் விரோதிகளை வதைக்கிற போதோ, காரியத்தில் ஹிம்சை தெரிந்தாலும் அது பாபமாகாது; தோஷமாகாது—இதுதான் நம் சாஸ்திரம்.

காரிய சாத்தியமில்லாத பூரண அஹிம்ஸையை பூரண நடைமுறையில் எல்லோருக்கும் விதித்தால், இந்த விதியை மீறிய பாபம், தோஷம்தான் ஜனங்களுக்கும் உண்டாகும். யதார்த்த நிலையை மறக்காத நம் மதம் நமது ஜனங்களுக்கு இந்தப் பாபத்தை உண்டாக்கவில்லை.

மாறாக பௌத்த மதம் எல்லோருக்கும் பூரண அஹிம்ஸை என்று விதி செய்த போதிலும் இன்று நாம் பார்ப்பது என்ன? பௌத்தத்தைத் தழுவிய அத்தனை நாடுகளிலும் சைன்னியம், சண்டை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. அது மட்டுமில்லை, அந்தத் தேசங்களில் மிச்சம் மீதியில்லாமல் சகல ஜனங்களுக்கும் மாமிஸம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள்.

பெரிய தர்மம் ஒன்றை அத்தனை பேருக்கும் பொதுவாக வைத்தால்,முடிவில் எவருமே அதை அநுஷ்டிக்காத நிலைமையைத்தான் பார்க்கிறோம். நம் தேசத்தில் இப்படிச் செய்யாமல் சன்னியாசிகளுக்கு மட்டும் பூரண அஹிம்ஸையை விதித்தார்கள். அதைப் பார்த்து பிராம்மணர்கள், வட தேசத்தில் குஜராத் முதலான பகுதிகளில் உள்ள வைஷ்ணவர்கள், தென்னாட்டில் சைவ வேளாளர்கள், கோமுட்டிச் செட்டிமார்கள் போன்றவர்களும் இதைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். எனவே ‘விதி’ என்று போட்டுக் கட்டுப்படுத்தாததாலேயே தாங்களாகப் பிரியப்பட்டு, அதிலே நிஜமான ஈடுபாட்டோடு தலைமுறை தத்வமாக இப்படிச் செய்து வந்திருக்கிறார்கள். சந்நியாஸிகளின் ஸத்வ குணத்தைப் பார்த்து, அதன் பொருட்டுத் தாங்களும் இந்த சாகபட்சணத்தையே (Vegetarianism) விரும்பி ஏற்று அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, வெளியிலிருந்து யாரும் கட்டுப்படுத்தாமலே மற்ற வகுப்பாரும், ஒரு அமாவாஸை. ஒரு திதி, திவஸம், ஷஷ்டி இம்மாதிரி தினங்களில் மாமிஸ போஜனத்தை விலக்கி விடுகிறார்கள். நடைமுறையில் (Practical) எல்லோருக்கும் இயலாத ஒன்றை சகலர் மீதும் கட்டாயமாக திணிக்காமல்,பக்குவிகளான சிலருக்கு மட்டுமே விதிப்பதால், அதுவே மற்றவர்களுக்கும் ஒரு உத்தம லட்சியமாகி (ideal) அதை ஓரளவுக்காவது அவர்களும் பின்பற்றுகிறார்கள். மாறாக எல்லோருக்கும் இதை விதியாக்கிய இடங்களிலோ, எவருமே அதை அநுசரிக்காமல் ஹிம்ஸை அதிகரிப்பதோடு, அவர்கள் விதியை மீறிய தோஷத்துக்கு ஆளாகும்படி வேறு நேர்ந்திருக்கிறது! அஹிம்ஸை என்கிற தத்வம் ஒரு லட்சியமாகவாவது எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதால் அது சாமானிய தர்மங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. காரியம் எப்படி இருந்தாலும் மனசிலே துவேஷம் இருக்ககூடாது என்பதுதான் நம் வைதிக தர்மப்படி அஹிம்ஸையின் லட்சணம் (definition).

14. ஸத்யம் (உண்மை) என்பது என்ன ?

மஹாபெரியவா அருளுரைகள்.

சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை). அடுத்தது உண்மை (சத்தியம்).

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.

வாங்மனஸயோ: ஐக ரூப்யம் ஸத்யம்

மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சுத் சக்தியைப் பறித்துக் கொண்டு விடுவார் – அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.

பூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலக்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும் போதும், யாகயக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.

ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான். ‘அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவன் அப்படிச் சொல்வதால் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சாத்தியமாகிவிடுமா? ஆகாது.

ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு.

ஸ்த்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்

ப்ரியம் ச ந அந்ருதம் ப்ரூயாத்

காமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும்.

ஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்று பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் அவாந்தரப் பிரயோஜனம் உண்டு – அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தமாக ஒரு கதை சொல்கிறேன்.



15. ஸத்தியத்தின் சக்தி

 மஹாபெரியவா அருளுரைகள்.

திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போலப் பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரசாரம் செய்தார்கள். ‘அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்’ என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டார்கள். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், ‘இன்றைக்கு என்ன திதி?’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா! சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்” என்று தலையைத் தூக்கினான்.

அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தாடங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசீ, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.

மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது ‘அவாந்தர’மே இல்லை.

கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசியில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம் போய், ‘நாம் உண்மையில் யார்? ஸ்வாமி என்பவர் யார்? பரம சத்தியம் என்பது என்ன? என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். ‘சௌசம்’ என்பது ‘சுசி’ என்பதிலிருந்து வந்தது. ‘சுசி’ என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆசாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது, மற்ற மடி ஆசாரங்கள் சௌசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம்—புலனடக்கம்—அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.

இங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள் !


16.  உலக வாழ்வு

மஹா பெரியவா அருளுரைகள்

நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று இத்தனை யாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும். ஒரே வஸ்து என்றபின் சஞ்சலிக்கவோ ஏற்றத்தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.

உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து உண்டாகும். ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால்தான் உலகத்தில் எவனுமே, தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை; ஆனால், சித்தப் பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.


17.  யோகியின் அடையாளம்

மஹா பெரியவா அருளுரைகள்


துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம், அதாவது மனஸின் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசியில் தேகவியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.

யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஓடவே முடியக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போதும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.

நதி இருக்கிறது. அதன் மூலம்—உண்டான இடம்—என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா?ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இது அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.

யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆடக் கூடாது, அசையக் கூடாது, அழக்கூடாது. இப்படியில்லாமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.

அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதிலெல்லாம் அவனுக்குத் ‘தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும்—எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும்—சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப் பழக்கினால்தான், கோடாநு கோடி ஜனங்களை இந்தமாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்



18. செயலும் விளைவும்

மஹா பெரியவா அருளுரைகள்

ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ‘ஸைகலாஜிகல்’ காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபசாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.

பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்னைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.

ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாகச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.

பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேச்வரன்.

ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.

ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.

பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.

பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.


19. பிரம்மம்
மஹா பெரியவா அருளுரைகள்


“பிரம்மம் பூரணமானது; உலகமும் பூரணமானது; பிரம்மம் என்ற பூரண வஸ்துவில் உலகம் என்ற பூரணம் உதயமாயிற்று; இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம் பூரணத்திலிருந்து எடுத்துவிட்ட போதிலும் பிரம்மம் பூரணமாகவே இருக்கிறது” என்று ஓர் உபநிஷத மந்திரம் சொல்லுகிறது. பூரணம் என்றால் எல்லாம் என்று அர்த்தம். எப்படி இரண்டு வஸ்து எல்லாமாக முடியும்? பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் எப்படிப் பூரணம் மிஞ்ச முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இந்த மந்திரத்தின் வாஸ்தவமான தாத்பரியம் என்ன? உலகம் உண்மையில் பிரம்மத்திலிருந்து வேறாகப் பிரிந்து வெளியே வந்துவிட்ட வஸ்து அல்ல. பிரம்மமேதான் உலகமாகத் தோன்றுகிறது. பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை. பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை. பிரம்மம் உலகமாகத் தோன்றுகிறது (Appearance). அவ்வளவுதான். இருட்டிலே ஒரு மாலையைப் பார்த்துவிட்டுப் பாம்பு என்று நினைக்கிறோம். இப்போது மாலையே பாம்பாகத் தோன்றுகிறது. மாலை பாம்பாக மாறவில்லை. மாலை பாம்பைச் சிருஷ்டிக்கவும் இல்லை. பாம்பாக எண்ணியபோது அது முற்றிலும் (பூரணமாக) பாம்பாகத்தான் தெரிகிறது. மாலை என்று தெரிந்து கொண்டால் பூரணமாக மாலையாகவே இருக்கிறது. மாலை என்ற பூரணத்தில் பாம்பு என்ற பூரணம் உதயமானாற்போல், பிரம்ம பூரணத்தில் உலக பூரணம் தோன்றுகிறது. அதாவது ஒரு நிலையில் மாலையே பூரணம்; இன்னொரு நிலையில் பாம்பே பூரணம். ஆக, இரண்டு பூரணமில்லை. ஒரே பூரணம் இரண்டு சமயங்களில் இரு விதங்களில் பூரணமாகத் தெரிகிறது. மாலையில் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட்டதால் அப்போது அதன் எடை கூடிற்றா என்ன? இல்லை. பாம்பு என்ற தோற்றம் அழிந்து, இது மாலைதான் என்ற தெளிவு ஏற்பட்டபோது மாலையின் எடை குறைந்ததா? அதுவும் இல்லை. அப்படியே பிரம்மத்தில் உலகத்தைக் கூட்டினாலும் குறைத்தாலும் அது மாறாமல் பூரணமாகவே இருக்கிறது. மாலையில் தோன்றும் மாயப்பாம்பாக, “அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவாக” இருப்பதே உலகம் என்றார் கம்பர். அரவை (பாம்பை) அலங்கலிலிருந்து (மாலையிலிருந்து) கழித்த பின்னும் அது பூரண அலங்கலாகவே இருக்கிறது. இதுதான் உபநிஷத் சொன்னபடி பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் பூரணம் மீதி இருப்பது.

மாலை ஏன் பாம்பாகத் தெரிந்தது? இருட்டினால் அப்படித் தெரிந்தது. மாயை என்கிற இருட்டில்தான் பிரம்மம் உலகமாகத் தெரிகிறது. ‘மாயா’ என்றால் “எது இல்லையோ அது” என்று அர்த்தம். இல்லாத வஸ்துவான மாயைதான் இருக்கிற ஒரே வஸ்துவான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பெருக்கிக் காட்டுகிறது. இல்லாத வஸ்துவால் இப்படிச் செய்ய முடியுமா என்று கேட்பீர்கள். கணித சாஸ்திரப்படி பதில் சொல்கிறேன்.

பிரம்மத்தின் விஷயத்தில் கூட்டல், கழித்தல், கணித நியதி மேலே பார்த்தோம். கூட்டினாலும் ஜாஸ்தி ஆகாது. கழித்தாலும் பூரணமாகவே இருக்கும் என்ற விசித்திரத்தைப் பார்த்தோம். இப்போது பெருக்கல், வகுத்தல் கணக்கு ஒன்றும் சொல்கிறேன்.

ஓர் எண்ணை இன்னோர் எண்ணால் வகுக்கிறோம். வகுக்கிற எண் சிறியதாக சிறியதாக ஈவு அதிகமாகிக் கொண்டே போதும். பதினாறைப் பதினாறால் வகுத்தால் ஈவு ஒன்று; எட்டால் வகுத்தால் ஈவு இரண்டு; நாலால் வகுத்தால் நாலு; ஒன்றால் வகுத்தால் ஈவு பதினாறு. வகுக்கிற எண் சிறியதானால் ஈவு அதிகமாகிறது. வகுக்கிற எண் மிக மிகச் சிறியதாகி பூஜ்யமே (0) ஆகிவிட்டால் அப்போது ஈவு மிக மிகப் பெரியதான, எண்ணிக்கையிலேயே அடங்காத அனந்தமாகிறது (Infinity). பூஜ்யத்தால் எந்த எண்ணை வகுத்தாலும் கிடைக்கிற ஈவு அனந்தம்.

1/0 =அனந்தம்; 2/0 =அனந்தம்; 3/0 =அனந்தம்; கோடியைப் பூஜ்யத்தால் வகுத்தாலும் இதே அனந்தம்தான் ஈவு.
வகுக்கிற எண்ணால் ஈவைப் பெருக்கினால் வகுக்கப்படும் எண் கிடைக்கவேண்டும் என்பது கணித நியதி. 16/2 = 8; அதாவது 8 × 2 = 16 இந்த நியதிப்படி,

அனந்தம் × 0 = 1

அனந்தம் × 0 = 2

அனந்தம் × 0 = 3

இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரே அனந்தமானது பூஜ்யத்தால் தன்னை ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி, என்று முடிவில்லாமல் பெருக்கிக் கொண்டே போகிறது.

இந்த ஒரே அனந்தம்தான் பிரம்மம். இல்லாத வஸ்துவான மாயைதான் பூஜ்யம். எது இல்லையோ அதுதானே ஸைஃபர்? மாயை என்றாலே அந்தச் சொல்லுக்கு ‘எது இல்லையோ அது’ என்றுதான் அர்த்தம். எனவே மாயைதான் ஸைஃபர், பூஜ்யம். அனந்தம் பூஜ்யத்தால் தன்னைப் பெருக்கிக் கொண்டு பலவாகக் காட்டிக் கொள்வதுபோல், பிரம்மம் மாயா சக்தியால் தன்னை எல்லையில்லாத பல வஸ்துக்களாகத் தோன்றுகிற இந்தப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது. வகுக்கப்படும் பிரபஞ்சத்துக்கு என்ன எண்ணிக்கை வேண்டுமானாலும் தரலாம். எந்த எண்ணிக்கை தந்தாலும் அதை வகுப்பது பூஜ்யமான மாயையாகையால் மாறாது. அனந்தப் பிரம்மமே ஈவு ஆகிறது. பிரபஞ்சம் என்பது இவ்விதம் எந்த எண்ணிக்கையை வேண்டுமானாலும் பெறலாம் என்கிற முறையில் எல்லையற்றிருப்பதால் அதுவும் அனந்தமாகிறது. சிருஷ்டியில் எத்தனை தினுசு? நம் மனசும் எத்தனை தினுசுகளில் ஓடுகிறது? இவற்றிற்கு முடிவே இல்லை. அனந்தம் தான். முதலில் சொன்ன உபநிஷத் மந்த்ரங்களில் பிரம்மத்தைப் பூரணம் என்று சொன்னபோது, அது மாறாத அனந்தம் என்றும், பிரபஞ்சத்தைப் பூரணம் என்கிறபோது அது மாறிக் கொண்டேயிருப்பதில் அனந்தம் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

மாறிக் கொண்டேயிருக்கிற வஸ்து சத்தியமாக இருக்கமுடியாது. ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி என்று அதற்கு நாம் மதிப்புத் தந்தாலும், உண்மையில் அது அசத்தியம்தான்—இல்லாத வஸ்துதான்—அதாவது பூஜ்யம்தான். ‘எந்த எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான்’ என்ற கணித நியதியை இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். அனந்தம் (பிரம்மம்) × மாயை (0) = 1; 2; 3… என்றெல்லாம் மேலே உபசாரமாகச் சொன்னாலும், உண்மையில் அனந்தத்தை மாயையால் பெருக்கிக் கிடைக்கிற பிரபஞ்சமும் மாயா மயமான பூஜ்யம்தான் எனலாம்.

அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம் என்கிறது அத்வைதம்; அனந்தமாகத் தெரிகிற பிரபஞ்சமும் சத்தியம் என்கிறது துவைதம்; பிரம்மம், பிரபஞ்சம் என்ற பேதமில்லாமல் எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை என்கிறது பெளத்தம். அதாவது, பிரம்மம் என்பது சத்தியம் என்று சொல்வது அத்வைதம்; எல்லாம் மாயை என்பதோடு நிற்கிறது பெளத்தம்; பிரபஞ்சத்தை சத்தியமாகச் சொல்கிறது த்வைதம்.

பிரம்மம் × மாயை = பிரபஞ்சம் என்று நாம் மேலேகண்ட equation சூத்திரத்தை,

அத்வைதம் × பெளத்தம் = த்வைதம் என்று சொல்லலாம். அல்லது,

த்வைதம் ÷ பெளத்தம் = அத்வைதம் எனலாம்.


20.  த்யானம்
மஹா பெரியவா அருளுரைகள்

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பெயரில் வந்துள்ள பீடங்களில் இருக்கிற எங்களுக்கு, அவர் இட்டுள்ள முக்கியமான ஆக்ஞை என்னவெனில், நாங்கள் எப்போதும் ஈசுவர தியானம் செய்ய வேண்டும். மற்றவர்களையும் தியானம் செய்யுமாறு பண்ண வேண்டும் என்பதே. ஈசுவர தியானம் என்பது எதற்கு? அந்த ஈசுவரன்தான் நாமாக ஆகியிருக்கிறார். அதாவது நம்முடைய நிஜ ஸ்வரூபம் அவரேதானென்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் லட்சியம். நாம் என்னவென்று எப்படிக் கண்டுபிடித்துக் கொள்வது? தெரியவில்லையே என்றால், ஈசுவரன் என்று சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனைச் சொல்கிறோமே அவனைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனும் நாமும் ஒன்று என்பதால், அவனே, நமக்கு நம்முடைய—அவனுடைய—நிஜ ஸ்வரூபத்தை அநுக்கிரகித்து விடுவான். அப்படி நாமும் அவனும் ஒன்றாகிறபோது ஸகல குணங்களும் போய் நிர்குணமாகிவிடும்.

குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் சரியாக நடக்காவிட்டால் உபாத்தியாயர் உபயோகமில்லை என்கிறோம். அப்படியே நீங்கள் சரியாக நடக்காவிட்டால் உங்களுக்கு ‘குரு’ என்று சொல்லப்படும் நான் உபயோகமில்லை என்று அர்த்தம்.

ஒருவனைக் கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தருக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்புச் செய்தால், அந்தத் தப்பு அவனை நல்வழிப்படுத்தாதவரையே சேரும். ‘குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேரும்; மனைவியின் பாபம் கணவனைச் சேரும்; சிஷ்யனின் பாபம் குருவைச் சேரும்’ என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது. சாதாரணமாக குரு என்றால் ஒரு சில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். ஒருவர் ஜகத்குரு என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபமும் வந்து சேரும்.

பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான். இதனால்தான் பகவத்பாதாள் “ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். அந்தக் கடமையை செய்ய என்னால் முடிந்த மட்டும் பிரயத்தனம் செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் தியானம் செய்ய முயலுகிறேன். ஆனால் நீங்களும், அவரவர்களே எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு என் பாரம் குறையும்.

மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியாக சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவஸ்ய வம்பிலும், நியூஸ் பேப்பர் விமர்ஸனத்திலும் செலவாகிற காலத்தை மட்டுப் படுத்தினால் நித்திய சிரேயஸைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும். தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். ஐசுவரியம் இருந்தாலும், தாரித்திரியம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்யம் இருந்தாலும், வியாதி வந்தாலும்—எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.

நாம் செய்வதோடு நம் பழக்கத்துக்கு உட்பட்டவர்களையும் தியானம் செய்யும்படி சொல்ல வேண்டும். செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படி சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.

“தியானம் செய்யுங்கள்; மற்றவர்களைச் செய்யச் சொல்லுங்கள்” என்று பகவத்பாதாள் எங்களுக்கு இட்ட ஆக்ஞையைத் தெரிவித்தேன். உங்களைத் தியானம் பண்ணுமாறு செய்கிறோனோ இல்லையோ, ‘தியானம் செய்யுங்கள்’ என்ற ஆதி ஆசாரியாள் ஆக்ஞையைத் தெரிவித்த அளவுக்காவது என் கடமையைச் செய்தவனாகிறேன். அதைச் சொல்லும் பாக்கியம் எனக்கு உங்களால் கிடைத்தது. ஸ்ரீ ஆசாரியாள் எதைச் சொல்ல ஆக்ஞைச் செய்தாரோ அதைக் கேட்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்களால் என் கடமையில் ஒரு பங்கையேனும் செய்த லாபத்தை அடைந்தேன். நீங்களும் ஆத்ம லாபத்துக்கான உபாயத்தைக் கேட்டுக் கொண்டீர்கள்.நமக்குள் பரஸ்பர லாபம் உண்டாயிற்று.

இதை நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டு பூரண லாபம் பெறுங்கள். இந்த ஜன்மா முடிகிறபோது, “அப்பாடா, பிறவி எடுத்ததன் பலனை அடைந்து விட்டோம். இனி பயமில்லாமல் போய்ச் சேரலாம்” என்று உறுதியும் திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மார்க்கத்தில் நாம் செல்லப் பரமேசுவரன் எல்லோருக்கும் பூரண அநுக்கிரஹம் புரிவானாக!

மனம் கெட்டுப்போய் எவ்வளவோ பாபம் செய்திருக்கிறோம். குழந்தையாக இருந்ததிலிருந்து ஈசுவர தியானம் செய்திருந்தால் இவ்வளவு நாள் எவ்வளவோ பாபம் போயிருக்கும். இப்பொழுதோ மேலேயும் பாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை நாட்கள் ஈசுவர சரணாரவிந்த தியானம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் நம்முடைய பிறவிப் பயனை நாம் அனுபவித்தவர்களாகிறோம். இந்த ஜன்மத்தை எடுத்ததற்குப் பலன் அதுதான்.

நாம் எவ்வளவு நாழிகை தியானம் பண்ணுகிறோம் என்று அவரவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். தினந்தோறும் பல காரியங்களைச் செய்து வருகிறோம். ஆனாலும் ஈசுவரத் தியானம் மிகவும் கொஞ்சந்தான் செய்திருப்போம். வம்பு, வீணில் செலவான காலமெல்லாம் ஈசுவரத் தியானத்தில் செலவழித்திருப்போமானால் இப்பொழுது பாப மூட்டைக்குப் பயப்பட வேண்டாம். இப்பொழுது மூட்டை வரவர ஏறிக்கொண்டே இருக்கிறது. நாம் பூலோகத்தில் வந்துவிட்டோம். இனி யாராக இருந்தாலும் போயாக வேண்டும்; இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இருந்துவிட்டது. இப்படியிருந்தது போதும். இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ஆக்கிக் கொள்வோம். தேஹம், மனசு, சாஸ்திரம், க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றன. நாம் வாக்கினாலும் மனத்தினாலும் கைகால் முதலியவற்றாலும் பாபம் செய்து இருக்கிறோம். அந்தப் பாபங்களையெல்லாம் வாக்கையும், மனசையும், அவயங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் போவதற்குப் ‘பாப மூட்டை’ இல்லை என்று சொல்லும்படி செய்து கொண்டால், அப்புறம் பஞ்சைப்போல் ஆனந்தமாகப் பறந்து போகலாம். எங்கிருந்து புறப்பட்டோமா அங்கேயே போய்ச் சேர்த்துவிடலாம். அப்புறம் மாறாத ஆனந்தமாகவே இருக்கலாம். ‘பாபிகளையும் பரமாத்மாவாக்குகிறவர்’ என்று கன்னட பாஷையில் நம் ஆசார்யாளைப் பற்றி ஒரு வசனம் இருக்கிறது. துராத்மா என்று நாம் சொல்கிறவனும் அந்தப் பரமாத்மாவைப் தவிர வேறில்லை என்று சொல்லி அந்த நிலையை இவன் அடைவதற்கு ஆசார்யாள் படிகட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இது கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாகச் சென்று ஞானத்தில் முடிகிறது.


21 ‌‌‌‌‌‌‌தர்ம நியதி
மஹா பெரியவா அருளுரைகள்

புத்தாண்டு பிறக்கப் போவதற்கு அறிகுறியாக இயற்கை அன்னை தனது மர வர்க்கங்களின் அரசிளங் குழந்தைகளான அரசையும் வேம்பையும் முதலில் அடியோடு இலையுதிரச் செய்கிறாள். பிறகு பச்சைத் துளிர்களைத் தழைக்க வைக்கிறாள்.

அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜனையும் பிரதிஷ்டை செய்வது தொன்று தொட்ட வழக்கு. பனிக் காலத்துக்குப்பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள். இது, இம்மாதிரி ஆகாசம் பார்க்க சுக உஷ்ணமான சூர்ய வெளிச்சத்தை ஆனந்தமாக அனுபவிக்கிற பருவ காலமாகவே இருக்கிறது. மழையிலே குடை வேண்டும். கொளுத்துகிற வெயிலில் குடை வேண்டும். கடும்பனிக் காலத்திலும் இராவேளையில் சூரியன் இல்லாதபோது ஆகாசம் பார்க்க உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால் அத்தனை பனியில்லாத இந்த இலையுதிர் காலத்தில்—சிவராத்திரியோடு குளிர் ‘சிவ சிவா’ எனறு போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் ஸுக உஷ்ணமாகச் சூரியன் இருக்கிற காலத்தில், பகல் இராப்பொழுது இரண்டிலும் ஆகாசம் பார்க்க உட்கார்ந்திருக்கலாம். இதை உணர்த்துகிறது போலவே இயற்கையன்னை இந்தப் பருவத்தில் விக்நேசுவரருக்கும் நாகராஜனுக்கும் சூரிய பூஜை செய்கிற மாதிரி மேலே இருக்கிற அரசு, வேம்பு மரங்களின் இலைகளை உதிர்த்து விடுகிறாள். நாகராஜனை ஸுப்ரமண்ய ஸ்வாமி என்றே சொல்லலாம். தெலுங்கர்கள் ஸுப்ரமண்யர், பாம்பு இரண்டையும் ‘சுப்பராயடு’ என்றே சொல்லுகிறார்கள். ஷஷ்டியில் நாகராஜ பூஜை செய்கிற வழக்கம் நம் தமிழ் தேசத்திலும் பிராசீனமாக இருந்து வந்திருக்கிறது. ஆதி தம்பதிகளின் முதல் குழந்தைகளான பிள்ளையார், குமாரஸ்வாமி இரண்டு பேருக்கும் இயற்கையன்னை காட்டுகிற பரிவு,பார்வதீ பரமேசுவரர்களின் குழந்தைகளான நம் அத்தனை பேரிடமும் காட்டுகிற அன்புக்கு அடையாளமாக இருக்கிறது.

அது நிறைந்த பரிவாக இருக்கிறது. இப்போது சுகோஷ்ணமாக மித வெப்பமாக இருப்பதால் இவர்களை இப்படிச் சூரிய ஒளியில் உட்கார்த்தி வைத்திருந்தாலும், வஸந்த காலம் வந்தவுடன், சூரியன் கொஞ்சம் உக்ரமானவுடன், அது அவர்களை உபத்திரவப் படுத்தக்கூடாது என்கிற கரிசனம் இயற்கையன்னைக்கு வந்து விடுகிறது. சூரியன் கடுமையாகும் காலத்தில் துளிர்கள் தழைத்துப் பசுங்குடை பிடிக்கிறாள். இலையுதிர்ப்பது, துளிர்ப்பது எல்லாம் இயற்கை; லோக நியதி; அவை யுகாந்தரங்களாக மாறாமல் நடப்பவை.

பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும். அதாவது லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தர்மம், நியதி (law) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தன் குழந்தைகளை வெயில் படாமல் மழை படாமல் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம் தேவையாக இருக்கிற போது அதைத் தந்து அரவணைக்க வேண்டும் என்கிற அன்பு ஈசுவரனுக்கு இருப்பதால் அதற்கு, அநுசரணையாக இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.

இந்த அன்பைப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு. லோக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிற போதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதை கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து ஸ்வாமி விளையாட்டுப் பார்க்கிறார். அந்த மூளையை வைத்துக் கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக் கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இறுதியில் சௌக்கியத்தைத் தருவது தர்மமே.

ஏதோ ஒன்று உலக மக்கள் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் இந்த தர்மத்தின் திசையில் திருப்பிக் கொண்டுதான் வந்திருக்கிறது. இதனால்தான் சகல தேசங்களிலும் மனிதன் தன்னுடைய பௌதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டும் நிற்காமல் வேறு சில ‘விசித்திரமான’ காரியங்களைச் செய்து வருகிறான். ஒருவன் சிலுவை என்று ஒன்றை வைத்துக் கொண்டு பைபிள் படிக்கிறான். இன்னொருவன் ‘நமாஸ்’ செய்கிறான். வேறொருவன் விபூதியைக் குழைத்துப் பூசிக்கொள்கிறான். இன்னொருவன் நாமக்கட்டியைக் குழைத்துப் போட்டுக்கொள்கிறான். இவற்றால் நேருக்கு நேர் எந்த பௌதிகப் பலன் தெரியாவிட்டாலும் தலைமுறை தத்துவமாக இவற்றை மனித சமுதாயம் பின்பற்றி வந்திருக்கிறது. ஏன் இப்படி செய்திருக்கிறது?

உலக வாழ்வுக்கு மனிதன் பணமும் பொருளும் சேர்த்தான். அன்றைய தேவையோடு போதாது என்று எதிர் காலத்துக்காகவும் பொருளீட்டினான். ‘எதிர்காலம்’ என்கிறபோது அது எத்தனை வருஷம் என்ற கேள்வி வந்தது. எப்படியிருந்தாலும் ஒருவன் ஆயிரம் பதினாயிரம் வருஷம் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தது. ஒரு மநுஷ்யனின் ஆயுள் உள்ளவரைக்கும், அந்த மநுஷ்யனின் சந்ததிக்கும் தேவைப்படுகிற சொத்தைத் தேடினான்.

இந்த மநுஷ்ய ஆயுள் முடிந்தபின் அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வி வந்தது. இந்த உடம்பு போனதோடு மநுஷ்யனும் போய்விடுவதில்லை என்று அந்தந்த தேசத்திலும் தோன்றிய மஹான்கள் கண்டார்கள். ஆனால் இந்த உடம்புக்காகத் தேடிய பணமும் பொருளும் உடம்பு போனபின் அந்த மநுஷ்யனுக்கு சிறிதும் பிரயோஜனமில்லை என்று கண்டார்கள். உடம்பு போனபின் உயிர் நல்ல கதி அடைவதற்குச் செய்ய வேண்டியது எதுவோ அதை அந்த மஹான்கள் கண்டார்கள். பல தேசங்களில் பலவிதத்தில் வழி கண்டார்கள். சிலுவை, நமாஸ், விபூதி, திருமண் எல்லாம் இப்படி வந்தவையே.

‘லோகம் முழுவதையும் பகவானுடையதாகப் பார்த்து, அதற்கேற்ப எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடப்பதே மநுஷ்யர்களின் தர்மம். தனக்கென்று மட்டும் இவன் செய்து கொள்கிற காரியங்கள் இவனை அதர்மத்தில்தான் தள்ளும். எனவே, இப்போது இவனுக்கு இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையே உலகமெல்லாம் என்ற அறிவை ஏற்படுத்த வேண்டும்’ என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. ‘உன் ஆசைப்படி நடந்து கொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள்’ என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை. தன்னை முக்கியமாக நினைத்துக் கொள்கிற வரையில் இவன் சுயநலத்துக்குத்தான் காரியம் செய்து கொள்வான் என்பதால் அத்தனை மதங்களும் கடவுள் என்கிற ஒன்றை இவனுக்குச் சொல்லி, ‘அப்பா பிரபஞ்சம் முழுவதையும் செய்த அந்த மஹா சக்தியின் முன் நீ ஒன்றுமேயில்லை’ என்று காட்டி இவனுடைய அகங்காரத்தைக் குறைக்கின்றன! அந்த மஹாசக்திமானைப் பிடித்துவிட்டால் நம் மூளையைச் செய்த அவனே அதை எப்படித் திருத்தவேண்டுமோ அப்படித் திருத்தி நம்மை நம் தர்மத்தில் ஈடுபடுத்தி விடுவான் என்பதால் பக்தியையே பெரும்பாலான மதங்கள் முக்கியமாக வைத்திருக்கின்றன.

ஆனாலும் கடவுள் என்று ஒரு தத்துவம், அதனிடம் பக்தியில் மனசைத் தோய்க்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டால் சாமான்ய ரீதியில் அதைப் பிடித்துக் கொண்டு ஸ்திரமாக நிற்கமுடியவில்லை. பக்தியையும் காரிய ரூபத்தில் காட்டுவது என்றாலே சாதாரண ஜனங்களால் முடிகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு மதத்திலும் சடங்குகள்—சந்தியாவந்தனம், ப்ரேயர், நமாஸ்—எல்லாம் வந்திருக்கின்றன. லோக வாழ்க்கையில் இருந்துகொண்டே இப்படி பக்தி செய்கிறபோது உலகில் எப்படி நடப்பது இவனுக்கும் தர்மம் என்பதை மதங்கள் சொல்கின்றன. ‘எல்லோரிடமும் அன்பாக இரு; தியாகம் பண்ணு; சேவை பண்ணு’ என்று இப்படியெல்லாம் அத்தனை மதங்களும் சொல்கின்றன. இப்படி இவன் வாழ்க்கை நடத்தி விட்டால் அப்புறம் உடம்பு போனபின் உயிரானது அந்தக் கடவுளிடமே போய்ச் சேர்ந்து விடும். இதை ஒரு ஸித்தாந்தம், அத்வைதமாகக் கடவுளுக்கு வேறில்லை என்று அதுவாகவே ஆகிவிடுவது என்று சொல்லும்; இன்னொன்று அவரிடம் போய் ஸேவை செய்து கொண்டே அவரது கிருபையைப் பெற்று ஆனந்தமாக இருப்பது என்று சொல்லும். முடிவான அந்த நிலையைப் பற்றி இப்போது நாம் சண்டைபோட்டு மண்டை உடைத்துக் கொள்ள வேண்டாம். ‘ஏதோ ஒரு வழியில் கடவுளை அடைந்து விடுகிறோம். அதற்கப்புறம் இந்த லோக வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய துக்கங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் எதுவும் அடியோடு இல்லை; நீங்காத, நிறைவான ஆனந்தம் மட்டுமே இருக்கும்’ என்று தெரிந்து கொண்டால் இப்போதைக்குப் போதும்.

அப்படிப் பரமாத்மா நம்மைத் தம்மிடம் அழைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் லோகத்துக்கும், அவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை வழுவில்லாமல் செய்யவேண்டும். இந்தக் கடமைகள்தாம் நமக்கான தர்மம். அதாவது உடம்பு உள்ளபோதும், உடம்பு போன பிற்பாடும் நன்மைப் பயப்பதே தர்மம். உடம்பு போனபின் கைகால் முதலிய அவயவங்கள் இல்லை. எனவே, உடம்பு இருக்கும்போதே அது போன பிற்பாடு நற்கதி பெற வேண்டியதற்கான தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். நாம் போனபின் பிறர் நலனுக்காக ஆயுள் இன்ஷுரன்ஸ் செய்து கொள்வதைவிட இது முக்கியம். ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர இன்ஷுரன்ஸாக இருப்பது தர்மமே. இப்போது ஆயுள் இன்ஷுரன்ஸ் (life insurance) என்று ஒன்றைச் சொல்கிறார்கள்; தர்மமே ஆயுள் போனபிற்பாடும் நன்மை பயக்கிற after life insurance. ஆயுள் உள்ளபோதும் அதே தர்மம் சாந்தியும் சௌக்கியமும் தருகிறது.

எந்த தர்மத்தை நாம் அநுஷ்டிப்பது என்ற குழப்பமே வேண்டாம். பல காலமாகப் பெரியவர்கள் பரம்பரையாக அநுஷ்டித்து வந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அநுபவத்தில் அவர்கள் நித்திய ஸெளக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் நாம் ஓயாத அதிருப்தியோடு கிளர்ச்சி, (Demonstration) என்று செய்கிற மாதிரி இல்லாமல், அவர்கள் நிம்மதியாக நிச்சிந்தையாக இருந்தார்கள் என்று நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, அந்த தர்மத்தை நாம் கடைப்பிடித்தால் போதும். நாமாக ஒன்றைப் புதிதாகப் பண்ணிக் பிடித்துக்கொண்டால் வீண் சிரமம்தான். அது நல்லதாயிருக்குமா கெடுதலாயிருக்குமா என்று நமக்கே ஓயாத சந்தேகமாக இருக்கும். ஆதலினால் முன்பே பெரியவர்கள் அனுஷ்டித்து, நமக்கென்று ஏற்பட்டுள்ள தர்மத்தைக் கைக்கொள்வதே நல்லது.

மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.

ஸ்ரீ ராமனுக்கு வனவாசத்தில் ஏற்பட்ட கஷ்டம், ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்குத் தாயார் கட்டுச்சாதம் கொடுப்பதுபோல், ராமன் வனவாஸம் செல்லும்போது கௌஸல்யையும் செய்தாள். ‘பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது? குழந்தைக்கு எதைத் தரலாம்?’ என்று நிரம்ப ஆலோசித்தாள் கௌஸல்யை. பிறகு நிரந்தர பக்ஷணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்.

“ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்” என்று சொல்லித் தர்மத்தை ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.

யம் பாலயஸி தர்ம த்வம் த்ருத்யா ச நியமேன ச |

ஸ வை ராகவ சார்தூல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

தர்மமே இறுதியில் ராமனுக்கு ஜயத்தைப் பெற்றுத் தந்தது. தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷணனும் விட்டு விலகினான்.

தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் தலைகாத்ததுதான். அவரவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாயிருக்கிறது. இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக—நியாயமாக பின்பற்றிச் சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக!


22.  ஆசை எனும் பாவம் !

மஹா பெரியவா அருளுரைகள்


இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களைச் செய்வதில்லை.

“பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா! அவனை எதுவோ பாபத்திலேயே பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே, அது என்ன?” என்று அர்ஜுனன் பகவானைக் கேட்கிறான்.

“அதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது” என்று பகவான் பதில் சொன்னார்.

ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால்—தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா? இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தாபோகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஓர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.

சரி, அப்படியானால் ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லவா? அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவதுபோல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் மேலும் தள்ளுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.

அப்படியானால் பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது? நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு காரியம் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மாயிருந்து விடலாமா என்று பார்த்தால், மநுஷ்ய ஸ்வபாவம் நம்மை அப்படியிருக்க விடமாட்டேன் என்கிறது.

‘சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. அது தான் காரியம் செய்வதோடு உடம்பையும் காரியத்தில் ஏவிவிடுகிறது.

ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமோக்ஷமே இல்லையா? இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution) இல்லையா? இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் சொந்த ஆசைகளுக்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், நமக்கே ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கப்பட்ட காரியங்களில் இறங்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடுகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன; பாபம் குறைகிறது; புண்ணியம் ஏறுகிறது. அதாவது இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசையில்லாமல் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம்.

நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாவம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.

வாயால் பகவந் நாமாவைத் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும். ‘சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது; இதற்கு அவகாசம் இல்லையே’ என்பீர்கள். சம்பாதிப்பது கிருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது? அதையெல்லாம் பகவந்நாமஸ்மரணையில் செலவிடலாமே! இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயத்துக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவந் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே! ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட பிற்பாடு உடன்வராதே! மறு உலகத்தில் செலாவணி பகவந் நாமா ஒன்றுதானே?

மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்துவிட வேண்டும். தினமும் ஜந்து நிமிஷங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கைக்கொடுப்பது இதுதான்.

பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.

பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. உதாரணமாக, பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது; அதோடு நில்லாமல் நாளைக்கு பொடி போடுவும் தூண்டுகிறது. இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்கவைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற வேண்டும்.

வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்—நம்மை விட மகா பாபிகளானவர்கள்கூட—பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி்றார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை? நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்!

“என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்—ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: —பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

அதனால் நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.

மனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியாபாரத்திலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். ‘பரமாத்மாவைச் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம்’ என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும்.


23.  புருஷார்த்தங்கள்

மஹா பெரியவா அருளுரைகள்

தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்களுக்கு ஸாதனமாக இருப்பது மதம். இந்த நான்கையும் புருஷார்த்தங்கள் என்பார்கள்.

‘தர்மம்’ என்பதைப் தமிழில் ‘அறம்’ என்பார்கள். ‘அர்த்தம்’ என்பதைப் ‘பொருள்’ என்று சொல்லுவார்கள். ‘காமம்’, ‘மோக்ஷம்’ என்பவைகளை முறையே ‘இன்பம்’, ‘வீடு’ என்பார்கள். “புருஷார்த்தம்” என்பதில் ‘அர்த்தம்’ என்னும் வார்த்தை இருக்கிறது. முன்பு சொன்ன நான்கிலும் தர்மத்துக்கு அடுத்ததாக ஓர் ‘அர்த்தம்’ இருக்கிறது. ‘அர்த்தத்தில்’ என்றால், ‘வேண்டுமென்று நினைத்தல்’. புருஷன், அதாவது மனிதர்களாகப் பிறந்தவர்கள், தமக்கு வேண்டுமென்று எவைகளை நினைக்கிறார்களோ அவைகள்தாம் புருஷார்த்தங்கள். எதை மனிதன் வேண்டுமென்று நினைக்கிறான்? பொதுவாக, நாம் உள்ள பக்குவக் குறைவான நிலையில் பணமும் பொருளும்தான் வேண்டுமென்று நினைப்பதால், இதற்கே ‘அர்த்தம்’ என்ற பெயர் வந்துவிட்டது. பொருளாதார நூலை ‘அர்த்தசாஸ்திரம்’ என்கிறோம். ஆனால் நம் ஆச்சார்யாளோ இந்த அர்த்தம்தான் பெரிய அனர்த்தம் என்று “பஜகோவிந்த”த்தில் சொல்லிவிட்டார் ஏனென்றால், ரொம்பவும் தற்காலிகமான நிறைவை அல்பாயுஸான ஸந்தோஷத்தை மட்டுமே இந்தப் பொருளானது நமக்குக் கொடுத்து, சாசுவத நிறைவான மோக்ஷத்தைப் பறித்து விடுகிறது என்பதால் அப்படிச் சொன்னார்.

உண்மையில், எப்போதும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் மனிதன் நினைக்கிறான். சந்தோஷம் என்பது இரண்டுவிதம். கொஞ்ச நாழிகை இருப்பது ஒரு விதம்; எப்பொழுதும் குறையாமல் இருப்பது மற்றொரு வகை. கொஞ்ச நாழிகை சந்தோஷம் உண்டாக்குவதுதான் இன்பம் அல்லது காமம். காமம் என்பது எல்லா வித உலக ஆசைகளையும் குறிக்கும். இப்படிக் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போய்விடாமல், ஒருமுறை வந்துவிட்டால், எந்தக் காலத்திலும் போகாமல் நிலைத்திருக்கிற பேரின்பமே மோக்ஷம்—வீடு. அந்தப் பேரின்பத்தின் பெருமை தெரியாததால்தான் காமம் என்ற சிற்றின்பம் வேண்டுமென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.
ஆகவே, நாம் உண்மையில் வேண்டுமென்று நினைக்க வேண்டியது நான்காவதாகிய வீடு. இப்பொழுது நடைமுறையில் வேண்டுமென்பதோ மூன்றாவதாகிய இன்பம். நாம் விருந்து சாப்பிடுவதனால் ஆனந்தம் உண்டாகிறது. அது ஓர் இன்பம். ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக இருந்தால் அதுவும் ஒரு வகை இன்பம். நமக்கு நல்வரவு பத்திரம் (Welcome address) வாசித்துக் கொடுத்தால் ஓர் ஆனந்தம்; அதுவும் இன்பந்தான். இந்த இன்பங்கள் சாசுவதமல்ல. இந்தச் சில்லறை இன்பத்தை எதனால் சம்பாதிக்கிறோமோ அது பொருள். அது தானியமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். பொருளே இன்பத்துக்குச் சாதனம். இந்த இன்பத்தைச் சிறிது பொழுதில் அநுபவித்துத் தீர்த்து விடுகிறோம். மறுபடி இன்பம் வேண்டும் என்ற தவிப்புத் தொடங்குகிறது.

இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோக்ஷம். அதுதான் வீடு. நாம் ஊரெல்லாம் சுற்றுகிறோம். அலைந்து கஷ்டப்படுகிறோம். நாம் வந்து அடைய வேண்டியது சொந்தவீடு. ஜெயிலில் ஒருவன் இருக்கிறான். அதிலிருந்து அவன் வெளியே வந்தால் வீட்டுக்குப் போகிறான். ‘வீடு’ என்பதற்கே விடுதலை என்று அர்த்தம். இப்பொழுது மாம்ஸமாகிய ஜெயிலுக்குள் இருக்கிறோம். இந்த உடம்பேதான் நாம் என்று எண்ணி இருக்கிறோம். அது சரியில்லை. உடம்பு நமக்கு ஜெயில். நம் நிஜமான வீடு ஆனந்தமான மோக்ஷம்தான். நாம் ஜெயிலை விட்டுச் சொந்த இடத்தில் இருக்க வேண்டும். பாபகர்மா என்ற குற்றத்துக்கு தண்டனையாக நம்மை உடம்பு ஜெயிலில் போட்டுவிட்டார் ஸ்வாமி. புண்ணியகர்மா செய்தால் அவர் சிக்ஷைக் காலத்தைக் குறைத்து (Condone பண்ணி) வெளியே அனுப்பிவிடுவார். ஜெயிலிலிருந்து கொண்டு புது பாபத்தைப் பண்ணித் தண்டனைக் காலத்தை நாம் ஜாஸ்தியாக்கிக் கொள்ளக்கூடாது; விடுதலையாகி ஸ்வாமிக்குள் போய் இருக்கிற நம் நிஜ வீட்டை அடைய முயல வேண்டும். அந்த வீடுதான் எல்லையற்ற இன்பம். உலகிலே காலம், தேசம், வஸ்து—இந்த மூன்றிலும் குறையாமல் நிறைந்து இருக்கும் பேரின்பம்.

புருஷார்த்தங்களில் முதலாவதாக ‘தர்மம்’ என்பதைப் பற்றிக் கடைசியில் சொல்கிறேன். எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம். தமிழில் ‘அறம் செய விரும்பு’ என்று முதலில் சொன்னார்கள். நல்லதாகச் செய்வதெல்லாமே தர்மம் என்றாலும், பொதுவிலே தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. ‘தர்மம் போடப்பா, தர்மத்தாயே’ என்றுதான் பிச்சைக்காரர்கள் யாசிக்கிறார்கள். தான-தர்மம் என்று சேர்த்தே சொல்கிறோம். தமிழிலும் தான சாஸனங்களை அறக்கட்டளை என்றே சொல்லுகிறார்கள். இப்படிப் பார்த்தால் நம் ‘பொருளை’, ‘அர்த்தத்தை’ இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம். ஆனால் இப்படிக் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் நாம் அர்த்தத்தை (பொருளை) மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால்தான் அது மறு ஜென்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும். தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள். இன்பத்துக்குப் பொருள் ஸாதனமாக இருப்பதுபோல் பொருளுக்குத் தர்மம் ஸாதனமாக இருக்கிறது. ஈகை மட்டுமல்ல! எவ்விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு என்ன நல்லது செய்தாலும் பலனாகப் பொருள் கிடைக்கும்.

நாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம் பண்ணிவிட்டால், அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய்பேரின்பம் கிடைக்கும். பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும் வீட்டுக்கு ஸாதனமாகிவிடும். இப்படி தர்மமானது பொருளுக்கு ஸாதனமாகவும், அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும், பற்றின்றி நிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறது. தர்மம் செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளைக் கொண்டே மறுபடியும் தருமம் செய்யலாம். இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாக இருக்கிறது. இன்பம் ஒன்று தான் தன்னாலும் நிறைவுபடுவதில்லை; பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லை. கொதிக்கிற மணலில் விட்ட ஜலம் உடனே சுவறிப்போவதுபோல் ‘இன்பம்’ என்பது, தன்னாலும் நிறைவின்றி, வேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றி, தர்ம சிந்தனை, பொருள், மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப் போகிறது. ஆனாலும், இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம் என்றால் முடிய மாட்டேன் என்கிறது. அதை அடியோடு விடாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பபடுத்தித் தரவும், பிறகு படிப்படியாக இந்தச் சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதுதான் அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து, நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.

பந்தத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்மா பூரண சுதந்திரத்துடன் எந்நாளும் ஆனந்தமாக இருக்கிற நிலையே மோக்ஷம். இதை நமக்குக் கிட்டச் செய்வதற்கே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

மநுஷ்யர்கள் இப்போது சாசுவதமான சுகத்தைப் பெறவில்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. இவர்களை அப்படிப்பட்ட சுகத்தில் சேர்க்கவே எல்லா மதங்களும் தோன்றியிருக்கின்றன. இந்த சாசுவத சௌக்கிய நிலைக்குத் தான் மோக்ஷம் என்று பெயர். இந்திரியங்களால் பெறும் அர்த்தசௌக்கியத்தைத் தேடிப்போகிறதைத் தொலைத்தால்தான் சாசுவத சௌக்கியம் கிடைக்கும். இம்மாதிரி இந்திரிய சுகத்தைத் தொலைக்கவும், சாசுவத சௌக்கியம் கிடைக்கிற வரைக்கும் அதற்கு அநுகூலமாக சமூக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமே தர்ம நியதிகள் எல்லாம் வேண்டியிருக்கின்றன. மோக்ஷத்தை லட்சியமாகக் கொண்ட மதமே இந்த தர்மங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டியதாகிறது. இதனால்தான் தர்மம் என்றாலே அதற்கு மதம் என்றுதான் பெரியோர்கள் பொருள் கொண்டார்கள்.

ஏதோ ஒரு மாயா சக்தியால் இப்படி மநுஷ்யர்களாகியிருக்கிற நாம் பொருளையும், சிற்றன்பங்களையுமே வேண்டுமென்று நினைக்கிறோம். எதை வேண்டுமென்று நினைக்கிறோமோ அதுதான் அர்த்தம். வாஸ்தவத்தில் நம் நிறைவான நல்லதற்குப் பொருளும் காமமும் வேண்டாதவை என்றாலும் மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு (Human nature- க்கு) விட்டுக் கொடுத்து இவற்றையும் நம் பெரியவர்கள் புருஷார்த்தங்களில் சேர்த்தார்கள். ஆரம்பத்திலேயே, எல்லாக் காரியங்களுக்கும் அடிப்படையாக தர்ம உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு விட்டால், அப்புறம் பொருளும் காமமும்கூட நம்மை ஒரேயடியாகப் கெடுத்துவிடாதபடி, இவற்றைக் கட்டுப்பாட்டில் அளவறிந்து வைத்திருக்கும் என்பதால் தர்மத்தை முதல் புருஷார்த்தமாகச் சொன்னார்கள். பொருளையும் காமத்தையும் நாம் அர்த்திப்பது (வேண்டுமென்று நினைப்பது) போலவே தர்மத்தையும் அர்த்திக்க வேண்டும். அப்போது அது பொருள், இன்பம் இவற்றின் விஷப் பல்லைப் பிடுங்கி விடும்; முடிந்த முடிவாக நாம் அர்த்திக்க வேண்டிய வீட்டில் நம்மைச் சேர்த்துவிடும்.



24.  மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மஹா பெரியவா அருளுரைகள்

மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்’ என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.


25.  பக்தி என்பது பொதுவானதே !

மஹா பெரியவா அருளுரைகள்


மனிதனை விசாரங்களிலிருந்து விடுவித்து உயர்த்துவதற்குத்தான் எல்லா மத சம்பிரதாயங்களும் தோன்றியிருக்கின்றன. மற்றப் பிராணிகளுக்கு இல்லாத விசாரம் இவனுக்கு இருப்பது மட்டுமில்லை; இவன் முயற்சி செய்தால் விசாரத்திலிருந்து விடுபடுவதோடு இல்லாமல், மற்ற பிராணி வர்க்கம் எதுவும் பெற முடியாத ஞானத்தைப் பெற முடியும் என்று மத சித்தாந்தங்கள் யாவும் கூறுகின்றன. உலக விவகாரங்களை எல்லாம் இயக்கி வைக்கிற ஒரு மஹா சக்தியைப் தஞ்சம் புகுந்தாலே விசாரங்களிலிருந்து விடுபடலாம் என்று பொதுவாக இந்த எல்லா சித்தாந்தங்களும் ஒரே குரலில், ஏகமனஸாகச் சொல்கின்றன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம், இன்னும் கிருஸ்துவம், இஸ்லாம் முதலிய எந்த சம்பிரதாயமானாலும் சரி, பக்தி எல்லாவற்றுக்கும் பொது.

புத்தர் பக்தியைச் சொல்லாவிட்டாலும், பௌத்தர்களால் பக்தியில்லாமல் முடியவில்லை. அதனால்தான் புத்தரையே ஸ்வாமியாக்கி, வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பெரிய பெரிய மூர்த்திகளை அவருக்கு வைத்துப் பூஜை செய்கிறார்கள். ரொம்ப சமீப காலத்திலும் கூடப் பல ஞானிகள் ஆத்மவிசாரம் ஒன்றை மட்டுமே வலியுறுத்துகிறார்கள். ஆனால் இவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மஹான்களையே தெய்வமாக வழிபடத்தான் செய்கிறார்கள். பக்தி என்பது அப்படி இயல்பாக உடம்போடு பிறந்த ஒன்று.

அத்வைதத்தின்படி பக்தி செலுத்துகிறபோது, ஈசுவரன் வேறு,நாம் வேறு என்கிற எண்ணம் இல்லாமல், அதுவே நாம் என்கிற அபேத பாவத்தைக் கைக் கொள்ள வேண்டும். ‘பகவான்’ என்று மகாசக்தியாக, சர்வக்ஞனாக (எல்லாம் அறிந்தவன்) ஒன்றை வைத்துப் பக்தன் என்ற அல்ப சக்தன், கிஞ்சித்ஞன் (சிறிதே அறிந்தவன்) பக்தி பண்ணுகிறான். ‘இரண்டும் எப்படி ஒன்றாகும்?’ என்று கேட்கலாம். அப்படியானால் பகவானுக்கு நாம் வேறா? பகவானுக்கு வேறாக மற்ற வஸ்துக்கள் இருக்கின்றனவெனில் அதெல்லாம் எங்கிருந்து வந்தன? வேறாக எங்கிருந்தோ வந்த வஸ்துக்களை அவன் எப்படி ஆட்டிப் படைக்க முடியும்? இப்படி யோசித்துப் பார்த்தால் ஒரே பரமாத்மாதான் ஈசுவரன் என்கிற சமுத்திரமாகவும், பலவிதமான ஜீவராசிகளான குளம், குட்டை, கிணறுகளாகவும் ஆகிக் கடைசியில் உத்தரணி ஜலத்தில் வந்து நிற்கிறது என்று தெரியும். சக்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒரே வஸ்துதான். அந்த அடிப்படைக்குப் போனால் நாம் அதுவாகவே ஆகிவிடுவோம். இதுதான் அத்வைத முக்தி.

வெறும் புத்திபூர்வமாக (intellectual) இப்படி சொல்லிக் கொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. இது அநுபவ ஸித்தியாக வேண்டும். இதற்கு ஈசுவரக் கிருபை இருந்தால்தான் முடியும். நம்மை எல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியின் அநுக்கிரகம் இருந்தால்தான், இந்த ஆட்டம் ஒய்ந்து அடிப்படைக்குப் போக வேண்டும் என்ற அத்வைத நாட்டமே நமக்கு வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்; ஈச்வராநுக்ரஹாத் ஏவ பும்ஸாம் அத்வைத வாஸனா.

பகவான், பக்தன் என்று பிரிந்தே தோன்றுகிற ஆரம்ப ஸ்திதியிலுங்கூட, ‘பகவானாக எந்தப் பரமாத்மா வந்திருக்கிறதோ அதுவேதான் பக்தனாகிய நாமாகவும் ஆகியிருக்கிறது’ என்ற நினைவைக் கொஞ்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பகவானிடம் நம் அன்பும் அதிகமாகும். ஏனென்றால் நம்மைவிட நமக்குப் பிடித்தமான, அன்பான வஸ்து இல்லை அல்லவா?

நம் காரியங்கள் அனைத்திற்கும் பலன் தருகிற ஈசுவரன், நாம் பக்தி பண்ணப் பண்ண அதற்குப் பலனாக மேலும் மேலும் அவனை நெருங்க அநுக்கிரகம் செய்வான். தான்யார், எப்படிப்பட்டவன் என்பதையெல்லாம் அவனே தெரியப்படுத்துவான். நாம் அவனை ஆராய்ந்து பார்க்க வேண்டாம். அவனே நம் பக்திக்கு இறங்கித் தன் இயல்பைத் தெரியப்படுத்துவான். கீதையில் பகவான் இப்படியே சொல்லியிருக்கிறார்: “பக்த்யா மாம் ஆபிஜானாதி யாவான்யச்சாமி”.

இவ்வாறு ஈசுவரனின் அனந்த கல்யாண குணங்களை அறிந்தபின் அதையே பக்தர்கள் ரசிக்கிறார்கள். ஞானியோ இந்தக் குணங்களுக்கு ஆதாரமான நிர்குண சத்திய நிலையை பகவதநுக்கிரஹத்துடன் அடைந்து அதில் இரண்டறக் கலந்து விடுகிறான். இதற்கும் ஸகுண உபாசனைதான் ஆரம்பமாயிருக்கிறது.

இந்த ஸகுண உபாஸனை – அல்லது மூர்த்தி வழிபாட்டுக்காகத்தான் “இஷ்டதேவதை” என்ற கருத்து நம் மதத்தில் இருக்கிறது.

மற்ற மதங்கள் கடவுள் என்கிற ஒன்றைச் சொல்வதோடு நின்றுவிடுகின்றன. ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நம்முடைய ஸநாதன தர்மம் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழிபடுவதற்காகப் பல ரூபங்களில், பல தெய்வ வடிவங்களில் நமக்குக் காட்டுகிறது. இந்த ரூபங்கள் வெறும் கற்பனையில் உண்டாக்கப்பட்டவை அல்ல. ஒன்றாக இருக்கிற பரமாத்மாவேதான் இப்படிப் பல மகான்களுக்குத் தரிசனம் தந்திருக்கிறார். அவரவர்கள் அந்தந்த மூர்த்தியிடம் பிரத்தியட்சமாகப் பழகி உறவாடி பக்தி செய்திருக்கிறார்கள். அதே மாதிரி நாமும் தரிசிப்பதற்காக இன்ன மந்திரம், இன்ன விதமான உபாஸனையைப் பின்பற்றினால் இன்ன தேவதா ரூபத்தின் தரிசனத்தைப் பெறலாம் என்று வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

வழிபாட்டுமுறை எதுவானாலும் பக்தி என்கிற பாவம் பொதுவானது. நம் மதத்திலுள்ள பல தெய்வங்களின் உபாஸனைக்கு மட்டுமின்றி, எந்த மதமானாலும் பக்தி என்பது மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது.


26.  மதமாற்றம் தேவையற்றது !

மஹா பெரியவா அருளுரைகள்

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.

‘தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை கட்டி விடுகின்றனர். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். “இது ஒன்றே மோட்ச மார்க்கம்” என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் ‘ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்’ என்கிறது. கீதையில் பகவான், ‘எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்’ என்கிறார். ஆழ்வார் ‘அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்’ என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிர்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.

-தொடரும்...


27.  செல்லும் பாதை வேறெனினும்,
சேருமிடம் ஒன்றே !

மஹா பெரியவா அருளுரைகள்

என் அபிப்பிராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரிகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சடங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது ‘கன்வெர்ட்’ செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்நானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; ‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை. ‘யூனிடி’ இருப்பதே அவசியம்.


28.  அருணோதயம் போல் ஆத்ம சாந்தி 

மஹா பெரியவா அருளுரைகள்

இப்போது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள ஏராளமான தத்துவ ஆராய்ச்சிகாரர்களும் ஆத்ம சாதகர்களும் அத்வைதத்தையே பரம தத்துவமாக அங்கீகரிக்கிறார்கள். என்னை அத்வைத மதகுரு என்று சொல்கிறீர்கள். ஆனபடியால் அத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் இருப்பதற்குக் காரணம் அதன் சித்தாந்தத்தில் உள்ள சிறப்புதான் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்ப்பீர்கள்.

ஆனால், எனக்கு நானே யோசித்துப் பார்க்கிறேன். அத்வைத சித்தாந்தம் ஒன்றை மட்டும் தான் சகல ஜனங்களும் பின்பற்றுகிறார்களா? உலகில் எத்தனையோ சித்தாந்தங்களை, எத்தனையோ மதங்களை மக்கள் அநுசரிக்கிறார்கள். ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறவும் செய்கிறார்கள். புத்தரின் காலத்தில் வைதிக மதஸ்தர்கள் பௌத்தத்தில் சேர்ந்தார்கள். பிற்காலத்திலும் எத்தனையோ ஹிந்துக்கள் கிறிஸ்துவ மதத்திலும் முகம்மதிய மதத்திலும் சேர்ந்திருக்கிறார்கள். ஜைனர்கள் வைஷ்ணவர்களாக மாறி “புஷ்டி மார்க்கிகள்” என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். ஸ்ரீராமாநுஜர் காலத்தில் பலர் விஷிஷ்டாத்வைதிகளானார்கள். ஸ்ரீ மத்வரின் காலத்தில் பலர் மத்வ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஸ்ரீ ஆதி சங்கரரின் காலத்தில் அவைதிக மதங்களான பௌத்தம், ஜைனம் முதலியவற்றுக்கு நலிவு ஏற்பட்டது. வைதிக மதத்தில் ஒரு பாகமாகிய கர்ம மார்க்கத்தை மட்டும் அநுசரித்து வந்தவர்கள் அவரது காலத்தில் பூரண வைதிகமான அத்வைதத்துக்குத் திரும்பினார்கள். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த மதங்கள் பிற்பாடு ஏன் தவிடு பொடியாக வேண்டும்? இப்படியாக ஒரு சமயத்தை, சித்தாந்தத்தை ஏற்கிற சகல ஜனங்களும் அதன் தத்துவங்களை ஆராய்ந்து பார்த்து அதனால்தான் அதில் சேருகிறார்களா? அறிவாளிகள் வேண்டுமானால் சித்தாந்தங்களை எடை போட்டு அதில் சேரலாம். ஆனால், ஒரு மதத்திலுள்ள ஏராளமான பொது ஜனங்களைப்பற்றி இப்படிச் சொல்லலாமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன்.

பொது ஜனங்கள் தத்துவத்துக்காகவே ஒரு மதத்தை ஏற்கிறார்கள் என்றால், அவர்களிடம் ‘உங்கள் மத சித்தாந்தங்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்கும்போது அவர்களுக்குச் சொல்லத் தெரியவேண்டும். மற்ற சித்தாந்தங்களை விட இவை சிரேஷ்டமானவை என்பதற்கு அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு அந்தந்த மதத்தைப் பற்றிய கொள்கைகள் இப்படி விவாதிக்கிற அளவுக்கு நுணுக்கமாகத் தெரியாது. நம்முடைய ஹிந்து மதத்தில் உள்ளவர்களுக்கோ அடியோடு தெரியவே தெரியாது.

எனவே, எந்த மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பதுதான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை. நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருணையும் சாந்தமும் உள்ளவராக ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள். மாறாக, ஒரு மதக்கோட்பாடுகள் எத்தனைத்தான் பரம தத்துவங்களை விளக்கினாலும், அந்த மதப் பிரதிநிதியாக இருக்கிறவர்களிடத்தில் ஒழுங்கு தப்பிவிட்டால் உடனே அந்த மதம் அழியத் தொடங்கி விடுகிறது. ஒன்றுக்கொன்று நேர் விரோதமான தத்துவங்களைக் கொண்ட மதங்களுக்கு ஏன் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள் என்றால், இதற்கு நேராக (Direct) காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘இதுவே விசேஷமானது’ என்று ஜனங்கள் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்த மதங்கள் எப்படி மங்கி அழிந்தன என்று பார்த்தால், அதற்குக் காரணம் தெரிகிறது. இதிலிருந்தே அவை எப்படி ஜனங்களை முதலில் கவர்ந்தன என்பதற்கும் பதில் கிடைக்கிறது. அதாவது, ஒரு மதம் எப்படி அழிகிறது என்று பார்த்தாலே அது எப்படி வாழ்கிறது, வளர்கிறது என்பதும் புரிகிறது.

எந்த தேசத்திலும் எந்த ஒரு மதமும் எப்படி அழிந்தது என்று பார்த்தால், அந்த மதத்தை வளர்க்கிற ஸ்தாபனங்களிலும், அதன் முக்கியஸ்தர்களிடமும் ஒழுங்கீனம் உண்டானபோதே இந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது.

புத்தர் வந்தார். அவரது சரித்திரத்தைக் கேட்கக் கேட்க பால் வடிகிற அவரது விக்கிரகங்களைப் பார்க்க பார்க்க நமக்கே சாந்தமும், கருணையும், ஆனந்தமும், அவரிடம் ஒரு மரியாதையும் உண்டாகின்றன. அந்த காலத்துத் ஜனங்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பௌத்த விஹாரங்களில் எத்தனை ஒழுக்கக் கேடு ஏற்பட்டது என்பதை மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாஸப் பிரஹஸனம்’ என்கிற ஹாஸ்ய நாடகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். இதே காலத்தில்தான் புத்த மதம் மங்கிப் போகத் தொடங்கியது. அதாவது சமயப் பிரதிநிதிகள் தன்மையைப் பொறுத்தே சமய வளர்ச்சியும் நலிவும் ஏற்படுகின்றன.

புத்தருக்குப் பிறகு ஆதிசங்கரர் பரம உத்தமமான மனிதராக வந்தார் என்றால் ஜனங்கள் அவரிடம் திரும்புகிறார்கள். அப்புறம் ராமாநுஜர், மத்வர் என்று இப்படித் தங்கள் சொந்த வாழ்க்கையில் உயர்ந்தவர்களாக விளங்கியவர்கள் வந்தபோது, அந்தத் தனி மனிதரிடம் ஜனங்களுக்கு உண்டான பிடிப்புக் காரணமாக, அவரது சித்தாந்தம் பரவியது. சமீபத்தில் சாந்தத்தோடும் தன்னலமில்லாத தியாகத்தோடும் ஒரு காந்தி வந்தார். உடனே அவர் சொன்னதையே ‘காந்தீயம், காந்தீயம்’ என்று ஒரு மதமாக கோடாநு கோடி ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள். தத்துவச் சிறப்பால்தான் ஒரு சித்தாந்தம் வளருகிறது என்றால் இன்றைக்கும் அந்தக் காந்தீயம் உச்சத்தில் இருக்க வேண்டும். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

பலாத்காரத்தினாலோ, பணத்தைக் காட்டியோ பொது ஜனங்களை இழுக்கிற மதங்களைப் பற்றி இங்கே கேள்வியில்லை. பலவிதமான சமூக சேவைகளை, ஒத்தாசைகளை செய்துவிட்டு, உடனே ஞானஸ்நானம் பண்ணி வைக்கிறேன் என்று ஒரு மதம் இழுத்தால், பாமர ஜனங்கள் அதில் வசியப் பட்டுத்தான் போவார்கள். முக்கியமாகப் பஞ்ச காலத்தில் கிறித்துவ மதம் வளர்ந்தது என்று இதனால்தான் சொல்வதுண்டு. இப்படியே அடிபிடிக் கட்டாயமாக இஸ்லாத்தைப் பரப்பியபோது தன்னிச்சையில்லாமலும் கூட்டம் கூட்டமாகப் பலர் அதில் சேர்ந்ததாகச் சொல்வதுண்டு. இங்கேயும்கூட தத்துவத்திற்காகப் பொது மக்கள் ஒரு மதத்தில் சேர்ந்து விடவில்லை என்ற மட்டில் நிரூபணமாகிறது. இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். முக்கியமாகத் சேரி மக்களைத்தான் பாதிரிமார்கள் மதம் மாற்ற முற்பட்டார்கள். ‘உங்களை எல்லாம் உங்கள் மதத்தில் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்; எங்களிடம் வந்தால் உயர்த்தி விடுகிறோம்; படிப்பு, வைத்தியம் எல்லாம் இலவசமாகத் தருகிறோம்’ என்று செல்வாக்கோடு ராஜாங்கத்தின் ஆதரவோடு பிரகடனம் செய்தார்கள். அப்படியும் சேரி ஜனங்கள் எல்லோரும் அதில் போய்ச் சேரக் காணோமே! ஏராளமான அந்த மக்கள் தங்கள் பிறந்த மதத்தில் எத்தனை தாழ்த்தி வைக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பரவாயில்லை என்று நினைத்து, தங்களுக்கு இன்னொரு மதத்தால் கிடைக்கிற வசதிகளையெல்லாம் துச்சமாக நினைத்து, அதற்குப் போகாமல்தானே இருந்திருக்கிறார்கள். இப்படி இருந்ததற்கு அவர்களுடைய நல்ல பண்பு ஒரு காரணம் என்பது இருக்கட்டும். இன்னொரு காரணம். நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ‘இந்த மகான் இருக்கிற மதத்திலேயே நாமும் இருப்போம்’ என்று அதிலேயே சேரி ஜனங்கள் உள்பட எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. துவேஷிக்க வேண்டியதில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தியாவது அல்லது ஆசை காட்டி வசியப்படுத்தியாவது மற்றவர்களைத் தங்கள் மதத்தில் சேர்க்க நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் மதமே பரம சத்தியம் என்கிறதில் இருக்கிற நம்பிக்கைதானே? இதை ஏற்றால்தான் மற்றவர்களுக்கும் கதி மோக்ஷம் உண்டு; இப்படி அவர்களுக்கு ஒரு பெரிய க்ஷேமத்தை செய்வதற்கான பலவந்தம், வசியம் இவற்றைக் காட்டினால்கூடத் தப்பில்லை என்ற நல்லெண்ணத்திலேயே அவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றைக் கைக்கொள்ளாத எல்லா மதங்களும் அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. ஒரு மதத்தின் பிரதிநிதியிடத்தில் வெளி வேஷம் மட்டும் இருந்தால் போதாது; எந்தத் தத்துவத்தைச் சேர்ந்தவராயினும் அவருக்குத் தன்னல எண்ணமே இருக்கக் கூடாது; துவேஷம் கூடாது; நல்லொழுக்கம் இருக்க வேண்டும்; நல்ல தபஸ் இருக்க வேண்டும்; சாந்தமும் கருணையும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும்.

இப்படிப் பட்டவர்களை உண்டு பண்ணுவதே இப்போதும் நம் மதம் தழைக்க வழி. எதிர்பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இவர்களால்தான் இதுவரை யுகயுகாந்தரமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது. இனிமேலும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ முடியும்.

ஒருவன் சண்டை போட்டு மதம் மாறுகிறேன் என்றால் எதிர்த்துப் படை திரட்டிச் சண்டைபோட என்னால் ஆகாது. அல்லது கோடி கோடியாய் செலவழித்து ஆஸ்பத்திரி, ஸ்கூல் வைத்து ஒருவன் மதமாற்றம் செய்கிறான் என்றால், அதைப் போலப் கோடிக் கணக்கில் செலவழிக்க எனக்கு ஐவேஜியில்லை. இது இரண்டும் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலுங்கூட, இதனால் செய்யும் மாறுதல் உண்மையானதும் (genuine) இல்லை; அது நிலைத்தும் நிற்காது. ஏனென்றால், நம்மை விடவும் பலிஷ்டர்களாகவோ, நம்மைவிடவும் ரொம்பப் பணவசதி உள்ளவர்களாகவோ இன்னொரு கூட்டம் வந்தால், அது நம் பலத்தாலும் பணத்தாலும் செய்ததை எல்லாம் அழித்துவிட்டு, தானே ஜயித்துவிடும்! ஆனபடியால் இந்த வெளிச் சக்திகளை நம்பிக் கொண்டிராமல், நம் ஆத்ம சக்தியை நம்பி உள்ளுக்குள்ளே நம்மை உயர்த்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது. அப்போது எந்தப் பிரசாரமும், சண்டையும், வசியமும் இல்லாமலே நம் மதம் தழைத்து வாழும். இப்போது இதர தேசங்களில் புத்திமான்கள் ஏராளமாக, ‘அத்வைதம், அத்வைதம்’ என்று அதைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டிருப்பதற்கு அதன் சித்தாந்தச் சிறப்பு காரணமாக இருக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி பண்ணி, ஆத்ம விசாரம் பண்ணி நம் வேதாந்தத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இது பொது ஜனங்கள் எல்லாருக்கும் பொருந்தாத விஷயம். அவர்கள் பிடித்துக் கொள்ள ஓர் உத்தம ஜீவன்தான் வேண்டும்.

இப்படி ஒருத்தன் சாந்தமும், கருணையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை.


29.  பரோபகாரம்
மஹா பெரியவா அருளுரைகள்

சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும்,சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.

பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?

இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.

ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.

ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.

ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்;நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.

ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.

‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.


30  குற்றம் காணேல் 
மஹா பெரியவா அருளுரைகள்

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தர்மப்படி வாழ்வு நடந்த வேண்டுமானால், சகல காரியங்களிலும் விதிப்படி நடக்க வேண்டியிருக்கிறது. இந்த விதிமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ரொம்பவும் அவசியம். ஆனால் அவற்றை அவர்களாக ஏற்று, சுயேச்சையாகப் பின்பற்றுவதே அழகு. ஒருவரை நிர்பந்தப்படுத்தி விதிகளை அநுசரிக்கச் செய்வதில் பெருமை இல்லை. ‘சம்பிரதாயம்’ என்பது தானாக வழிவழியாக வந்திருக்கிறது. மக்கள் அதைத் தாமாக ஏற்றுப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். சம்பிரதாயத்தில் வந்துள்ள அத்தனை விதிமுறைகளையும் சாஸ்திரத்தில் சட்டம் போல் எழுதி வைக்கவில்லை. சட்டம் என்று எழுதி விட்டால் அது நிர்பந்தமாகிவிடுகிறது என்பதே காரணம். ‘ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக’ (ஆயிரம் விஷயங்களை வாயால் எடுத்துச் சொல்லு; ஆனால் ஒன்றைக்கூட எழுத்திலே எழுதி வைத்துக் கட்டாயப்படுத்துவதே) என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இப்போது ‘இதைச் செய், அதைச் செய்’ என்று எதற்கெடுத்தாலும், எங்கே பார்த்தாலும் நோட்டீஸ் போடுவதும், எழுதி வைப்பதுமாக இருக்கிறது. நான் பூஜை செய்கிற இடத்திலேயே ‘பேசாதே, சட்டை போட்டுக் கொள்ளாதே’ என்றெல்லாம் எழுதி வைக்கிறீர்கள். இனிமேலே இப்படிச் செய்ய வேண்டாம்.

நான் இப்படி விதி மாதிரி உங்களைக் கண்டித்து, நிர்பந்தப்படுத்திச் சொல்லும்போது, நானே இதுவரை சொன்ன நல்ல விதியை மீறுகிறேன்.

‘செய்ய வேண்டாம்’ என்கிற போதே நிர்ப்பந்தமாகச் சட்டமாக்கி விடுகிறேன். அது தப்புதான். ‘இப்படியெல்லாம் எழுதலாமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்’ என்று நான் சொல்லியிருந்தால் அதுதான் முறை.

‘ஒருவரிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதைப் பெரிது படுத்தாதே. சிறிது குண விசேஷம் இருந்தாலும் அதையே கொண்டாட வேண்டும்’ என்பது பெரியோர் உபதேசம். நானே உங்கள் தவற்றை இப்போது அம்பலப்படுத்துகிறேன். பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது; அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். தேய்ந்துபோன சந்திர கலைக்கும்கூடக் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார். அதே ஈசுவரன் மகா கொடிய ஆலகால விஷத்தை யார் கண்ணிலும் தெரியாமல் தம் கண்டத்தில் ஒளித்து வைத்திருக்கிறார். இவ்வாறு தண்டி என்ற கவி கூறுகிறார்.

ஆனால் தோஷம் பார்க்கிறதும், அதைப் பெரிதுபடுத்திப் பேசுவதும் எழுதுவதுமே பொதுவில் தற்காலத்தில் மிக அதிகமாகியிருக்கிறது. அதிலும் நிறையப் படித்தவர்கள் நிறையக் குற்றம் காண்பார்கள். “குற்றம் கண்டுபிடிப்பதுதான் அறிவாளியின் காரியம். ‘வித்வான்’ என்றாலே ‘தோஷக்ஞன்’ என்று லட்சணம் சொல்லியிருக்கிறது” என்று இவர்கள் வாதம் செய்யலாம். ‘தோஷக்ஞன்’ என்றால் குற்றம் அறிந்தவன் என்றே அர்த்தம். குற்றத்தைப் பெரிதுபடுத்திப் பிரசாரம் செய்பவன் என்றல்ல. குற்றம் குறைகளை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். குற்றம் உள்ளவர்களுக்கும் இதை இதமாக எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஓயாமல் தோஷம் பாராட்டிக் கொண்டும் அதைப் பிரசாரம் பண்ணிக் கொண்டும் இருக்கக்கூடாது.

தோஷமுள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நமக்குப் பூரண யோக்கியதை இருக்கவேண்டும். நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால், அது பிரயோஜனப்படாது. சில சமயங்களில் நாம் சொல்வதாலேயே அவர்கள் முன்னைவிட வீம்பாகத் தங்கள் தவற்றை வெளிப்படச் செய்யவும் தொடங்கலாம். ‘நமக்கு யோக்கியதை இருக்கிறது. ஸ்தானம் இருக்கிறது. நம் வார்த்தை எடுபடும்’ என்று நிச்சயமானாலே பிறருக்கு உபதேசிக்கலாம்.

ஒருவரது நல்ல அம்சத்தைக் கொண்டாடுவதால் அவருக்கு மேலும் உற்சாகம் உண்டாகிறது. இந்தக் குணங்களை விருத்தி செய்து கொள்கிறார். ஆனாலும் ஒருவரைப் புகழுவதிலும் நமக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேயடியாக ஸ்தோத்திரம் செய்து, ஒருவரை அகங்காரத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. புகழ்ச்சி ஒரு நுட்பமான விஷயம். இதனால்தான் பெரியோர்கள், “ஈசுவரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம்; பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும்; (சவாரி முடிந்த பின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல்) வேலையை முடிந்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம்; பிள்ளையை ஒரு போதும் புகழக்கூடாது” என்றார்கள்.

ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா:

பரோக்ஷே மித்ர பாந்தவா: |

கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச

ந ஸ்வபுத்ரா: கதாசன ||

இப்போது, நான் உங்கள் மேல் குற்றப் பத்திரிகை படித்ததற்கும் சமாதானம் சொன்ன மாதிரி ஆகிவிட்டது. தன் சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொன்னதால், நான் உங்களைத் தோஷம் சொன்னதிலும் தோஷமில்லைதான் !


31  காமம் குரோதம்
மஹா பெரியவா அருளுரைகள்

‘காமம் குரோதம்’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருக்கிறார்.

ஒரு வஸ்துவிடம் ஆசை உண்டாகி விட்டால், அதைத் தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப்பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்குப் பெரிய சத்ரு. அதே போன்ற இன்னொரு சத்ருவே கோபம். நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காதபொழுது இதற்குத் தடையாக இருந்தவர்கள்மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது.

ரப்பர் பந்தைச் சுவரில் ஏறிகிறோம். அது எதிர்த்துக் கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வருகிறபோது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனசு இரண்டுக்கும் கோபத்தினால் பெரிய கிலேசம் உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் ரௌத்ராகாரமாகச் சத்தம் போடும்போது நம்மை யாரேனும் போட்டோ பிடித்து, அப்புறம் நம்மிடம் காட்டினால் போதும். கோபாவேசத்தில் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு வெட்கப்படுகிறோம்.

சாதாரணமாக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களைத் தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாச மயமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டுச் செல்கிற பண்டங்களை எல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக் கொண்டு போகிறது. இதனால் நெருப்புக்கு ‘கிருஷ்ண வர்த்மா’ என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. காமமும் இப்படிப்பட்ட ‘கிருஷ்ண வர்த்மா’ தான். அது தீயாக எரிகிறது; அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது; அது நம் மனசையே கறுப்பாக்கிக் விடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிற போது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும் சந்தோஷத்தையும் குலைத்துக் கொண்டு அழுகையையும் கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை துக்கத்தில் உண்டாவது.

நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தாம் துக்கமும் கோபமும். நம் ஆசையின் நிறைவேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் நம்மைவிடக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்து விட்டால் கோபித்துக் கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியைவிடப் பெரியது. இதை நள சரித்திரமான ‘நைஷதம்’ வெகு அழகாகச் சொல்கிறது. கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாகக் காமனும் குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? ‘காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்தக் கோட்டைக்குள்ளும் இந்தக் குரோதன் குடி கொண்டிருக்கிறானாக்கும். அது எந்தக் கோட்டைத் தெரியுமா? துர்வாஸருடைய இதயம்தான்’ என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாஸ மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்று தாத்பரியம்.

நாம் இந்த மகாபாவியான குரோதனிடம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் நமக்கே தெரியும்; யாரையும் கோபித்துக் கொண்டு சத்தம் போட நமக்கு சிறிதும் யோக்கியதை இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக் கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகளை, அதைவிடப் பெரிய தவறுகளைக்கூட செய்தவர் நாம் என்பதும் நம் அந்தராத்மாவுக்குத் தெரியும். அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்தச் சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

குரோதன் நம்முடைய பெரிய சத்ரு. அவனை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

32  அன்பே சிவம்

மஹா பெரியவா அருளுரைகள்

நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால்,அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் எவரிடமும் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே,அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனை பாபி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாபத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனஸால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாபங்களைப் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாபமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஓர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாபத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாபம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாபங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான். அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத் ஸங்கத்தைவிட்டு ஸத் ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மாபிவிருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன. ஆனால் பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவராநுக்கிரகத்தில் நம்மில் யாருக்காவது அநுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கடைத்தேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.
நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

ஒருத்தன் பாபம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாபங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது, ‘அம்பிகே! இந்தப் பாபத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவற்றுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புத் கண்டுபிடித்து கோபிக்க நியாயம் ஏது?

‘நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?’ என்றால் இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மநுஷ்யனைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.

33.  பிறவி எடுத்ததன் பயன்
மஹா பெரியவா அருளுரைகள்

மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில், தாற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும் பணச்செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே.

அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒருநாள் அவர் நம்மைவிட்டுப் போயே போய் விடுகிறார். அல்லது நாமாவது அவரை விட்டு ஒருநாள் போகத்தான் போகிறோம். அப்போது, ‘ஐயோ, நம்மிடமிருந்து போய்விட்டாரே’ என்றோ, அல்லது ‘ஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே’ என்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்திலேயே முடிந்தது என்று மனசு கலங்குகிறோம். அன்பின் முடிவான பலன் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகி விடுகிறது. எத்தனைக்கெத்தனை அன்பு வைத்தோமோ, அத்தனைக்கத்தனை துன்பம் பிரிவின் போது உண்டாவதைப் பார்க்கிறோம். அன்பே செலுத்தாமல் சுய காரியவாதியாகவோ, அல்லது ஜடமாகவோ இருக்கிற ஜன்மாவே சிலாக்கியமானதோ என்று கூடத் தோன்றிவிடும். அப்படிப் பட்டவனுக்கு இந்தப் பிரிவுத் துன்பமே இல்லையல்லவா?

ஆனால் உண்மையில் சுய காரியவாதி பாபத்தைத்தான் மூட்டைக் கட்டுகிறான். மனிதப் பிறவி எடுத்துவிட்டு, ஆனந்தம்,நிறைவு முதலியன இல்லாமல் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதும் பிரயோஜனம் இல்லை.

அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.

அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.

அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்ம ஸ்வரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.

எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி,அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ‘பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார்’ என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்போம். நம் அன்பு கொஞ்சம்கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுக்களிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்தன் பயன்.

34. உண்மையான சுதந்திரம்

மஹா பெரியவா அருளுரைகள்

சுதேசி, சுயராஜ்யம் என்று இப்போழுது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்,நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் வெள்ளைக்காரன் மாதிரி இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இவைகளெல்லாம் உள்ள மட்டும் நாம் பரதேசிகள் தான்; நம் நாடு பராதீனத்திலுள்ள ராஜ்யம்தான். வாஸ்தவமான சுயராஜ்யம் வரவேண்டுமென்றால் நம்முடையை தேசத்தின் ஆசார அநுஷ்டானங்கள் எப்படி இருந்தன என்பதைக் கவனித்து, இப்பொழுது இருப்பதை அப்படி மாற்றினால் நல்லது என்று உணர்ந்து, அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்வதுதான். நம்முடைய தேசத்துப் பழைய வழக்கங்கள், தர்மங்கள், ஆத்ம சம்பத்துக்கள் மாறாமல் இருக்க வேண்டும். பிற தேசத்தார்கள் மாதிரி நாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வெளிநாட்டார் சொல்லாமலே, நாமே அவர்களுடைய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டபின், அரசியலில் மட்டும் அடிமைத்தனம் இருந்ததென்ன, போயென்ன?

உண்மையான சுயராஜ்யமானால், நம்முடைய சுதந்திரப்படி நடத்தும் சட்டசபை எனில், நம்முடைய தர்மராஜ்யம் ஆதியில் எப்படி இருந்தது, அதை மீண்டும் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென்பதை ஆலோசிக்க வேண்டும். நமக்கென்று ஒரு பண்பாடும், நாகரிகமும் உண்டு. இருக்கட்டுமே; அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்றால், ‘நமது’ என்கிற வெறும் பாசத்துக்காக இப்படிச் சொல்லவில்லை. எத்தனையோ புராதன நாகரிகங்கள் காலப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டு போனபோதிலும், நம் பண்பாடும், நாகரிகமும் பாறாங்கல் போல எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருப்பதாலேயே இதற்கு ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்கிறதென்று உணர்ந்து, அதையே நாமும் அநுசரித்து வாழவேண்டும். நாம் நாமாக இருக்க வேண்டும். எவ்வளவு பலம் நமக்கு உண்டோ அவ்வளவையும் நம்மை நிஜமான நம்மவர்களாக்குவதில் உபயோகப்படுத்த வேண்டும்.

வெள்ளைக்கார வேஷத்திலே உள்ள நம்மவர்கள் சட்டம் செய்கிறார்கள்;அதற்கு அடிமையாக நாம் இருக்கிறோம் என்றால் அதில் சுதந்திரத்தின் சாரமே இல்லை. நம்முடைய சம்பிரதாயங்களை அநுசரிக்காதவர்களுக்கு வோட்டுக் கொடுத்து வரும் ராஜ்யம் அடிமை ராஜ்யம்தான். லௌகிக விஷயங்கள்கூட ஆத்ம சம்பந்தமாகவும் தெய்வ சம்பந்தமாகவும் இருந்த முறைதான் நம்முடையது. அதன்படி இருந்தால் உத்கர்ஷத்தை (உயர்வை) அடையலாம் என்பதை அறிந்து, நமக்கு எந்த மாதிரி ஸ்வதந்திரம் உண்டோ அதை, அந்த முறையை நிலை நிறுத்துவதிலேயே பயன்படுத்த வேண்டும். தர்மம், தொழில்முறை முதலியவைகளை அறிந்தவர்களையும், அநுஷ்டானம், ஒழுக்கம் உடையவர்களையுமே ராஜ்ய நிர்வாகத்தில் வைத்துக் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடைய சாஸ்திரப்படி தர்ம ராஜ்யத்தை ஸ்தாபித்து, இது நன்றாக நடக்கிறது என்று காட்டி, மற்ற தேசத்தவர்களும் இதை அநுசரிக்கச் செய்ய வேண்டும். அப்படி நடத்திக்காட்டுவதற்கு நம்முடைய சாஸ்திரங்களையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். வழிகாட்டும் புஸ்தகங்கள் பல இருக்கின்றன. இவை இருப்பதால்தான் நானும் இதையெல்லாம் சொல்லவாவது முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் மறந்து போயிருக்கும். அவைகளைப் பார்த்து அந்தப்படி ஏன் நடக்கக்கூடாது? அந்தப்படி பண்ணுகிறவர்களை ஏன் சட்ட சபைக்கு அனுப்பக்கூடாது என்று எல்லா ஜனங்களும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை இவ்விதம் பிரயோஜனப்படுத்தி, லோகத்தில் தர்மத்தை நடத்திக் காட்டி, மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டிப் பரமேசுவரனுடைய அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்.

35 சித்தசுத்தி
மஹாபெரியவா அருளுரை.

‘அனைத்து அறன்’, அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’, அதாவது, தங்கள் மனஸைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர ஸேவை என்று நினைத்து ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்க சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ’வாகவுமே முடிந்து போகும். இந்த படாடோபத்தால் ‘ஸேவை’ என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய ஸேவையை அடக்குமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டதாகிவிடும்.

”தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்” என்றால் இது ஸ்வயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான ஸ்வயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய ஸுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான ஸ்வயநலம். மனஸை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்த்ரிய ஸெளக்கியங்களிலிருந்து நம் மனஸை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது. ‘உபகாரம்’ என்றால் பிறத்தியாருக்குச் செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரைக் கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே, மனஸ் என்ற ஒன்றைக் கொடுத்து அதை நல்லது கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே! இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு, மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்கலாமா? மனஸை நல்லதிலேயே செலுத்தி, பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரைப் பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்னதான ஸ்வயநலத்தைவிட்டு, இந்தப் பெரிய ‘ஸ்வயநல’த்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.

இப்படிச் செய்வதற்குப் பரநலப் பணிகளே ரொம்பவும் ஸஹாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை – இவன் மனஸ் சுத்தமாக இருந்தால்தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது, பலன் தருகிறது; பரோபகாரத்தால் தான் இவன் மனஸே சுத்தமாகத் தொடங்குகிறது என்றால் contradiction(முரண்) மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை. முதலில் இவனுக்கு மனஸ் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும். மனஸ் லேசில் கட்டுப்பட்டு வரத்தான் வராது. இந்திரிய ஸெளக்யத்தையே நினைத்து அது திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்போது, ‘ஐயோ, இது திருந்த வேண்டுமே! ‘என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத்துக்கே ஒரு நல்ல சக்தி ( effect ) உண்டு. இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போதும் ஓடுகிற மனஸை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது, complementaryஎன்கிறார்களே, அப்படிப், பரோபகாரப் பணி மனஸைக் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பண்ணப் பணண, அந்தச் சித்த சுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகிக் கொண்டு சக்தியோடு பலன் தர ஆரம்பிக்கிறது. இப்படிப் பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்துக் கொண்டு, பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க ஸரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுஸான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை ஸேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம். ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும்;கர்ம வாஸனையால் ஏற்ப்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும். இதனால்தான் திருவள்ளுவர், ”வெளியில் உன் தொண்டு பலன் தந்ததா என்று proof (நிரூபணம்) தேடாதே! உன் மனஸிலே அழுக்கு போச்சா, மனத்துக்கண் மாசிலன் ஆனாயா என்று பார்த்துக்கொள். இந்த உள் proof – இதை யாரும் உன்னிடமிருந்து ஒளிக்க முடியாது – கிடைத்துவிட்டால் நீ பண்ணின தர்மம், அறன் பலித்துவிட்டது என்று அர்த்தம்” என்று சொல்கிற மாதிரி குறளைப் பண்ணியிருக்கிறார்.

36  ஸநாதன தர்ம ஸாரம்

மஹாபெரியவா அருளுரை

வைதிக தர்மத்துக்கு ஸாரமாக இருப்பது பஞ்ச மஹாயஜ்ஞங்கள் என்ற ஐந்து வேள்விகள். இவற்றில் ‘ப்ரம்மயஜ்ஞம்’ என்பது வேதம் ஓதுதல், ஓதுவித்தல். இதுவே நிஜமான வித்யா தானமாகிய பெரிய பரோபகாரம். ‘பித்ரு யஜ்ஞம்’ என்பது முன்னமே சொன்னாற்போல் மூதாதைகளுக்குச் செய்யும் தர்ப்பணம். ‘தேவ யஜ்ஞம்’ என்பது ஈஸ்வர ஆராதனம். இது தான் மற்ற எல்லா தான தர்மங்களுக்கும் பூர்த்தி ஸ்தானம். ‘பூத யஜ்ஞம்’ என்பது நாயும், காக்கையும் உள்பட எல்லா ஜீவராசிகளுக்கும் பலி போடுவது. ‘ந்ரு யஜ்ஞம்’ என்பது அதிதியை உபசாரம் பண்ணுவது. பஞ்ச மஹாயஜ்ஞங்களைப் பார்த்தால் நம் வேத மதத்தைப் போல் பரோபகாரத்தைக் கார்யத்தில் கட்டாயமாக விதித்திருக்கிற மதம் வேறு இல்லை என்றே தோன்றுகிறது. ஸ்ருஷ்டியில் ஒரு பிரிவைக்கூட விடாமல் உபகாரம் பண்ணி வைப்பது பஞ்ச மஹா யஜ்ஞம்.

இது தவிர ‘பூர்த்தம்’ என்ற பெயரில் ஸோஷல் ஸர்வீஸைப் பற்றி தர்ம சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது.

37  உபகாரம் 

மஹாபெரியவா அருளுரை.


கல்யாணம், உபநயனம் முதலியவற்றில் குறைவில்லாமல் தக்ஷிணை தருவது மட்டுமின்றிப் பொதுவாகவே வைதிகர்களுக்கு உபகாரம் செய்கிற எண்ணம் வளர வேண்டும். இது இல்லாததால்தான் அடுத்த தலைமுறைக்கு வைதிக கார்யம் செய்து வைக்கவே ஆள் கிடைக்காத மாதிரிச் செய்திருக்கிறோம். வேத ஸம்பந்தமான கார்யங்கள் லோகத்தில் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கும்படி பண்ணுவதைவிட ஜன ஸமூஹத்துக்குப் பெரிய பரோபகாரம் எதுவும் இல்லை. இப்போது விநோபா ‘பூதான்’ என்று சொல்வதற்கு முன்னோடி பழைய காலத்தில் ராஜாக்களும், பிரபுக்களும் வேத வித்துக்களுக்கு நிலம் மானியம் பண்ணினதுதான்.

பரம தரித்ரர்களும் சாஸ்தரப் பிரகாரம் சுபாசுபங்களைச் செய்ய நாம் உபகரிக்க வேண்டும். ‘ஷோ’ இல்லாமல் சாஸ்த்ரப்படி மட்டும் செய்வதற்கு நிறையச் செலவே இராது.

என் பரோபகார லிஸ்ட் நீண்டுக்கொண்டே வருகிறது. அதிலே ஒவ்வொரு ‘லொகாலிடி’யிலும் பரம ஏழைகளும் சொற்ப வாடகையில் பெறுமாறு ஒரு கல்யாண மண்டபம், ஒரு அபர காரிய ஸ்தலம் [உத்ர க்ரியைகள் செய்யுமிடம்] ஏற்படுத்துவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

38 வார வழிபாட்டுச் சங்கம்

மஹாபெரியவா அருளுரை.

‘வார வழிபாட்டுச் சங்கம்’ என்று ஊருக்கு ஊர் இருக்க வேண்டும் என்று நான் ஓயாமல் சொல்லி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாரத்தில் ஒருநாள் ஜனங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கோயிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதர மதஸ்தர்கள் அத்தனைபேரும் இதை யாரும் சொல்லாமலே தாங்களாகச் செய்து வருகிறார்கள். இதன் ப்ரத்யக்ஷ சக்தியால்தான் அவர்களுக்குப் புது ஸ்வதந்திர தேசமே முதற்கொண்டு கிடைக்கிறது! நமக்கோ லோகம் முழுக்க ஏற்கனவே இருந்த கௌரவமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது! நம் ஜனங்கள் எல்லாரும் வாரத்தில் ஒரு நாளாவது ஒன்று சேர்ந்து தங்கள் கோணா மாணாவையெல்லாம் விட்டுவிட்டு பகவானிடம் கொஞ்சம் மனஸைக் கரைத்தால்தான் இந்த தேசத்துக்கு ஏதாவது நல்லது பிறக்க முடியும் என்றுதான் ‘வார வழிபாட்டுச் சங்கம்’ நிறுவச் சொல்லி அநேக இடங்களில் ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களே மேலே சொன்ன மற்ற பரோபகார, ஜீவாத்ம கைங்கர்யப் பணிகளையும் எடுத்து நடத்த வேண்டும். தனி ஆர்கனைஸேஷன் எதுவும் வேண்டாம்.

மாயவரத்திலிருக்கிற திருப்பாவை-திருவெம்பாவைக் குழு இம்மாதிரி அநேகப் பணிகளைத் திட்டம் போட்டுச் செய்து வருகிறது. அதன் முக்ய நோக்கம் பாவை மஹாநாடு நடத்துவதும், பாவைப் புஸ்தகங்களைப் பள்ளிக்கூடப் பசங்களுக்கு ஃப்ரீயாக டிஸ்ட்ரிப்யூட் செய்து பரீக்ஷை பண்ணி, ப்ரைஸ் தருவதும்தான். இவற்றோடுகூட (1) ஜெயில் கைதிகளுக்கு பக்தி நூல்கள் கொடுப்பது; அவர்களை பஜனை பண்ண வைப்பது, (2) ஆஸ்பத்திரி நோயாளிகளுக்குப் பிரஸாதமும், ஸ்தோத்ரப் புஸ்தகங்களும் விநியோகிப்பது, (3) ஸத்ஸங்கம் யார் ஏற்படுத்தித் தெரிவித்தாலும் அவர்களுக்கு மத ஸம்பந்தமான பிரசுரங்கள் அனுப்புவது, (4) அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் பண்ணுவது, (5) வெட்ட வெளியில் கோயிலில்லாமல் இருக்கிற மூர்த்திகளுக்கும், இடிந்து பாழான கோயிலிலுள்ள மூர்த்திகளுக்கும் கொட்டகை போட்டு, அங்கே, பூஜைக்கு ஏற்பாடு பண்ண முடியாவிட்டாலும், ஒரு அகலையாவது ஏற்றி வைக்கப் பண்ணுவது, (6) , கோயில் நந்தவனங்களைப் பராமரிப்பது, (7) பசுக்களுக்கு மேய்ச்சல் திடல் வளர்ப்பது; அதுகள் சொறிந்து கொள்ளக் கல் நாட்டுவது, (8) சுமைதாங்கி நாட்டுவது, (9) வார வழிபாடு என்கிறனே, அதன்படி பிரதிவாரமும் ஒரு கிழமையில் பகவந் நாம பஜனையுடன் உள்ளூரிலோ, வெளியூரிலோ அருகேயுள்ள ஒரு கோயிலுக்குப் போய்ப் பிரதக்ஷிணம் பண்ணி கோபுர வாசலில் கொஞ்சம் கொஞ்சம் நாழி மௌனம், த்யானம், நாம ஸ்மரணம், ஸங்கீர்த்தனம், பிரவசனம் முதலியன பண்ணுவது – என்று பல காரியங்களை செய்கிறார்கள்.

”வாரத்தில் ஒரு நாள் கூட்டு வழிபாடு, வாரத்தில் ஒரு நாள் பொதுப்பணி என்றால் எப்படி முடியும்? ஒரு நாள் தானே ‘லீவ்’ இருக்கிறது?” என்று கேட்பீர்கள். அந்த ஒரு நாளிலேயேதான் இரண்டையும் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன். தெய்வப்பணி, ஸமூஹப்பணி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.

முதலில் கோவில் வாசலில் எல்லா ஜனங்களும் சேர்ந்து வழிபட்டு, அத்தனை பேரும் அந்த ஒரே பராசக்தியின் குழந்தைகளாகச் சேர்ந்து பகவந் நாமத்துடனயே கோவிலைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போய்க் குளம் வெட்டுவதையோ, ரோடு போடுவதையோ, நந்தவனம் வளர்ப்பதையோ செய்ய வேண்டும். வேலையெல்லாம் முடிந்த பின்னும் கோவிலுக்கே திரும்பிவந்து, ”உன் க்ருபையால் இன்றைக்கு கொஞ்சம் பாபத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது;சரீரம் எடுத்ததற்குப் பயனாக ஓர் உபகாரம் பண்ண முடிந்தது” என்று நமஸ்காரம் செய்ய வேண்டும். கொஞ்சம் பஜனை – ஒரு பத்து நிமிஷம் இருந்தால் கூடப் போதும் – கொஞ்சம் உபந்யாஸம் நடத்தி விட்டு எல்லாரும் கலைய வேண்டும். அறுபத்திமூவர் அல்லது ஆழ்வாராதிகள் அல்லது பக்த விஜயத்தில் வரும் மஹான்கள் இவர்களைப் பற்றிய உபந்யாஸமாக இருந்தால், நம் மாதிரி மனிதர்களாக இருந்தவர்களே எப்படியெல்லாம் த்யாகத்தாலும், ப்ரேமையாலும் தெய்வமாக உயர்ந்திருக்கிறார்கள் என்று மனஸில் ஆழப் பதியும்.

39  ரந்தி தேவன் - 1
மஹாபெரியவா அருளுரை.

ரந்திதேவன் என்பவன் சந்திர வம்சத்தில் வந்த ராஜா. இவன் ஏகப்பட்ட யாகயஜ்ஞாதிகளைச் செய்த விஷயம் மஹாபாரதத்தில் வருகிறது. இப்படிக் கர்மாநுஷ்டத்திலேயே ஈடுபட்டிருந்ததால் இவனுக்கு ஜீவகாருண்யம் வற்றிவிடவில்லை என்கிற கதையை ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

பழைய சாஸ்திரங்களில் ‘இஷ்டம்’, ‘பூர்த்தம்’, என்று ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘இஷ்டம்’ அல்லது ‘இஷ்டி’ என்பது யாக யஜ்ஞாதிகள். தசரதன் புத்ர காமேஷ்டி பண்ணினான் என்கிறோமே, அது புத்ர காம இஷ்டி தான் – அதாவது பிள்ளையை விரும்பிச் செய்த இஷ்டி (யாகம்) .

‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம் உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர ஜனங்களிலிருந்து ச்ரௌதிகள் வரையில் ஏழை-பணக்காரன், அந்த-ஜாதிக்காரன் இந்த ஜாதிக்காரன் என்கிற பேதம் கொஞ்சம்கூட இல்லாமல் ஸகல ஜனங்களும் ஒன்று சேர்ந்து பண்ண வேண்டியதே பூர்த்தம். பூர்த்தத்தைப் பற்றிப் பின்னால் இன்னும் சொல்கிறேன். இப்போது ரந்திதேவன் கதையைப் பார்க்கலாம்.

இந்த ரந்திதேவன் யஜ்ஞங்கள் செய்து ஏகமாக தக்ஷிணை கொடுத்து, தானம் பண்ணினான். அவனுடைய கஜானா முழுக்கக் காலியாகி விட்டது. ஒரு செல்லாக் காசு பாக்கியில்லை. அப்படி வாரி வாரி, ”தேஹி” என்று வந்தவர்களுக்கெல்லாம் ”நாஸ்தி” என்று சொல்லாமல் தானம் பண்ணிவிட்டான்.

அப்போது பகவான், மஹாவிஷ்ணு, ஒரு சோதனை பண்ணினார். ராஜ்யத்திலே பெரிய பஞ்சம் வரும்படியாகப் பண்ணிவிட்டார். நியாயமாகப் பார்த்தால் யஜ்ஞம் செய்வதே மழை, தான்ய ஸம்ருத்திக்காகத்தான், இப்போது நேர்மாறாக ஒரே பஞ்சமாகிவிட்டது.

அப்போதும் ரந்திதேவன் தன்னுடைய உடைமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக தானம் பண்ணிக் கொண்டே வந்தான். கடைசியில் ராஜாவான அவனுக்கும், அவனுடைய ராஜ குடும்பத்துக்குமே ஒரு வேளை கூழுக்குக் கூட கதியில்லை என்கிற நிலைமை வந்து விட்டது. ஆனால் கொடுத்தே பழகிய அவன் யாசகம் பண்ணவில்லை. நாற்பத்தெட்டு நாள் – ஒரு மண்டலம் – குடும்பத்தோடு சுத்த உபவாஸம் இருந்து விட்டான். அப்பறம் எப்படியோ வெளியிலே ராஜ குடும்பம் பட்டினி கிடக்கிறது என்று தெரிந்து விட்டது. ஆனானப்பட்ட ராஜா – வள்ளலாகப் பிரஜைகளை ரக்ஷித்தவன் – குடும்பத்தோடு வயிறு காயக் கிடக்கிறான் என்றவுடன் யாரோ எப்படியோ கொஞ்சம் கோதுமைக் கஞ்சியும் தண்ணீரும் சேகரம் பண்ணி நாற்பத்தொன்பதாவது நாளன்று அவனுக்கும் அவனுடைய பத்தினி புத்தரர்களுக்குமாக அனுப்பிவைத்தார்கள்.

முதுகோடு வயிறு ஒட்டிக்கொள்கிற மாதிரிக் காய்ந்து கிடந்த ஸ்திதியில் இது தேவாம்ருதமாக வந்தது. ஆசையோடு அந்தக் கஞ்சியை ராஜகுடும்பத்தினர் வாயில் விட்டுக் கொள்ளப் போகிற ஸமயம். அப்போது பார்த்து ஒரு பிராம்மணன் அங்கே வந்து சேர்ந்தான், ”பிக்ஷாம் தேஹி”! என்று.

துளி அன்னம் விழுமா விழுமா என்று வயிறு தபித்து ஏங்கிக் கொண்டிருந்த ஸமயம். ராஜாவாக பஞ்ச பக்ஷ்யம் சாப்பிட்டவன் பஞ்சத்தில் அடிப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும்போது கடைசியில் கொஞ்சம் கஞ்சி கிடைத்ததென்றால், சொல்லி வைத்தாற்போல் அப்போது யாசகர் வந்து விட்டார்.

ரந்திதேவன் யாசகரைப் பார்த்தான். எப்படிப் பார்த்தான்?’ சனியன் பிடித்தவன் எங்கே வந்தான்?’ என்றா? இல்லை. ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனாகவே அந்தப் பிராம்மணனைப் பார்த்தான்.

‘நல்லவேளை, இதை நானே சாப்பிடாமல் இந்த க்ஷணத்தில் இவர் வந்தாரே! நான் பகவதபசாரம் செய்யாமல் காப்பாற்றினாரே! என்று ஸந்தோஷப்பட்டான்.

அவனுடைய பத்தினி புத்திரர்களும் உதார குணத்தில் அவனுக்குக் குறையாதவர்கள். எல்லாரும் தங்களிடமிருந்ததைப் பங்கு போட்டுப் பிராம்மணனுக்கும் கொடுத்தார்கள். அது இவர்களுக்கே போதும் போதாததாகத்தான் இருந்தது. ஆனால் அதிலே கணிசமாக ஒரு பங்கு யாசகருக்குக் கொடுத்து அவரைத் திருப்திப்படுத்தி அனுப்பினார்கள்.

பாக்கியை ராஜ குடும்பத்தினர் சாப்பிட இருந்தபோது மறுபடியும் ஒரு யாசகன் முளைத்தான். இப்போது வந்தவன் நாலாம் வர்ணத்தவன். பசிக்கும் கருணைக்கும் வர்ணம், ஜாதி என்ற பேதங்கள் உண்டா என்ன? இவர்கள் ஏற்கனவே குறைந்து போய்விட்ட கஞ்சியிலிருந்தும், தாங்கள் கால் வயிறு சாப்பிட்டால் போதும் என்று கொஞ்சமே வைத்துக் கொண்டு, பாக்கியை அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து விட்டார்கள். ராஜாவின் கண்ணில் இவனும் விஷ்ணுவாகத்தான் தெரிந்தான்.

மிச்சமிருந்த கஞ்சியில் மற்றவர்கள் தங்கள் பங்கைக் குடித்தார்கள். ரந்திதேவன் மாத்திரம் இந்த ஸமயத்திலும் இரண்டு ஜீவன்களுக்கு உபகாரம் பண்ணும்படியாக பகவான் அநுக்ரஹம் செய்ததையே நினைத்துக் கொண்டோ என்னவோ, சாப்பிடாமல் யோசனையில் இருந்தான்.

இவனுக்கு சாப்பிடுகிற எண்ணம் வந்த அதே ஸமயத்தில் மறுபடியும் ஒரு தீனக்குரல் வந்தது. மநுஷக் குரலோடு நாய்கள் குரைப்பு வேறு! நாய்களைப் பிடித்துக் கொண்டு ஒரு வேடன் வந்து நிற்கிறான். இந்தக் கஞ்சிக்குத்தான் போட்டியாக வந்திருக்கிறான்!

நாய்கள், நாய்க்காரான் எல்லோருமே ரந்திதேவனுக்கு நாராயண ஸ்வரூபமாகத்தான் தெரிந்தார்கள். வேதத்தில் ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை ‘நாய்களின் உருவத்தில் இருக்கிறவன்; நாய்களை வைத்திருக்கிற வேடனாக இருக்கிறவன்’ என்று சொல்லியிருக்கிறது. ரந்திதேவன் வாஸ்தவத்திலேயே அப்படி ஈஸ்வர ரூபமாகப் பார்த்தான்.

ரந்திதேவனுக்கு அப்படிப்பட்ட த்ருஷ்டி இருந்தது. ‘நாராயணன்தான் இப்படி நாய்களாகவும் அதைப் பிடித்துக்கொண்டு வருபவனுமாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். தனக்குப் பசியிருப்பதாக வேஷம் போடுகிறான். அதைத் தணிப்பதுதான் பகவத் ஆராதனம்’ என்று நினைத்தான். கொஞ்சம்கூட மனஸ் கலங்காமல் தன் பங்கில் பாக்கியிருந்த கஞ்சி முழுவதையும் அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டான். ‘நாய்க்கு நமஸ்காரம், நாயின் யஜமானுக்கு நமஸ்காரம்’ என்று ருத்ரம் சொல்கிற மாதிரியே அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணினான்.

இப்போது அவனிடம் இருந்ததெல்லாம் வெறும் தீர்த்தம்தான். ஒரே வறட்சிக் காலமாதலால் அந்தத் தீர்த்தம் கிடைப்பதுகூட ரொம்ப துர்லபமாகத்தான் இருந்தது. அதையாவது பானம் பண்ணினால்தான் இவனுடைய ஜீவன் உடம்பிலே நிற்கும் என்கிற ஸ்திதி.

இப்போதும் பகவான் சோதனையை நிறுத்தவில்லை. ஜலத்தையாவது குடித்துப் பிராணனை ரக்ஷித்துக் கொள்ளலாம் என்று இவன் பார்க்கிறபோது, மறுபடியும் ”சாமீ, தாஹம், தாஹம்!” என்று பிரலாபம் வந்தது.

”அந்தத் தண்ணீரையாவது ஊத்து சாமீ” என்று சொல்லிக் கொண்டு ஒரு பஞ்சமன் (புலையன்) வந்து நின்றான்.

அப்போது ரந்திதேவன் சொன்னதாக பாகவதத்தில் இரண்டு ஸ்லோகங்கள் வருகின்றன. இரண்டும் இரண்டு ரத்னங்கள். த்யாகத்துக்கு, பரோபகாரத்துக்கு இதைவிடப் பெரிய மந்திரமில்லை என்று சொல்லலாம். அதை அவன் சொன்ன வார்த்தையிலேயே சொல்கிறேன். அப்புறம் தமிழில் அர்த்தம் சொல்கிறேன்.

-தொடரும்...

40  ரந்தி தேவன் - 2
மஹாபெரியவா அருளுரை

ந காமயே (அ) ஹம் கதிம் ஈஸ்வராத் பராம்

அஷ்டர்த்தி யுக்தாம் அபுநர்பவம் வா

ஆர்த்திம் ப்ரபத்யே (அ) கில தேஹ பாஜாம்

அந்தஸ்திதோ யேன பவந்த்யது:கா: ||

ருத்தி என்றால் ஸித்தி என்றே அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அற்புத சக்திகளை (miracle -கள் செய்கிற சக்திகளை) எட்டு ஸித்திகள் அல்லது ருத்திகள் என்று சொல்வார்கள். இந்த ‘அஷ்ட ருத்தி’ தான் ‘அஷ்டர்த்தி’ என்று ஸ்லோகத்தில் வருகிறது. இவை இருந்துவிட்டால் ஸர்வ லோகத்தையும் ஆட்டிப்படைத்து ஆளலாம். ரந்திதேவன் என்ன சொல்கிறான் என்றால், “(பராம்–)உயர்ந்ததான இந்த‌ ஸித்திகளைப் பெறுகிற (கதிம்–) வழியைக் கூட நான் (ஈஸ்வராத்–) ஈஸ்வரனிடமிருந்து (ந காமயே–) இச்சிக்கவில்லை; ப்ரார்த்திக்கவில்லை. எனக்கு மகா சக்திகள் வேண்டுமென்றுகூடப் பிரார்த்தனை பண்ணவில்லை”. சரி, அப்படியானால் இந்த சக்தி எல்லாம் அடங்கி அப்படியே பரம சாந்தமாக ஆடாமல் அசையாமல் இருக்கிற ஸமாதி நிலையை, மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறானா? மறுபடியும் மறுபடியும் பிறவா நெறியான ‘அபுனர்பவம்’ என்ற முக்தியை விரும்புகிறானா?” அதுவும் எனக்கு வேண்டாம்; ந காமயே (அ) ஹம் அபுனர்பவம் வா”. பின்னே ஈஸ்வரனிடமிருனந்து எதைத்தான் இவன் இச்சித்துப் பிரார்த்திக்கிறானாம்?

புழுவாகவோ, பூச்சியாகவோ, பக்ஷியாகவோ, மிருகமாகவோ, மநிஷ்யனாகவோ சரீரம் என்று ஒன்றை வைத்துக்கொண்டு இத்தனை ஜீவராசிகள் இருக்கின்றவே, இந்த (அகில–) அனைத்து (தேஹ பாஜாம்–) சரீரம் படைத்த பிராணிகளுக்கும் ஏதாவது துன்பம் இருக்கிறதல்லவா? ‘ஆர்த்தி’ என்றால் துன்பம், துக்கம். அந்தத் துன்பத்தை ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கிற உள்ளம்தானே உணர்கிறது? உள்ளேயிருப்பதால் தான் அதற்கு உள்ளம் என்று பேர். ”அந்த:”– உள்ளே, ”ஸ்தித:”– இருப்பது அந்த உள்ளம்தான். ”எப்படியோ ஒரு தினுஸில் என்னால் மட்டும் அந்த உள்ளங்களுக்குள் இருக்க முடிந்துவிட்டால், ஜீவராசிகளின் துன்பம் எல்லாம் என்னிடம் வந்து சேர்ந்துவிடுமல்லவா? இப்படி ஸகல ஜீவர்களின் கஷ்டத்தையும் வாங்கிக் கொண்டு அநுபவிக்கிற சக்தியைத்தான், ஈஸ்வரா, உன்னிடம் நான் விரும்பிப் பிரார்த்திக்கிறேன். (யேன–) எதனால் பிராணிகள் (அது:கா:) துக்கமற்றவையாக (பவந்தி–) ஆகுமோ, அதைத்தான் உன்னிடம் வேண்டுகிறேன்”என்கிறான்.

துக்கம் என்பது பாப கர்மாவினால்தான் வருகிறது. ஒருத்தருடைய பாபத்தை இன்னொருத்தர் வாங்கிக் கொண்டு அநுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். ஜீஸஸ் இப்படித்தான் லோகம் பூராவின் பாபத்தையும் வாங்கிக்கொண்டு தீர்ப்பதற்கே சிலுவையில் அறைபட்டதாகச் சொல்வார்கள். அந்த உத்க்ருஷ்டமான தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதானதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். ”அகில தேஹ பாஜாம் ஆர்த்திம் ப்ரபத்யே — ஸகல உயிரினத்துடையவும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறேன்”என்று இதைத்தான் வேண்டினான்.

இதில் ‘ப்ரபத்யே’ என்று ஒரு வார்த்தை வருகிறது. அநேக ஸ்தோத்ரங்களில் – முக்யமாக ஸ்ரீவைஷ்ணவ க்ரதங்களில் – ”சரணம் ப்ரபத்யே, சரணம் ப்ரபத்யே” என்று வருவதைக் கேட்டிருப்பீர்கள். வேதத்திலேயே இருக்கப்பட்ட ஸ்ரீஸூக்தத்திலும் துர்கா ஸூக்தத்திலும் ”சரணம் ப்ரபத்யே”என்று வருகிறது. ‘ப்ரபத்யே’என்றால் ‘அடைக்கலம் புகுகிறேன்’, ‘சரணாகதி பண்ணுகிறேன்’என்று அர்த்தம். ஒன்றிடம் ஸர்வஸங்க பரித்யாகம் (total surrender) பண்ணிவிடுவதுதான் ப்ரபத்தி. அதாவது ‘ஸரண்டர்’ பண்ணுகிறவன் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்போது எதனிடம் இவன் ‘ஸரண்டர்’ பண்ணுகிறானோ, அது இவனை ஆட்கொண்டு, அப்படியே ரொப்பி விடும். இப்படியே பகவானிடம் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டு அவனாலேயே பூராவும் ரொப்பப்படுகிற நிலையைத்தான் பொதுவாக நாம் பார்க்கிற ஸ்தோத்ரங்கள், மந்தரங்கள் எல்லாவற்றிலும் ‘ப்ரபத்யே’, ‘ப்ரபத்யே’ என்று சொல்லியிருக்கிறது. மஹாலக்ஷ்மியை, துர்காதேவியை சரணடைகிறேன் என்று வேத ஸூக்தத்தில் வருகிற மாதிரி, மற்ற ஸ்தோத்ரங்களில் ”இந்த ஸ்வாமியை சரணடைகிறேன்,” ”அந்த ஸ்வாமியை சரணடைகிறேன்”, என்று ஒவ்வொரு ஸ்வாமி பெயரைச் சொல்லி வரும். உபநிஷத்தை சாந்தி பாடக்ரமத்தில் ஆரம்பிக்கும்போது, ”மோக்ஷத்தில் நாட்டமுடைய முமுக்ஷுவான நான் புத்தியைப் பிரகாசிக்கப் பண்ணும் பரமாத்மாவை அடைக்கலம் புகுகிறேன்” என்கிறபோதும் இந்த ”சரணம் ப்ரபத்யே” வருகிறது. ஆனால் ரந்திதேவன் என்ன சொன்னான்? ” ஆர்த்திம் ப்ரபத்யே” என்றான்!’ஆர்த்தி’என்றால் துன்பம், இன்னல், கஷ்டம். பரமாத்மா என்னை அப்படியே ஆட்கொள்ளட்டும் என்று சொல்லாமல், ”ஜீவலோகத்தின் ஸகல கஷ்டமும் என்னைப் பூராவாக ஆட்கொண்டு என்னிடமே வந்து சேரட்டும். நான் லோகத்தின் கஷ்டத்துக்கு சரணாகதி பண்ணுகிறேன்” என்று பரம த்யாக நிலையில் இருந்துகொண்டு சொல்கிறான்!

எல்லாரும் பொதுவாக என்ன வேண்டுவோம்? எல்லா இன்பமும் எனக்குக் கிடைக்கட்டும் என்றுதான். ரந்திதேவனோ ”எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்”என்றான். ”எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக்கொண்டு அநுபவிக்கிறேன். அதனால் அவற்றின் துக்கம் தீரட்டும்”என்றான்.

இன்னொரு ஸ்லோகம் சொன்னான்

-தொடரும்....

41 ரந்தி தேவன் :  3
மஹாபெரியவா அருளுரை


க்ஷூத்-த்ருட்-ச்ரமோ காத்ர பரிப்ரமச்ச

தைன்யம் க்லம:சோக விஷாத மோஹா: |

ஸர்வே நிவ்ருத்தா: க்ருபணஸ்ய ஜந்தோ:

ஜிஜீவிஷோ ஜீவ ஜலார்ப்பணாத் மே ||

பெரிய ச்ரௌதிக்ளுக்கு தானம் பண்ணுகிறபோது மந்த்ரம் சொல்லிக்கொண்டு தீர்த்தம் போடுகிற மாதிரி, அந்தப் பஞ்சமனுக்குத் தன்னிடம் எஞ்சியிருந்த தீர்த்தத்தையும் தத்தம் செய்துகொண்டு ரந்திதேவன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான். இதற்கு என்ன அர்த்தம்?” இதோ இந்த ஜலத்தைக்  கொடுக்கிறேனே, இது இந்தப் பஞ்சமன் ஒருத்தனுக்கு மட்டும் தாக சாந்தி, தாப சாந்தி பண்ணுவதா? இல்லை. ஸர்வபூத அந்தராத்மாவான நாராயணனாக இவனை நினைத்தல்லவோ இதை இவனுக்கு அர்ப்பணம் பண்ணுகிறேன்? அதனால் இந்த ஜலமே ஸகல உயிர்களுக்கும் தாக சாந்தியை, துக்க நிவ்ருத்தியைக் கொடுக்கட்டும்.”

(ஜீவ ஜிஜீவிஷோ-) உயிர்வாழ வேண்டுமென்று விரும்பும், (க்ருபணஸ்ய-) நிராதரவான (ஜந்தோ:-) ஸகல ப்ராணிகளும் (மே-) நான் கொடுக்கிற இந்த (ஜலார்ப்பணாத்-) தீர்த்த தானத்தால் (க்ஷூத்-) பசி (த்ருட்-) தாகம் இவற்றால் ஏற்படும் (ச்ரம:-) ச்ரமத்திலிருந்தும் (காத்ர பரிப்ரமச்ச-) வியாதி வக்கை மாதிரியான சரீரக் கஷ்டங்களிலிருந்தும் (தைன்யம்-) மனஸின் கஷ்டமான தீனநிலை, (க்லம:-) மனத்தளர்ச்சி, (சோக-விஷாத-மோஹா:-) துக்கம், கலக்கம் (dejection), மயக்கம் (ஸர்வே-) முதலிய எல்லாத் துன்பங்களிலிருந்தும் (நிவ்ருத்தா:-) நிவாரணம் பெறட்டும்.

ஒரே ஒருதனுக்குத் தருகிற கொஞ்சம் தீர்த்தம் இப்படி ஸர்வ ஜீவன்களின் கஷ்டத்தையும் போக்குமா என்றால்:

த்ரௌபதி அலம்பி வைத்திருந்த அக்ஷய பாத்திரத்தில் துளிப்போல ஒட்டிக் கொண்டிருந்த கீரையை க்ருஷ்ண பரமாத்மா சாப்பிட்டார்; உடனேயே துர்வாஸருக்கும் அவருடைய பதினாயிரம் சிஷ்யர்களுக்கும் பெரிய ஸமாராதனை சாப்பிட்ட மாதிரி வயிறு நிரம்பி விட்டது என்று படிக்கிறோமல்லவா? அந்த மாதிரிதான் இதுவும். ‘இவன் யாரோ ஒரு பஞ்சமன்’ என்று நினைக்காமல் பரமாத்ம ஸ்வரூபமாகவே அவனைப் புரிந்து கொண்டு அவனுக்குக் கொடுக்கிறபோது, அந்த பரமாத்மாவுக்குள்ளேயே அடங்கியிருக்கிற ஸகல ப்ரபஞ்சமும் அதனால் த்ருப்தியாகிறது. பாவம் நிஜமாக இருக்கவேண்டும். அதுதான் முக்யம்.

த்யாகத்தின் உச்சநிலையில் இருந்துகொண்டு இப்படி ரந்திதேவன் தன் ப்ராணனை ரக்ஷிப்பதற்கு அத்யாவச்யமாயிருந்த தீர்த்தத்தையும் புலையனுக்குக் கொடுத்தானோ இல்லையோ, உடனே முதலில் வந்த பிராம்மணன், அப்புறம் வந்த நாலாம் வர்ணத்தவன், அதற்குப் பின்னால் நாய்களோடு வந்த நாய்க்காரன், கடைசியில் வந்த பஞ்சமன் எல்லோரும் விஷ்ணு தூதர்களாக அவன் முன் தங்கள் நிஜ ரூபத்தைக் காட்டினார்கள்.*

”அவன் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு நாராயண த்யானத்தில் மூழ்கிவிட்டான். இந்த மாய வாழ்க்கை ஒரு கனா மாதிரி அவனிடமிருந்து மறைந்தே போய்விட்டது” என்று பாகவத்தில் இந்த புண்ய சரித்திரம் முடிகிறது.

சாதரணமாக நம் புராணங்களிலோ, மற்ற காவிய நாடகங்களிலோ கூட முக்கியமான பாத்திரம் (Hero) செத்துப் போனதாக முடியாது. ‘ட்ராஜெடி’ நம் ஸம்பிரதாயத்திலில்லை. மங்களமாக முடிய வேண்டும் என்று, லோக ரீதியிலே ஸந்தோஷமாக ஒரு கல்யாணம், ஒரு பட்டாபிஷேகம் என்றிப்படி முடிப்பதுதான் வழக்கம். ராமாயணம், மஹாபாரதம் இவற்றில் ஸ்ரீராமனும், பஞ்சபாண்டவர்களும் வைகுண்ட ஆரோஹணம், ஸ்வர்க ஆரோஹணம் பண்ணுவதாகவே வால்மீகியும், வியாஸாசாரியாளும் மூல க்ரந்தத்தில் முடிந்த்திருந்தும்கூட, இப்போதும் ஒரு ஹரிகதை, அல்லது உபந்யாஸம் என்று நடக்கிறபோது ஸ்ரீராம பட்டாபிஷேகம், தர்மராஜ பட்டாபிஷேகம் இவற்றோடு பூர்த்தி பண்ணி, அதற்கு மேற்பட்ட அந்திமக் கதையைச் சொல்லாமலே விட்டு விடுவதைத்தான் பார்க்கிறோம். த்ருவன், ப்ரஹ்லாதன் மாதிரியானவர்கள் பகவான் ப்ரத்யக்ஷமானதும் அவனோடேயே முக்தி அடைந்துவிட வேண்டும் என்று ப்ரார்த்தித்தாலும்கூட, பகவான்”அதெல்லாம் கூடாது”என்று சொல்லி, அவர்களுக்குப் பட்டாபிஷேகம் பண்ணினதாகத்தான் பாகவத புராணத்திலேயே சொல்லியிருக்கிறது. ஆனால் இந்த ரந்திதேவன் கதையில் மட்டும் விஷ்ணு தூதர்கள் வந்தார்கள் என்று சொன்னபின், ‘உடனே பஞ்சமெல்லாம் தீர்ந்துவிட்டது; ரந்திதேவனின் பசி, தாகம் எல்லாம் தீர்ந்து நெடுங்காலம் ராஜ்யபாரம் பண்ணினான்’ என்று சொல்லாமல், ”மாயையே ஒரு ஸொப்பனம் மாதிரி அவனைவிட்டு ஓடிப்போயிற்று”பரலோகம், பரமபதம் என்கிறார்களே, அதற்குப் போய் விட்டான் என்றுதான் அர்த்தம் ஏற்படுகிறது. அவனுடைய மஹா த்யாகம் நம் மனஸில் நன்றாக உறைப்பதற்காகவே இப்படி மங்கள முடிவை மாற்றிச் சொல்லியிருக்கிறாற் போல் தோன்றுகிறது.,

இந்த லோகத்தின் ஸந்தோஷம் எப்படியும் சாஸ்வதமில்லை. கல்யாணம், பட்டாபிஷேகம் எல்லாம் தாற்காலிக ஸந்தோஷம்தான். பகவானிடம் போய்ச் சேருவதுதான் நிரந்தரமான மங்களம். அப்படிப் பார்த்தால் ரந்திதேவன் கதைக்குத்தான் நிஜமான மங்கள முடிவு.

42  விசித்திரக் கீரிப்பிள்ளை : 
மஹாபெரியவா அருளுரை

தர்மபுத்ரர் அஸ்வமேத யாகத்துக்கு அங்கமாக ஏராளமான அன்னதானம் பண்ணினார். அந்த மாதிரி ஸகல ஜனங்களுக்கும் வயிறும் மனஸும் ரொம்பிப் போகிற முறையில் எவருமே அன்னதானம் பண்ணினதில்லை என்று எல்லோரும் ஏகமாகக் கொண்டாடினார்கள். வயிறு ரொம்பப் போட்டு விடலாம். அது பெரிசில்லை அதே ஸமயத்தில் மனஸும் ரொம்புகிற மாதிரி பரம அன்போடு போடுவதுதான் விசேஷம். ‘இது யாகத்தின் அங்கம். இதைப் பண்ணினால்தான் தனக்குப் பலன் கிடைக்கும்’ என்று காரியார்த்தமாக மட்டுமில்லாமல், கடனே என்று இராமல், நிஜமான பரிவோடு பாண்டவர்கள் இப்படிப் பெரிய அன்னதானம் செய்து லோகமெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது, இதனால் அவர்களுக்கு கர்வம் வந்துவிடக் கூடாதே என்று பகவான் பார்த்தார். கர்வம் வந்ததோ அத்தனை தர்மமும் அதிலே ”ஸ்வாஹா” ஆகிவிட வேண்டியதுதான்! அதனால் இந்த ஸமயத்தில் அவர்களைக் கொஞ்சம் மட்டம் தட்டினாலும் நல்லதுதான் என்று பகவான் நினைத்தார். வெறுமனே மட்டம் தட்டினால் மட்டும் போதாது; அதோடு ஸர்வ லோகத்துக்கும் தானத்தின் உத்க்ருஷ்டமான தத்வம் தெரியும்படியாகவும் பண்ண வேண்டும் என்றும் நினைத்தார். இந்த இரண்டு லக்ஷ்யங்களையும் பூர்த்தி பண்ணுகிற ஒரு ஸம்பவம் அப்போது பகவத் ஸங்கல்பத்தால் நடந்தது.


ஏகப்பட்ட ஜனங்கள் சேர்ந்து தர்மபுத்ரரை ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டிருந்த அந்த ஸந்தர்ப்பத்தில் அங்கே திடீரென்று ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை தோன்றிற்று. விசித்ரம் என்னவென்றால் அந்தக் கீரிப்பிள்ளையின் உடம்பில் சரியாக ஒரு பாதி மட்டும் பளபளவென்று தங்கம் மாதிரி பிரகாசித்தது.
அந்தக் கீரிப்பிள்ளை போஜனசாலையில் சிந்தியிருந்த அன்னாதிகளின்மேல் புரண்டுவிட்டு, மநுஷக் குரலில், ”இது என்ன பெரிய தானம்? இதென்ன பெரிய யாகம்? அந்தக் குருக்ஷேத்திரத்து உஞ்சவ்ருத்தி பிராம்மணர் பண்ணின தானத்துக்கு இது வீசம்கூடக் காணாது” என்று தூக்கி எறிந்து பேசிற்று.
பார்வைக்கே பாதித் தங்கமாக அது விசித்ரமாக இருந்தது என்றால், மநுஷக் குரலில் பேசினது அதைவிட விசித்ரம். பேசிய விஷயமோ எல்லாவற்றையும் விட விசித்ரமாக இருந்தது. லோகம் முழுவதையும் கட்டி ஆள்கிற ஸார்வபௌமரான தர்மபுத்ரர் செய்ததைவிடப் பெரிய தானத்தை உஞ்சவ்ருத்தி பிராம்மணன் எப்படிப் பண்ண முடியும்?

உஞ்சவ்ருத்தி என்றால் தற்காலத்தில் பிச்சை எடுப்பது, வீடு வீடாகப் போய்த் தான்ய பிக்ஷை வாங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி தெருத் தெருவாகப் போய் அக்ஷதை வாங்குவதை உஞ்சவ்ருத்தி பஜனை என்றுகூட பஜனை ஸம்ப்ரதாயத்தில் சொல்கிற ஒரு பழக்கம் வந்துவிட்டது. ஆனால் ஆதி காலத்தில், நம் தர்ம சாஸ்திரங்களின்படி பார்த்தால், உஞ்சவ்ருத்தி என்பதற்கு அர்த்தமே வேறே. சாஸ்த்ரப்படி, களத்திலே நெல்லடித்து, சொந்தக்காரன் அந்த தான்யத்தைக் கொண்டு போகிறபோது, அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல், கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிட வேண்டும். இதைத்தான் சோற்றுக்கு வேறு வழி இல்லாத பிராம்மணர்கள் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ‘உஞ்சம்’ என்றால் ‘சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது’ என்றே அர்த்தம்.

கீரிப்பிள்ளை உஞ்சவ்ருத்திப் பிராம்மணனை ஓஹோ என்று புகழ்ந்ததும் ஸபையில் கூடியிருந்தவர்கள் அதனிடம், ”நீ யார்? நீ சொல்கிற உஞ்சவ்ருத்தி பிராம்மணன் யார்? அவன் பண்ணின மஹா பெரிய தானம் என்ன?” என்று கேட்டார்கள்.
கீரிப்பிள்ளை கதை சொல்ல ஆரம்பித்தது. அந்தக் கீரி ரொம்ப வயஸானது. அதனால் எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்லிற்று.

அப்போது குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பெரிய பெரிய ப்ரபுக்களே அன்னத்துக்குப் பரிதவிக்கும்டியான ஸ்திதி ஏற்பட்டது. அப்போது உஞ்சவ்ருத்தி பிராம்மணன் நிலை எப்படி இருக்கும்? எப்போதோ எங்கேயோ பொறுக்கி வந்த கோதுமையில் தான் கொஞ்சம் குப்பையும் கூளமுமாக மட்கி, நாற்றமெடுத்துக் கை வசம் இருந்தது. அதை மாவாக அரைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய குடும்பத்திலே நாலு ஜீவன்கள். பிராம்மணன், அவனுடைய பத்னி, பிள்ளை, மாட்டுப்பெண் – இந்த நாலு பேருக்கு ஒரு வேளைக்குத்தான் இந்த மாவு போதும். ‘ஏதோ இந்த வேளையை இப்படித் தள்ளுவோம்; அடுத்த வேளை இதுவும் இல்லாமல் ப்ராணன் போக வேண்டியதுதான்’ என்று நினைத்து நாலு பேரும் வெறும் மாவை ஆளுக்கு ஒரு பிடி தின்னலாம் என்று உட்கார்ந்தார்கள்.

இந்த ஸமயம் பார்த்து ”தேஹி!” என்று சொல்லிக்கொண்டு ஒரு யாசகர் அங்கு வந்து சேர்ந்தார்.
‘கலத்திலே சோற்றை இட்டுக் கைப்பிடித்து இழுப்பது’ என்பார்களே, அந்த மாதிரியான ஸந்தர்ப்பம்.
அந்த ஸந்தர்ப்பத்திலுங்கூட அந்தக் குடும்பத்தில் ஒருத்தராவது விருந்தோம்பல் பண்பில் பின்வாங்கவில்லை. பிராம்மணன், அவனுடைய பத்னி, புத்திரன், மாட்டுப்பெண் ஆகிய நாலு பேருமே போட்டி போட்டுக்கொண்டு அதிதிக்குத் தங்கள் பங்கு மாவைக் கொடுக்க முன்வந்தார்கள்.

அதிதி ஸத்காரம் – அதாவது விருந்தோம்பல் – என்பது ஸமூஹ தர்மம், social duty . இதோடு குடும்ப தர்மம், domestic duty என்றும் ஒன்று இருக்கிறது. ஒரு குடும்பத்தில் இன்னின்னார் இன்னின்ன கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று நிர்ணயிக்கிற தர்மம் இது. நாலு பேருமாக ஸோஷல் ட்யூட்டியைப் பண்ண முன்வருகிறபோதே, தங்களுக்குள் டொமெஸ்டிக் ட்யூட்டியை எடுத்துக் காட்டிக் கொண்டார்கள். ”புருஷன் இல்லாமல் ஒரு பத்னி இருப்பாளா? உங்கள் பங்கைக் கொடுத்துவிட்டு நீங்கள் உயிர் விட நான் பார்ப்பேனா? அதனால் என் பங்கை நான் தருகிறேன்” என்று பத்னி பிடிவாதம் பிடித்தாள். பிள்ளையோ, ”ப்ரத்யக்ஷ தெய்வமான மாதா பிதாக்களுக்குப் பிராணாபத்து என்கிறபோது ஒரு புத்ரன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?” என்று அவர்களைத் தடுத்து, அதிதிக்குத் தன் பங்கைத் தரப்போனான். உஞ்சவ்ருத்தி பிராம்மணனிடம் அவனுடைய பத்னி எந்தப் பதிவிரதா தர்மத்தை எடுத்துச் சொன்னாளோ, அதையே மாட்டுப்பெண் பிள்ளையிடம் சொல்லி, ”நான்தான் என் பங்கைத் தருவேன்” என்று பிடிவாதம் பண்ணினாள்.

நாமாக இருந்தால் ஏதாவது ஒரு வஸ்து நமக்குக் கிடைக்கிறதென்றால் நான் முந்தி, நீ பிந்தி என்று போட்டி போடுவோம். கொடுக்கிறதென்றால் அவரவரும் பின் வாங்கத்தான் செய்வோம். இந்த ஏழை பிராம்மணக் குடும்பத்திலோ உயிரையே கொடுப்பதற்கு, பிராணத்யாகத்துக்குப் போட்டி போட்டார்கள். த்யாகம், தானம் எல்லாம் பணக்காரர்களால்தான் முடியும் என்றில்லை! பரம ஏழைகளாலும் முடியும். பெரிய ராஜாவான ரந்திதேவன் குடும்பத்தினர் செய்த அதே த்யாகத்தைத்தான் இப்போது பரம தரித்திரர்களான இவர்களும் செய்கிறார்கள்!

கடைசியில் பிராம்மணன் மற்றவர்களை அடக்கிவிட்டு, ”குடும்பத் தலைவன் என்று பேர் வைத்துக் கொண்டிருக்கிற என் கடமை உங்கள் மூவரையும் ரக்ஷிப்பது. மனஸறிந்து உங்களில் எவரையும் பட்டினி போட்டு மரணத்துக்கு ஆளாக்கினால் நான் ப்ரஷ்டனாகி விடுவேன்” என்று தீர்மானமாகச் சொல்லித் தன் பங்கு மாவை யாசகருக்கு அன்போடு தானம் செய்தான்.

அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பசி தீரவில்லை என்றார்.
உடனே பத்னி தன் பங்கை அவருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தாள்.
அதையும் சாப்பிட்டுவிட்டு, ‘இன்னமும் கொண்டா!’ என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி.
கொஞ்சம்கூடக் கோபமே இல்லாமல் பிள்ளையும் தன் பங்கு மாவை அவருக்குக் கொடுத்தான்.
அதையும் ஏப்பம் விட்டுவிட்டு, இன்னும் வந்தாலும் கொள்ளும் என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி.
கடைசியில் மாட்டுப்பெண்ணும் அவருக்கு மனஸாரத் தன் பங்கு மாவைக் கொடுத்தாள்.


அதிதி அதைச் சாப்பிட்டு முடித்தாரோ இல்லையோ, ஆளைக் காணவில்லை!


அந்த நாலு பேர் மேலே ஆகாசத்திலிருந்து புஷ்ப வ்ருஷ்டி பொழிந்தது.


”நான்தான் தர்மதேவதை. உங்களைப் பரிசோதிக்கவே யாசகப் பிராம்மணனாக வந்தேன். பரீக்ஷையில் நீங்கள் அற்புதமாக ஜயித்துவிட்டீர்கள். உயிரைக் கொடுத்தாவது விரும்தோம்பலை நடத்திக் காட்டுவதில் உங்கள் குடும்பத்தைப்போல் எங்குமே கண்டதில்லை. அவரவரும் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு ஸ்வர்கத்திலேயே இடம் ‘பிடி’த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான தேவலோகத்துக்கு வந்து சேர்வீர்களாக” என்று அசரீரி கூறிற்று.

(அசரீரி கேட்டதா, தர்மதேவதை நேரில் வந்ததா என்று ஸரியாக நினைவில்லை. தாத்பர்யம் இதுதான்.)

உடனே தேவர்கள் அங்கே அலங்கார விமானத்தோடு வந்தார்கள். உஞ்சவ்ருத்தி பிராம்மணக் குடும்பத்தினர் அதிலே ஏறிக்கொண்டு ஸ்வர்கத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

ஸ்வர்கத்துக்குப் போனார்கள் என்றால் இந்த லோகத்தில் ப்ராணனை விட்டார்கள் என்று அர்த்தம். குசேலர் மாதிரி இந்த லோகத்திலேயே அவர்களுக்கு ஸகல ஸம்பத்தும் வந்ததாகச் சொல்லவில்லை. இவர்கள் ஸ்வர்கவாஸம் கிட்டும் என்று அபேக்ஷித்து தானம் செய்யவில்லை. விருந்தோம்பல் பண்புக்காகவே உயிரைவிட்டார்கள். தானாக ஸ்வர்க்கம் ஸித்தித்தது.

இந்தக் கதையைச் சொன்ன கீரிப்பிள்ளை, ”அந்த மையத்தில் நான் குருக்ஷேத்திரத்தில் அந்த வீட்டில்தான் இருந்தேன். அவர்கள் தானம் கொடுத்த மாவு ஏதோ துளித் துளி கீழே சிந்தியிருந்தது. நான் அந்த இடத்துக்கு மேலாக ஓடுகிறபோது என் சரீரத்தின் இந்தப் பக்கத்தில் அந்த மாவு பட்டதனால்தான் இந்தப் பக்கமே ஸ்வர்ண வர்ணமாகி விட்டது”….

இப்போது கூட ரொம்ப நல்லவர்களைத் ‘தங்கமான மனஸு’ என்றுதான் சொல்கிறோம். இங்கிலீஷில்கூட ‘Golden hearted’ என்கிறார்கள் அல்லவா? தங்க மனஸு படைத்த த்யாகக் குடும்பம் செய்த தானத்தில் இது ஸ்தூலமாகவே நிஜமாயிருக்கிறது!

”அதற்கப்புறம், இப்படி ஒரு பக்கம் மட்டும் தங்கமாக இருக்கிறதே, இதே மாதிரி வேறெங்காவது பரம உத்க்ருஷ்டமான தானம் நடக்கிற இடத்தில் சிந்திப்போனது இன்னொரு பக்கத்தில் பட்டால் அதுவும் தங்கமாகி, முழுக்கத் தங்கமாகலாமே என்கிற ஆசையில் நானும் பெரிய பெரிய ஸந்தர்ப்பணைகள், அன்னசாலைகள், தர்மசத்திரங்களுக்கெல்லாம் போனபடிதான் இருக்கிறேன். ஆனால் என் மறுபாதி தங்கமாக மாறவேயில்லை. தர்ம புத்ரர் மஹா பெரிய யாகம் பண்ணி, அன்னதானம் செய்கிறாரே இங்கே சிந்திப் போனதிலாவது என் சரீரத்தின் பாக்கி பாதி தங்கமாகுமாக்கும் என்றுதான் இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். இங்கேயும் பலனைக் காணோம்!”என்று கீரிப்பிள்ளை முடித்தது.

43  புறாவின் த்யாகம் 
மஹாபெரியவா அருளுரை

”என்பும் உரியர் பிறர்க்கு” என்று குறள் சொன்ன மாதிரி, தங்களுடைய ஸர்வத்தையும் பரோபகாரமாக த்யாகம் பண்ணவேண்டும். சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, ப்ராணனையே த்யாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்யமான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும். வேத பூமியான இந்த பாரத பூமியின் விசேஷம் மநுஷ்யனுக்காக மட்டுமில்லாமல் மற்ற ஜீவராசிகளுக்கும், பூச்சி பொட்டுகளுக்குங்கூட க்ஷேமத்தைக் கோரி த்யாகம் பண்ணச் சொல்வது. இதில் இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்குங்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், த்யாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம். புறாவுக்காக த்யாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம த்யாகத்தைக் ‘கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. ‘கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். ‘உபாக்யானம்’ என்றால் சின்னக்கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனஸை ரொம்பவும் உருக்குவது.

வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும் அதன் ஜோடியான ஆண் புறாவும் வஸித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது நல்ல இருட்டாகி விட்டது. ஒரே குளிர் வேறு. வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.

இதைப் பார்த்த மரத்தின் மேலிருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்னியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர் மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பக்ஷியிடம் திரண்டு வந்துவிட்டது. நாம் வஸிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி ‘அதிதி தேவோ பவ’- விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேத ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்’ என்று நினைத்தது.

முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்ட வேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் ஸரி, அவனுக்கு ஸெளகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.

‘சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு. ‘சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறார்கள். ‘சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். ‘சிகை’ உள்ளதெல்லாம் ‘சிகி’ தான். சிகையை விரித்துக் கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது? ‘முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் ‘சிகிமுகி’.
இப்படிப்பட்ட சிகிமுகிக் கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது.

வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்ற வைத்துக் குளிர் காய்ந்தான்.

தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும் வேடனுடைய க்ரூர ஸ்வபாவம்கூட மாறி மனஸ் இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டு விட்டான்.

‘விருந்தோம்பல் என்றால் முக்யமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்து விட்டுப் பட்டினி கிடந்தால் அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’என்று பெண் புறா நினைத்தது.

அவனுடைய ஆஹாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆஹாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம ஸந்தோஷத்தோடு, அந்த அக்னியில் தானே விழுந்து ப்ராணத்தாயகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புஜிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பக்ஷியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது.

” என்பும் உரியர் பிறர்க்கு ” என்ற மாதிரி இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபகரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரதங்களிலெல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.


44  பிள்ளையார்
மஹா பெரியவா அருளுரை    

பயமாக, கஷ்டமாக இருப்பவைகளை எளிதாக ஆக்கித் தருவதற்குத்தான் நமக்குப் பிள்ளையார் இருக்கவே இருக்கிறார். எங்கே பார்த்தாலும் படர்ந்து கிடக்கும் அருகம்புல்லைப் பிய்த்து அவர்மேலே போட்டுவிட்டால் போதும். அதிலேயே த்ருப்தியாகி விடுவார். மநுஷ்யர்கள் எவரும் வைத்துக் கொள்ளாத பூ, அதனால் கடையில் விலைக்கு வராத பூ, செடியிலே யதேஷ்டமாகப் பூத்துக் கிடக்கிற அந்த எருக்கம்பூவில் நாலு, கைக்காசுக்குச் செலவில்லாமல் பறித்து வந்து பிள்ளையார் பாதத்தில் போட்டுவிட்டால் அப்படியே பரம ஸந்தோஷம் அடைந்து விடுவார். ஏதோ பிரப்பம் பழமோ, கொய்யாப் பழமோ, பரம ஏழைக்குக்கூட கிடைக்கக் கூடியது, அதைக் கண்ணில் காட்டினால் குளிர்ந்து போய்விடுவார். இன்னும் கொஞ்சம் நமக்கு வசதி இருந்தால் ஒரு தேங்காய் அர்ப்பணம் பண்ணலாம். அதைக்கூட மந்த்ரம், கிந்த்ரம் சொல்லி நைவேத்யமென்று பண்ண வேண்டுமென்பதில்லை. “சிதறு காய்” என்று அவருக்கு முன்னால் போட்டு உடைத்தாலே போதும். அந்தத் துண்டத்தை நாலு ஏழை குழந்தைகள் பொறுக்கித் தின்றுவிட்டால் அந்தக் குழந்தைகளின் ஸந்தோஷத்திலேயே ஸாக்ஷாத் ஈசனின் மூத்த குழந்தையும் பரமானந்தம் அடைந்துவிடும்.

இதை விடவும் சௌகர்யம் இருந்தால் இந்தக் குழந்தைக்குச் சாக்லேட்டுக்குப் பதில் மோதகம் நிவேதனம் செய்யலாம். இதையும் அவர் கண்ணில் காட்டிவிட்டு, மற்ற குழந்தைகளுக்குத் தந்து நாமும் சாப்பிட்டே அவரை ஸந்தோஷப்படுத்திவிடலாம். ‘மோதகம்’ என்றால் ஆனந்தம் என்று அர்த்தம். பொங்கும் ஆனந்தமே உருவான ஆனைக்குட்டியாக அவர் இருப்பதால் அவரைப் புதிதாக நாம் ஸந்தோஷப்படுத்துவது என்பது கூட இல்லை. அவரிடம் போய் நின்று விட்டாலே போதும், ப்ரீதியடைந்து விடுவார். நாமும் அவர் ப்ரீதியை ஸம்பாதித்துக் கொண்டு விடலாம். தத் த்வாரா (அதன் வழியே) ஈஸ்வரன் அம்பாள் ஆகியோரின் ப்ரீதியையும் பெற்றுவிடலாம்.

அவரிடம் போய் நிற்பதிலும் கஷ்டமில்லை. அவர் கோயிலுக்கு என்று நாம் ச்ரமப்பட்டுக்கொண்டு, எங்கேயோ அலைந்து திரிந்துகொண்டு போகணும் என்பதே இல்லை. எந்த சந்து பொந்துப் பக்கமாக, ஆற்றங்கரை குளத்தங்கரைப் பக்கமாக, அரசமரப் பக்கமாக நாம் போனாலும் அரை மைலுக்குள் நாலு பிள்ளையார் கோவிலாவது கண்ணில் பட்டுவிடும், கொடிக்கம்பத்துக்கு அந்தண்டை நமஸ்காரம்; கர்ப்ப க்ருஹத்துக்குள்ளே போகப் படாது; நந்திக்குக் குறுக்காலே போகப்படாது – இந்த மாதிரிக் கட்டுப்பாட்டுக்கெல்லாம் இடமில்லை. அவர் இருக்கிறதே ஒரே உள்தான். அல்லது அதுகூட இல்லாமல், ஆகாசம் பார்க்க அவர் பாட்டுக்குக் காற்றாட மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். தீண்டாதாரா, இதர மதஸ்தர்களா-பார்க்கலாமா, கூடாதா என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லாமல் ஸகல ஜனங்களின் கண்ணிலும் படும்படி உட்கார்ந்திருப்பார்.